Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஓர் அரக்கி பெற்ற ஞானம்!
 
பக்தி கதைகள்
ஓர் அரக்கி பெற்ற ஞானம்!

வேதாந்தத்தின் மிக உயர்ந்த, மிகப் பழமையான படைப்பு வசிஷ்ட மகா ராமாயணம் அல்லது யோக வாசிஷ்டம் என்ற சமஸ்கிருத நூல். வசிஷ்ட மாமுனிவர் தமது சீடனான ஸ்ரீராமனுக்குப் போதித்த அழகிய கதைகள் நிறைந்த, வேதாந்தத் தத்துவங்கள் அடங்கிய இலக்கியம் இது. வால்மீகியின் நடையிலேயே இது அமைந்துள்ளது. இரு நிலையற்ற, ஒன்றேயான, சச்சிதானந்தமாகிய பரப்பிரம்மனை அடையும் பல்வேறு வழிகளை - ஆறு பிரிவுகளாக (பிரகரணங்களாக) இது விவரிக்கிறது. அவை: 1. வைராக்கிய வழி (பற்றற்ற நிலை), 2. முமுக்ஷúத்வம் (விடுதலைக்கு ஏங்குதல்), 3. உற்பத்தி (தோற்றம்), 4. ஸ்திதி (இருப்பு), 5. உபசாந்தி (பிரளய கால அழிவு), 6. நிர்வாணம் (விடுதலை). வசிஷ்டர், ஸ்ரீராமனுக்கு மேற்கண்ட தத்துவங்களைக் கதை வடிவில் கூறுகிறார். அவற்றுள் உற்பத்தி என்னும் பிரிவின் கீழ் கர்க்கடி என்ற அரக்கியின் கதை மூலமாக, பிரம்மம், பிரபஞ்சம், மனம், சங்கல்ப -விகல்பங்களால் உருவாகும் தோற்ற மயக்கங்கள் ஆகியவற்றை எடுத்துரைக்கிறார்.

இமயமலையின் வட பகுதியில் கர்க்கடி (நண்டு வடிவினள்) என்ற ஓர் அரக்கி வாழ்ந்து வந்தாள். நாட்டிலுள்ள எல்லா உயிரினங்களையும் பிடித்துத் தின்றாலும் அவளது பசி அடங்காது. தீராப்பசி மிக்க இந்த அரக்கி ஒருமுறை இமயமலையில் சூரிய பகவானை நோக்கியவாறே ஒற்றைக் காலில் நின்றவாறு ஆயிரமாண்டு காலம் கடுந்தவத்தில் ஆழ்ந்தாள். சுடும் வெயிலையும் கடுங்குளிரையும் தாங்கி நின்றாள். இறுதியில் பிரம்மா அவள் முன் தோன்றி, அவளது தவத்தை மெச்சி, என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். தீராத பசியுடைய கர்க்கடி, நான் ஓர் ஊசி வடிவிலான உயிரினமாக மாறி விலங்குகள் மற்றும் மனிதர்களுள் புகுந்து, ரத்தம் குடிக்கும் ஜீவசூசிகா வாக மாற வேண்டும் என்று கேட்டாள். பிரம்மாவும் அவ்வாறே அவள் இனி ஊசி வடிவினளாகி, விசுசிகா என்று அழைக்கப்படுவாள் என அருளிச் சென்றார். விசுசிகா பிறரது உடலில் புகுந்து ரத்தத்தை ஊறிஞ்சி மகிழ்ந்தாள். போகப் போக இத்தகைய வாழ்வில் வெறுப்புற்றுத் தன் கொடூரச் செயலை நினைத்து வருந்தினாள். ஆகவே மீண்டும் இமயமலையில் ஆயிரமாண்டுகள் தவம் இருந்தாள். அதனால் அவளது பாவங்கள் அகன்றன. விருப்பு வெறுப்புகளைக் கடந்தாள். ஞானம் பெற்றாள்.

இம்முறை வந்த பிரம்மா அவளிடம், கர்க்கடீ ! நீ ஜீவன் முக்தி அடைந்தாய். எனினும் மீண்டும் உன் பழைய அரக்க உருவிலேயே தொடர்ந்து இருந்து வா! அறியாமையில் உழலும் மக்களுக்கு ஞானத்தை வழங்கு! அதைப் பெறாதவர்களையும், கொடியவர்களையும் பிடித்துத் தின்று வா! என்று கூறி மறைந்தார். கர்க்கடி மீண்டும் நிர்விகல்ப சமாதியில் நெடுங்காலம் ஆழ்ந்தாள். கண் விழித்தபோது பசித்தது. அப்போது அவள் எதிரே ராஜா விக்கிரமனும் அவனது மந்திரியும் வருவதைப் பார்த்து, அவர்கள் ஞானிகளா என்று அறிய விரும்பினாள். ஆத்மஞானம் அற்றவர்களானால் அவர்களை உண்ணலாம் என எண்ணி உரையாடினாள். பிறகு, அரசரே! அமைச்சரே! நான் கேட்கும் இந்தத் தத்துவக் கேள்விகளுக்குச் சரியான விடை தர வேண்டும். இல்லாவிட்டால் உங்களை விழுங்கிவிடுவேன் என்றாள். சரி, கேள்விகளைக் கேள் என்றான் அரசன் மகிழ்ச்சியாக.

அரக்கியின் கேள்விகள் இவை:

1. கடலில் தோன்றும் நீர்க்குமிழிகளைப் போன்ற கணக்கற்ற உலகங்களைப் படைத்து, காத்து, அழிக்கக் காரணமான அந்த அணு எது?

2. பரந்த ஆகாயமாக இருப்பது. ஆனால் இல்லாதது எது?

3. எல்லையில்லாமல் பரந்தது என்றாலும் எல்லைகளுக்கு உட்பட்டது. அது எது?

4. எப்போதும் நகர்ந்து கொண்டிருப்பது. எனினும் நகராமல் அசைவற்றிருப்பது எது?

5. எப்போதும் இருப்பது. எனினும் இல்லாதது. அது எது?

6. அறிவாக (உணர்வாக, புத்தியாக) வடிவெடுத்திருப்பது. எனினும் பாறை போல் புலனறிவற்றது. அது எது?

7. ஆகாயத்தில் சித்திரங்களைத் தோற்றுவிப்பது எது?

8. மரம் விதையில் மறைந்திருப்பது போல் பிரபஞ்சத்தையே தன்னுள் அடக்கியுள்ளது எது?

9. அவை யாவும் (பல்வேறு உலகங்கள்) கடலில் நுரைகள் தோன்றுவதுபோல் எதிலிருந்து தோன்றும்?

10. பல்வேறு உலகங்கள் யாவும் முடிவில் எங்கே ஒடுங்குகின்றன?

இந்தக் கேள்விகளுக்கு மந்திரியே முதலில் விடையளித்தார்.

கரியபெண்ணே! இவை அனைத்திற்கும் ஒரே பதில்தான். எனினும் ஒவ்வொன்றாகக் கூறுகிறேன்:

1. அது இரட்டைத் தன்மையற்ற ஒன்றேயான பரப்பிரம்மம். அதை மனதாலோ, ஐம்புலன்களாலோ அடைய முடியாது. அது ஆகாயத்தை விட நுண்ணியது; அணுக்களின் அணு. தூய உணர்வறிவு.

2. பிரம்மம் எங்கும் நிறை நுண்பொருள். எதனாலும் தாங்கப்படாதது. உள்ளும் புறமுமற்றது. அந்த ஆகாயமே பிரம்மம்தான். எனினும் ஆகாயம் உணர்வற்றது. மாயையால் உருவாக்கப்பட்டது. ஆனால் பிரம்மம் உணர்வுமயமானது.

3. பிரம்மம் எங்கும் பரந்திருப்பதால், இதுதான் என்று சுட்டிக்காட்டும் உறைவிடம் இல்லாதது. எனினும் எல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பதால் உறைவிடம் உள்ளது.

4. அது அசையாத அசலம் (மலை), பரிபூரணம். எனினும் அசையும் பொருள்களில் எல்லாம் உள் நின்று அசைவது. எனவே அது அசையும் பொருள்.

5. அது என்றும் இருப்பது, அது மட்டுமே உள்ளது. எனவே அது உள்ளது. எனினும் கண்களால் கண்டு, அது இதுதான் என்று சுட்டிக்காட்ட முடியாமல் அருவமாய் உள்ளதால் அது இல்லாதது.

6. அது பேருணர்வுப் பரம்பொருள். அறிவாய்ச் சுடர்வது. சுயமாய் ஒளிர்வது. எனினும் கல்லாய், மண்ணாய், மரமாய் பல்வேறு தோற்றங்கள் தரும் அது ஒரு ஜடப்பொருளும்கூட.

7. நுண்மையான, சுயமாய் இயங்கும் சிதாகாசத்தில் பல்வேறு உலகங்களைப் (சித்திரங்களை) படைத்துக்கொண்டே போவது அந்தப் பரம்பொருள்தான்.

8,9,10. பல்வேறு உலகங்களும் பிரம்மத்திடமிருந்தே தோன்றுகின்றன. பிரம்மத்திலேயே நிலைக்கின்றன. இறுதியில், கடலில் தோன்றும் நீர்க்குமிழிகள் போல அவை பிரம்மத்திலேயே கரைகின்றன. அவை பிரம்மமேயன்றி வேறில்லை. அவை எல்லாம் பிரம்மத்தின் பல்வேறு தோற்றங்கள்.

மந்திரியின் சரியான பதிலைக் கேட்டதும் கர்க்கடி மிகவும் மகிழ்ந்தாள். பின் அரசனைப் பார்த்து, அவனது பதில் என்னவென்று கேட்டாள். அரசன் சொன்னான்.

உண்மையில், பிரம்மம் மட்டுமே உள்ளது. வேறுபாடாய்த் தோன்றும் இப்பிரபஞ்சம் உண்மையில் இல்லாதது. பிரளய காலத்தில் பிரபஞ்சமே அழிந்து ஒடுங்கும்போதும், அதன் பின்னரும் பிரம்மம் இருக்கும். மனதின் சங்கல்ப, விகல்பங்களை அறவே அகற்றிய பின்தான், தூய மனதால் பிரம்மத்தை அடைய முடியும். இதையே அபரோக்ஷ பிரம்மஞானம் என்கிறோம். இருவரின் பதிலாலும் திருப்தியுற்ற கர்க்கடி அவர்களை வாழ்த்தினாள். அரசனின் வேண்டுகோளுக்கிணங்கி இனி உயிர்க்கொலை புரிவதில்லை என்று வாக்களித்தாள். ஜீவன்முக்தியடைந்த அவள், விதேக முக்தியடைவதற்காக இமயமலை சென்று மீண்டும் நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar