மனிதனுக்குள் எவ்வளவோ திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. இப்போதெல்லாம், பணத்தை வைத்து தான் ஒருவரது மதிப்பு எடையிடப்படுகிறது. திறமைக்கு மரியாதை கொடுப்பவர்கள் ரொம்ப சிலர் தான்! செல்வி என்ற பணக்கார பெண்ணின் வீட்டுக்கு இன்னொரு பணக்காரியான மல்லிகா விருந்தாளியாக வந்தாள். விருந்தினர் அறையில், செல்வி பல ஓவியங்களை மாட்டி வைத்திருந்தாள். அவற்றை வாங்கிய விதம், அவற்றுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்தது பற்றி பெருமையாகச் சொல்லிக் கொண்டாள். மல்லிகாவுக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை. ஏனடி! உனக்கு அறிவிருக்கா! யாராவது ஐயாயிரம், பத்தாயிரத்துக்கு ஓவியங்களை வாங்குவார்களா! இது எவ்வளவு காலமடி நிலைக்கும்!
வெறும் வண்ணத்துக்கும், திரைச்சீலைக்குமா இவ்வளவு காசு கொடுப்பார்கள்! பைத்தியக்காரி! என்னைப் பார்! நீ இங்கு வாங்கி வைத்துள்ள ஓவியங்களுக்கு நிகரான தொகைக்கு வைர நெக்லஸ் வாங்கி, கழுத்தில் அணிந்திருக்கிறேன், எப்படி டாலடிக்கிறது பார், என்றாள் கர்வம் பொங்க! செல்வி அவளிடம்,மல்லி! நீ கரிக்கட்டையாய் கிடந்து சற்று பளபளப்பைப் பெற்றுள்ள ஒரு பொருளுக்கு மதிப்பு கொடுக்கிறாய். நானோ, இவற்றை வரைந்த மனிதனின் திறமைக்கு மதிப்பளிக்கிறேன். பகட்டுக்கு செலவழிப்பதை விட, மனிதனுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வர செலவழிப்பது தான் எனது கொள்கை. மனிதனின் திறமைக்கு மதிப்பளிக்கும் நாட்டிற்கு செல்வம் தானாகவே வந்து சேரும், என்றாள். ஆம்...அவள் சொன்னது நிஜம் தானே!