சிவபாதர் என்ற தபஸ்வி காட்டில் வசித்தார். அவர் அறிவுசீலர் என்பதால், தனக்கு சீடராக வருவோரும் அறிவார்ந்தவர்களாகவே இருக்க வேண்டுமென விரும்பினார். அதற்காக, இக்கால நுழைவுத் தேர்வு போல,பரீட்சை நடத்தி,அதில் தேறுபவர்களையே சீடராக தேர்ந்தெடுப்பார். ஒருசமயம், பொன்னன், விஜயன் என்ற நண்பர்கள் அவரை நாடி வந்தனர். மகாமுனிவரே! நாங்கள் ஆத்மஞானம் பெறும் பொருட்டு தங்களை நாடி வந்துள்ளோம். நீங்கள் எங்களைச் சீடராக ஏற்க வேண்டும், என்றனர். தபஸ்வியோ அவர்களிடம் பேசவே இல்லை. ஒருமாதம் அப்படியே கழிந்தது. இருந்தாலும் இருவரும், தினமும் அவரைச் சந்தித்து தங்கள் கோரிக்கையை வைப்பதும், அவர் பதில் சொல்லாமலே இருந்ததும் தொடர்ந்தது. இதன்மூலம், அந்த இளைஞர்கள் பொறுமைசாலிகள், சகிப்புத்தன்மை மிக்கவர்கள், லட்சியத்தை அடைவதற்காக முயற்சி செய்பவர்கள் என்பதைப் புரிந்துகொண்டார். ஆன்மிகத்திற்கு தேவையான இந்த அடிப்படைத் தன்மைகள் அவர்களிடம் இருந்ததால், ஒரு மாதம் கழித்து வாய் திறந்தார்.
பிள்ளைகளே! உங்களை சீடராக ஏற்க வேண்டுமானால், நான் சொல்வதை செய்யுங்கள். உங்கள் இருவரிடமும் ஆளுக்கொரு சிவலிங்கம் தருவேன். அதை யாரும் பார்க்காத ஓரிடத்தில் ஒளித்து வைத்து வர வேண்டும். இதை நீங்கள் சரியாகச் செய்துவிட்டால், உங்களை சீடராக ஏற்பதில் ஆட்சேபனை இல்லை, என்றார். இருவரும் அவர் தந்த லிங்கத்துடன் புறப்பட்டனர். பொன்னன் நடுகாட்டிற்குள் சென்று, அங்கிருந்த ஒரு குகையைக் கண்டு பிடித்து, அதற்குள் நீண்டதூரம் நடந்து சென்று, மண்ணைத் தோண்டி லிங்கத்தை ஆழப் புதைத்து வைத்தான். ஒன்றிரண்டு நாட்களிலேயே சிவபாதர் இருந்த இடத்திற்கு திரும்பினான். லிங்கத்தை புதைத்த விஷயத்தை தபஸ்வியிடம் சொன்னான். உன் நண்பனும் வரட்டும், அப்புறம் சீடனாவது பற்றி யோசிக்கலாம், என்றார் தபஸ்வி. ஆனால், விஜயனைக் காணவில்லை. ஒருமாதம், இருமாதம், ஆறுமாதம் என காலம் ஓடியது. ஒரு வருடம் கழித்து தான் அவன் திரும்பினான். ஆனால், சிவபாதர் கொடுத்தனுப்பிய லிங்கம் அவன் கையிலேயே இருந்தது. என்னப்பா! நான் சொன்னதையும் செய்யவில்லை, காலமும் கடத்தியிருக்கிறாய், இதுதான் குருவின் கட்டளைக்கு நீ காட்டும் மரியாதையா? என்றார் சிவபாதர்.
முனிவரே! தங்கள் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் போனதற்காக என்னை மன்னியுங்கள். இருப்பினும், அதற்கான காரணத்தைக் கேளுங்கள். நான் சென்ற இடமெல்லாம், நான் இங்கிருக்கிறேன், நான் இங்கும் இருக்கிறேன், நீ எங்கு போனாலும் அங்கிருப்பேன், நான் இல்லாத இடம் ஏது! நீ எப்படி இதை மறைத்து வைக்க முடியும் என நாலாபக்கமும் இருந்து குரல் வந்தது. அதைக் கேட்டதும் மனிதர், மிருகங்களின் பார்வையில் இருந்து வேண்டுமானால் இதை மறைக்கலாம். ஆனால், கடவுளின் பார்வையில் இருந்து எதையுமே மறைக்க முடியாது என்பது புரிந்துவிட்டது. எனவே,தான் காலதாமதமாக திரும்பினேன், என்றான் கண்ணீருடன். சிவபாதர் அவனை அணைத்துக் கொண்டார். நாம் செய்கிற செயல்கள் யாவும் இறைவனுக்குத் தெரியும். சிலர் இறைவனுக்கு ஏதும் தெரியாதென நினைத்துக் கொண்டு, அஞ்ஞானத்தால் சக உயிர்களுக்கு மறைமுகமாக கேடு விளைவிக்கின்றனர். நீயோ, இறைவன் எங்கும் இருப்பதைப் புரிந்துகொண்டாய். இனி, நீ எந்தத் தவறும் செய்யமாட்டாய். எனவே, என் சீடனாகும் தகுதி உனக்கு உண்டு, என்று ஆசிர்வதித்தார்.