பேசுவதை உச்சரிப்பு பிறழாமல் கேட்க வேண்டும். தவறாகக் கேட்டு விட்டு ஒழுங்கான பதிலை எதிர்பார்த்தால் அதெப்படி கிடைக்கும்? பதஞ்சலி முனிவரை உங்களுக்கு தெரிந்திருக்கும். இவர் ஆதிசேஷனின் அம்சம். பாற்கடலில் பெருமாளைச் சுமந்த இவர், ஒருமுறை பெருமாளின் பாரம் தாங்காமல் கஷ்டப்பட்டார். பெருமாளே! திடீரென ஏன் பாரம் கூடியது? சிவனின் நடனம் கண்டேன், என்னமாய் ஆடுகிறார், உடலே பூரித்து விட்டது. அதனால் எடை கூடிவிட்டது,. அப்படியா! அப்படி ஒரு ஒப்பற்ற நடனத்தை நானும் பார்க்க வேண்டுமே! சரி, தில்லைக்கு போ, பார்க்கலாம்,. இப்படியாக பூலோகம் வந்தவர் பதஞ்சலி. மனித முகம், பாம்பு உடல். இவர் இலக்கணத்தில் வல்லவர். இவரைப் போலவே, பாணினி என்பவரும் இலக்கண வித்தகர். ஒருமுறை, பாணினி குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். பதஞ்சலி முகத்தை தண்ணீரின் மேல் வைத்தபடி பாம்பு உடலுடன் மிதந்து வந்தார்.
அந்த விசித்திரப்பிறவியைப் பார்த்துகோர்பவா? என்றார். அந்தச் சொல்லில் இலக்கணப் பிழை இருந்தது. அதனால், பதஞ்சலி சற்று கோபத்துடன், ஸபோஹம் என்றார். பதிலிலும் இலக்கணப்பிழை இருந்ததால், பாணினி முகத்தை சற்று கடுமையாக்கிக் கொண்டு, ரேதா: குத்ர கதா: என்றார். இதன் பொருளைப் பார்க்கலாம். கோர் பவா என்றால் நீங்கள் யார்? என்று பொருள். அதற்கு கோ பவா என்பது தான் சரியான உச்சரிப்பு. ஸபோஹம் என்றால் பாம்பு. அதற்கு ஸர்ப்போஹம் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ரேதா குத்ர கதா என்றால், ஒரு எழுத்தை விட்டு விட்டு ஏன் பதில் சொன்னீர் என்பதாகும். பாணினி ர் என்ற எழுத்தை விட்டுக் கேட்டதால், பதஞ்சலியும் எரிச்சலில் ர் என்பதை எடுத்துவிட்டு பதில் சொன்னார். இருவருமே இலக்கணப் புலிகள் தான். ஆனாலும், உச்சரிப்பால் பிரச்னை வந்தது. உச்சரிப்பு சரியாக இருந்தால் தான் பேச்சு எடுபடும்.. புரிகிறதா!