யக்ஞவல்கியர் என்ற மகான் இல்லறத்தில் இருந்தார். அவரது மனைவி மைத்ரேயி. வல்கியருக்கு வாழ்வதற்கு போதுமான அளவு சொத்து இருந்தது. அதை மனைவியிடம் ஒப்படைத்து, நீ சுகமாக வாழ்வதற்கு போதுமான செல்வத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நான் காட்டுக்குப் போய் தவம் இருக்கப் போகிறேன், என்றார். மைத்ரேயி சிரித்தாள். அன்பரே! இப்படி ஒரு செல்வக்குவியலைத் தந்து விட்டு, சுகமாக வாழ் என்று சொல்லிவிட்டு போகிறீர்களே! இந்த செல்வத்தைக் கொண்டு இறப்பற்ற வாழ்வைப் பெற முடியுமா? என்றாள்.கண்ணே! நீ சொல்வது எவ்வாறு பொருந்தும்? இந்த செல்வம் சாப்பிடவும், சந்தோஷமாக இருக்கவுமே உதவும்.
சில சமயங்களில் இது நம் கையை விட்டு, இன்னொருவர் வசம் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இறப்பற்ற நிலையைப் பெற இந்த செல்வம் உதவாது. அதற்கு மெய்ஞ்ஞானம் என்னும் செல்வம் வேண்டும். அதாவது, இந்த உலகத்திற்கு நாம் ஏன் வந்தோம் என்பது பற்றி யாரொருவர் அறிய முற்படுகிறாரோ, அவரே மெய்ஞ்ஞானியாக முடியும் என்றார். அப்படியானால், நிலையற்ற இந்த செல்வம் எனக்கு எதற்கு? நானும், உங்களுடன் காட்டுக்கு வருகிறேன். இருவருமே தவமிருந்து பரம்பொருளாகிய பெருஞ்செல்வத்தை அடைவோம், என்றாள். ஆன்மிக உணர்வில் கூட கருத்தொருமித்த அந்த தம்பதிகள், காட்டுக்குப் புறப்பட்டனர்.