நமக்கு தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன், மகள் என்று எத்தனையோ உறவுகள்.. எந்த வீட்டிலாவது, யாராவது யாரையாவது பிரியாமல் இருக்கிறார்களா! நன்றாக வாழ்ந்து முடிந்த ஒருவர், இறைவனை அடைந்தாலே நமக்கு இதயம் வலிக்கிறது. இளவயதில், ஒருவரைப் பிரிய நேர்ந்தால் அப்பப்பா...அந்த சோகத்துக்கு மருந்தே இல்லை. இப்படி ஒரு நிலைமை, ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டது. அவளது மகன் இறந்து விட்டான். அவளால் தாங்க முடியவில்லை. எவ்வளவு கண்ணீர் சிந்தினாலும் இதயத்தின் கனம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அன்னை சாரதாவிடம் அவள் ஓடினாள். அம்மா! என் மகன் போய்விட்டான், தங்களை வணங்கும் எனக்கு இந்தக் கதியா...? அவள் கதறினாள். அதைப் பொறுக்காத அன்னை, அந்தப் பெண்ணின் குரலை விட பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார்.
ஐயோ...ஆன்மிகம் அழுகிறதா! இதென்ன புதுமை! வாஸாம்ஸி ஜீர்ணானியதா விஹாய ( பழைய உடைகளைக் களைந்து விட்டு, புதிய உடைகளை மனிதன் அணிவது போல, ஆன்மா பழைய உடல்களை விட்டு பிரிந்து புதிய உடல்களை அடைகிறது) என்று கீதோபதேசம் செய்பவர் அழுகிறாரா? அங்கிருந்தோர் வியப்பில் ஆழ்ந்தனர். அன்னை அழுவதைப் பார்த்து, அந்தப் பெண்ணால் பொறுக்க முடியவில்லை. அது தன் மகன் இறந்த கஷ்டத்தை விட, அதிக கஷ்டம் தந்தது. அம்மா! வாழ்வில் கஷ்டம் வரும் போகும், என் மகன் இறந்த துக்கத்தைக் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால், நீங்கள் அழுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது, என்றாள். அன்னை அவளுக்கு பிரசாதம் அளித்து அனுப்பி வைத்தார். அவரது ஸ்டேஷன் வந்து விட்டது, இறங்கிவிட்டார். எனது ஸ்டேஷன் வந்ததும் நானும் இறங்கியாக வேண்டும், என்று மனைவியை இழந்த சமயத்தில் குறிப்பிட்டார் வாரியார் சுவாமி. நிஜம் தானே!