Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அமைதி இதற்குள் இருக்கிறது!
 
பக்தி கதைகள்
அமைதி இதற்குள் இருக்கிறது!

சிவகிருஷ்ணனுக்கு எல்லா வசதியும் இருந்தது. ஆனாலும், இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை அவனை அலைக்கழிப்புக்கு உள்ளாக்கியது. மனஅமைதி பாதித்தது. மனஅமைதி பாதித்த பிறகு தான் மனிதனுக்கு தெய்வம், சாதுக்களின் நினைப்பு வரும். அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். அவரை நாடிச்சென்றான். ஐயா! என்னிடம் செல்வவளம் ஏராளமாக இருக்கிறது. இருப்பினும், அது போதாது என்பதால் இன்னும் சேர்க்கிறேன். நான் அனுபவிக்காத வசதிகள் இல்லை. இருப்பினும் ஆசை விடவில்லை. என்னிலும் வசதியானவர்கள் அனுபவிப்பதைப் பார்க்கும்போது, அவர்களையெல்லாம் விட உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். அதற்கான முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டால் கோபம் கொப்பளிக்கிறது. அதை என் மனைவி, குழந்தை, வேலைக்காரர்கள் மீதும் காட்டி விடுகிறேன். உங்களிடம் எதுவுமே இல்லை. ஆனால், உங்கள் முகம் பிரகாசமாக இருக்கிறது. நிம்மதியாக இருக்கிறீர்கள். இது எப்படி ஐயா சாத்தியம்! உங்களைப் போல எனக்கும் அமைதி கிடைக்க வழி சொல்லுங்களேன், என்றான்.

துறவி அவனை  அமைதியாகப் பார்த்தார். மகனே! இன்னும் ஏழே நாள் தான் இந்த துன்பமெல்லாம்! அதன்பிறகு உனக்கு நிரந்தர அமைதி கிடைக்கும், நான் சொல்வது புரிகிறதா! என்றார். அவன் புரிந்தும் புரியாமலும் அவரைப் பார்க்கவே,சிவகிருஷ்ணா! அடுத்தவாரம் நீ இறந்து விடுவாய். அதன்பின் உனக்கு நிரந்தர அமைதி தானே! என்றார். என்னடா இது! ஏதோ, மன அமைதிக்காக குறி கேட்க வந்த இடத்தில், சாமியார் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு விட்டாரே! என விதியை நொந்தவனாய் வீட்டுக்கு திரும்பினான்.  மனைவியிடம், என் அன்பே! என் ஆயுள் அடுத்த வாரம் முடிகிறது. உன்னிடம் நான் பலமுறை கோபித்திருக்கிறேன். அதற்காக என்னை மன்னித்துக் கொள், என்றான். பிள்ளைகளை தன் மடியில் படுக்க வைத்து, அவர்களிடம் தேவையில்லாமல் கோபித்ததற்காக வருந்தினான். வேலைக்காரர்களை அழைத்து, உங்கள் மூலம் நான் அதிக லாபம் பெற்றாலும், நீங்கள் சம்பள உயர்வு, கடனுதவி கேட்கும் போதெல்லாம் எரிந்து விழுந்திருக்கிறேன். அதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். இன்று நீங்கள் கேட்ட தொகையை கணக்குப்பிள்ளையிடம் போய் பெற்றுக் கொள்ளுங்கள், என்றான்.

தன் உறவுக்காரர்கள், நண்பர்கள் பகைவர்களாக இருந்தாலும் அவர்கள் இல்லங்களுக்குச் சென்று, நடந்த செயலுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டான். இப்படியே ஆறுநாட்கள் ஓடிப்போய் விட்டது. மறுநாள் விடிந்ததும், ரொம்பவே ஆடிப்போயிருந்தான். அவனைச் சுற்றி உறவினர்கள் ஆறுதல் சொல்லியபடியே இருந்தனர். அந்நேரத்தில், அந்த துறவி அந்தப் பக்கமாக வந்தார். அவர் காலில் விழுந்த சிவகிருஷ்ணன்,சுவாமி! என் மரணமாவது அமைதியாக இருக்குமா?  என்றான். துறவி அவனிடம்சிவகிருஷ்ணா! மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை தான், மனித மனத்தை அமைதியின்மைக்குள் தள்ளுகிறது. அதே நேரம், மரணத்தை நினைப்பவன் வேறு எந்த சிந்தனையுமில்லாமல் அந்த நினைவில் மட்டுமே ஒருமித்துப் போகிறான். மேலும், மரணத்துக்கு முன்பாவது ஏதாவது நன்மை செய்வோமே என, நற்செயல்களைச் செய்கிறான். ஒருவன் இல்லறத்தில் இருந்தாலும், துறவியாய் இருந்தாலும் மரணத்தைப் பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்திப்பவனுக்கு நியாயமான தேவைகளைத் தவிர, வேறு ஆசை தோன்றுவதில்லை. ஆசையின்மையே மனஅமைதியைத் தரும். உன் மரணநாள் எனக்கு தெரியாது. உன்னைத் திருத்தவே உனக்கு மரணம் வரப்போவதாகச் சொன்னேன், என்றார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar