ஸ்ரீனிவாசப் பெருமாள் உறையும் திருமலைக்கு வேங்கடாசலம் என்ற பெயரும் உள்ளது அனைவருக்கும் தெரியும். அந்தப் பெயர் அமைவதற்கு ஒரு புராணக்கதை உண்டு.
ஆந்திர மாநிலத்தில், சிவபெருமான் கோயில் கொண்டுள்ள ஸ்ரீசைலத்தின் மேற்குப் பகுதியில் நந்தனபுரம் என்ற நகரம் இருந்தது. அந்த நகரத்தை நந்தன் என்ற அரசன் சிறப்பாக ஆண்டு வந்தான். அந்த நான்கு வேதங்களும் கற்றறிந்த புரந்தரன் என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். அவருக்கு குழந்தைப்பேறு கிட்டாததால், பல தவங்களும் யாகங்களும் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தவமிருந்து பிறந்ததால் அவனுக்கு மாதவன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். மாதவன் தந்தையைப் போலவே நான்கு வேதங்களையும் கற்றதுடன், சகல சாஸ்திரங்களையும் கற்று சிறந்த அறிஞனாக விளங்கினான். அதனால் பிரம்மதேஜஸ் (ஒளிபொருந்திய உடலழகு) அவனை வந்தடைந்தது. திருமண வயது வந்தவுடன் சந்திரரேகை என்ற பெண்ணை மாதவனுக்கு மணம் முடித்து வைத்தார் தந்தை புரந்தரன். அவன் தன் அழகிய மனைவியுடன் பல இடங்களுக்கும் சென்று இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்தான். இல்லற இன்பத்தை அனுபவித்து மகிழ்ந்தனர் மாதவனும் சந்திரரேகையும்.
ஒருநாள், ஒரு தாமரைத் தடாகத்தின் கரையில் இருவரும் களித்து இன்புற்றிருந்தனர். அப்போது அங்கு விதியின் காரணமாக, ஒரு புலைப்பெண் நிர்வாணமாக வந்து நின்றாள். அவளைக் கண்ட மாதவன் அவள்மீது மையல் கொண்டான். பக்கத்தில் தன் மனைவி இருப்பதையும் மறந்து அந்தப் புலைப் பெண்ணோடு கூடிக்குலாவினான். காமத்தால் மதிமயங்கியிருந்த மாதவனை தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று, அவனுக்கு மது, மாமிசம் தந்து மூர்க்கனாகவும் முரடனாகவும் மாற்றிவிட்டாள் அந்தப் பெண். மதியிழந்த மாதவன் அவளுடைய அன்பைப் பெறுவதற்காகவும், அவளோடு இன்பம் துய்ப்பதற்காகவும், அவளைத் திருப்திப்படுத்துவதற்காகவும் தனி வழியே செல்லும் மக்களைத் தாக்கி, அவர்களிடமிருந்து பொன்னையும் பொருளையும் வழிப்பறி செய்து, அவற்றை புலைப்பெண்ணுக்குக் கொடுத்து வாழ்ந்து வந்தான். நாளாக நாளாக மாதவனுக்கு பல நோய்கள் வர ஆரம்பித்தன. இறுதியில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அந்தப் பெண்ணுக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டுவந்து கொடுக்க அவனால் முடியவில்லை. பயனற்ற அவனை தனியாக விட்டுவிட்டு அவள் வெளியேறி விட்டாள்.
அவள் அவனை விட்டுச் சென்றதாலும். கொடிய பாவங்களைச் செய்ததாலும் மாதவன் மேலும் பித்தனாகி, பல இடங்களில் அலைந்து திரிந்து, இறுதியில் சேஷகிரியின் பக்கம் வந்து சேர்ந்தான். அனந்தன் வடிவாகிய சேஷகிரியின்மீது அவனையறியாமல் நடக்கத் தொடங்கினான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அக்னி தேவன் ஓடிவந்து அவன் கால்களில் பற்றியிருந்த பாவங்களைப் பற்றி எரியச் செய்தான். அதனால் சுயநினைவைப் பெற்றான் மாதவன். சிறந்த வேத விற்பன்னனான மாதவனுக்கு பழைய நினைவுகள் திரும்ப வந்தன. தன் நிலை உணர்ந்தான். சேஷகிரி வாசனை தலைநிமிர்ந்து பார்த்து பக்தியுடன் பாடித் துதித்தான். அவனது நோய்கள் அனைத்தும் நீங்கி, புடமிட்ட பொன்போல் பழைய பிரம்மதேஜஸ் பெற்றான். இக்காட்சிகளை வானிலிருந்து பார்த்து அதிசயித்த தேவர்கள், கீழே இறங்கி வந்து மாதவனின் வரலாற்றைக் கேட்டனர். அவன் தன் பிறப்பு முதல் நடந்தவற்றையெல்லாம் கூறினான்.
மாதவன் என்ற மறையவன் இம்மலையின் மீது கால் வைத்த மாத்திரத்திலேயே அவனது பாவங்கள் தொலைந்ததைக் கண்ட வானவர்களும் முனிவர்களும் இம்மலைக்கு வேங்கடாசலம் என்று பெயர் வைத்தனர். வே என்ற எழுத்து, தொகுதியாகிய (மொத்த) பாவத்தைக் குறிக்கும். கட என்ற இரண்டாம் பதம் கொளுத்தப்படும். (போக்கும்) என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். அசலம் என்றால் மலை. அதாவது அனைத்துப் பாவங்களையும் சாம்பலாக்கும் மலை என்று பொருள். பிரம்மதேஜஸ் பெற்ற மாதவன் அம்மலை மீது அமர்ந்து இந்திரியங்களை அடக்கி பல காலம் கடுந்தவம் செய்து, திருமகள் கொழுநன் (ஸ்ரீனிவாசன்) அருள்பெற்று பரமபதம் சேர்ந்தான். இக்கதையை நாரதர் பிருகு முனிவருக்குக் கூறியதாகவும்; அதை சூத முனிவர் மற்ற முனிவர்களுக்குக் கூறினார் என்றும் வராக புராணம் கூறுகிறது. வேங்கடாசலபதியை வணங்குவோம்; வேண்டியதைப் பெறுவோம்.