இளைஞன் ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று, இந்த ஊரில் எனக்கு வருமானத்திற்கு வழியில்லை. அதனால் இன்று நான் நம் ஊரிலிருந்து புறப்படுகிறேன். நான் செல்லும் நகரத்தில் எனக்கு நல்ல ஒரு வேலை கிடைத்து, அங்கு என் வாழ்வு நன்கு அமைய வேண்டும் என்று என்னை ஆசீர்வதியுங்கள் என்று வேண்டினான். ஞானி அவனை ஆசீர்வதித்தார். சில நாட்களுக்குப் பிறகு ஞானி, அதே ஊரில் அவனை மீண்டும் பார்த்தார். ஞானி அவனிடம், அப்பா! நீ அன்றே வெளியூர் புறப்படப் போவதாகக் கூறினாயே என்று கேட்டார். அவன், ஐயா! நான் அன்றே ஊரிலிருந்து புறப்பட்டேன். வழியில் ஒரு வனாந்தரத்தில், ஒரு மரத்து நிழலில் அமர்ந்தேன். அங்கு ஒரு காட்சியைக் கண்டேன். நான் உட்கார்ந்த இடத்திற்குச் சற்று தூரத்தில், ஒரு மரத்தடியில் கால் ஒடிந்த ஒரு சிட்டுக்குருவி பசியாலும் வலியாலும் நடக்க இயலாமல் தவித்துக் கொண்டு இருந்தது.
அதைப் பார்த்த நான், இந்தச் சிட்டுக்குருவி தானாகவே பறந்து சென்று உணவைத் தேட வழியில்லையே! இது எப்படி உயிர் வாழ முடியும்? என்று நினைத்தேன். அப்போது, எங்கிருந்தோ மற்றொரு குருவி பறந்து வந்தது. அது தன் வாயில் உணவு எடுத்து வந்து, கால் ஒடிந்த குருவியின் வாயில் ஊட்டியது. உடனே நான், ஆகா! கால் ஒடிந்த இந்தக் குருவிக்கும் உணவு கிடைப்பதற்கு, இறைவன் ஓர் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான்! அப்படியிருக்கும் போது, மனிதனாகிய நான் வாழவும் இறைவன் ஓர் ஏற்பாடு செய்யாமலா இருப்பான்? என நினைத்து, ஊருக்குத் திரும்பி விட்டேன் என்றான். அது கேட்ட ஞானி, மகனே! ஏன் கால் ஒடிந்த சிட்டுக்குருவியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்? தன் உழைப்பில் தானும் உணவு உண்டு, மற்றொரு குருவிக்கும் உணவு கொண்டு வந்து தந்த பெருமைக்குரிய குருவியாக இருக்கவேண்டும் என்று நீ ஏன் விரும்பக் கூடாது? என்று கேட்டார். பிறர் உழைப்பில் வாழ்வது இழிவு.