என்னை விட்டால் இந்த ஊரில் உயர்ந்த பக்தன் யாரு! தூக்கத்தில் கூட கிருஷ்ணா, ராமா என்று தானே கத்துகிறேன், என்ற ஆணவம் சிலரிடம் இருந்தது. அவர்கள் தான் நாரதர், பிரகலாதன், திரவுபதி, அர்ஜுனன் ஆகியோர் இந்த நான்கு பேருக்குமே பாடம் புகட்ட கிருஷ்ணர் எண்ணினார். அர்ஜுனனை தேரில் ஏற்றிக் கொண்டு, காட்டுவழியே போய்க் கொண்டிருந்தார். வழியில், ஒரு மகரிஷி கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார்.
கண்ணா! கமண்டலம் ஏந்த வேண்டிய இந்த மகான் ஏன் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறார். உனக்கு ஏதாச்சும் தெரியுமா?எனக்கென்ன தெரியும்! நானும் உன்னோடு தானே வருகிறேன். இப்போது அது தெரிந்து நமக்கென்ன ஆகப்போகிறது. போவோம் நம் வேலையைப் பார்த்துக்கொண்டு.. என அதில் அக்கறையே இல்லாதவர் போல் நடித்தார் அந்த மாயவன்.
அர்ஜுனன் அடம் பிடிக்கவே, தேரை நிறுத்தி விட்டு அவர் அருகே சென்று வணங்கினார்கள்.மகரிஷி! சாந்தமூர்த்தியான தாங்கள் தாங்கள் கத்தியைத் தீட்டும் நோக்கமென்ன! என்றனர்.அதுவா! நாரதன்னு ஒருத்தன் இருக்கிறானே! அவன் என் சுவாமி தூங்கும் நேரம் கூட பார்க்காமல், அவன் இஷ்டத்துக்கு வைகுண்டத்துக்குப் போய் நராõயணா நாராயணா என்று கத்தி தூக்கத்துக்கு இடைஞ்சல் செய்கிறான். அவனை குத்தப் போகிறேன், என்றவரிடம், ஓஹோ! என்ற கண்ணன் கிளம்பத் தயாரானார். அவரை மகரிஷி நிறுத்தினார். இன்னும் கேள்! பிரகலாதன்னு ஒரு பொடியன். எங்க சாமி எங்கேயும் இருக்கிறார்னு சொல்லி, எல்லா இடத்திலும் அவரை நிற்க வைத்து பதறடித்தான். ஒரு தூணுக்குள் இருப்பதாகச் சொல்லி அவரை மூச்சு விட முடியாமல் செய்தான். இப்படி அவரைத் துன்பப்படுத்திய அவனுக்கும், இந்தக் கத்தி பதில் சொல்லப்போகிறது, என்றவரிடம்
கிளம்பட்டுமா!என்றார்கண்ணன்.
இன்னும் கேளுங்க! என்று அவர்களை நிறுத்திய மகரிஷி, திரவுபதின்னு ஒருத்தி. அவளது சேலையை துச்சாதனன் பறித்தான். ஒன்றுக்கு அஞ்சு புருஷன் உள்ள அவள் புருஷன்மாரை கூப்பிட வேண்டியது தானே! கண்ணனைக் கூப்பிட்டாள். அவன் கை வலிக்க புடவை தந்தான். அவளும் என் கையில் சிக்கினால்..., என்று பற்களைக் கடித்த அவரை சாந்தம் செய்ய முயன்றான்கண்ணன்.இன்னும் கேளுங்கப்பா! என்றவர், இன்னும் ஒருத்தன் இருக்கிறானே, என்றார்.அட...சீக்கிரம் சொல்லுங்க சாமி! உங்க பட்டியல் நீண்டுகிட்டே போகுது. எங்க வேலையைப் பார்க்க போகணும், என்ற கண்ணனிடம், அர்ஜுனன்னு ஒரு பயல் இருக்கிறானாம். அவனை இதுவரை நான் பார்த்ததில்லை. அவன் என் பரமாத்மாவையே தேர் ஓட்ட வைத்திருக்கிறான். உலகத்துக்கே எஜமான், அந்தச சிறுவனுக்கு வேலைக்காரனாக இருக்கிறார். கண்ணனையே வேலைக்காரனாக்கியவனுக்கு காத்திருக்கிறது கத்திக்குத்து, என்று முடித்தார். பார்த்தாயா அர்ஜுனா! நீ மட்டுமே என்னிடம் பக்தி கொண்டதாக எண்ணாதே! இவரைப் போன்ற ஆயிரம் பக்திமான்கள் உலகில் இருக்கிறார்கள். அவர்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு எல்லையே கிடையாது, என்றார் கண்ணன். அர்ஜுனன் தன் அறியாமையை எண்ணி தலை குனிந்தான்.