தருமபுரம் ஆதீனத்தில் கட்டளைத் தம்பிரானாக இருந்தவர், துறவி சம்பந்த சரணாலயர். இவர் கந்தபுராணத்தைச் சுருக்கமாகப் பாடிய புலவர். திருத்தல யாத்திரையாக கர்நாடகா சென்றிருந்தார். மைசூரு மன்னர் இவரின் பெருமையைக் கேள்விப்பட்டு அரசவைக்கு அழைப்பு விடுத்தார். பல்லக்கு, பரிவாரங்கள் சரணலாயரை அழைத்து வர அமைச்சர் மேற்பார்வையில் கிளம்பின. அவர் அரண்மனைக்கு சகல மரியாதைகளுடன் அழைத்து வரப்பட்டார். சரணாலயர் நல்ல கருப்பு. அவரைக் கண்ட மன்னர், சிரித்தபடி, அமைச்சரின் காதில் மெல்ல, சுவாமி, அண்டங்காக்கை போல கருப்பாக இருக்கிறாரே! என்றார். மன்னரின் வாய் அசைவைக்கொண்டே, புலவர் தன்னைக் கேலி செய்வதைப் புரிந்து கொண்டார்.
சபையில் அனைவரும் கேட்கும் விதத்தில் கம்பீர தொனியில், மன்னர் பெருமானே! அண்டங்காக்கைக்குப் பிறந்தவரே! நீர் வாழ்வாங்கு வாழ்க! உமது பெருமை எங்கும் ஓங்குக!, என்றார். அப்பேச்சைக் கேட்டு கோபமடைந்தார் மன்னர். மன்னா! உண்மையைத் தானே சொன்னேன். அண்டம் என்றால் உலகம். நீர் இந்த உலகத்தைக் காப்பதற்காகத் தானே பிறந்திருக்கிறீர்! என்ன... நான் சொல்வது சரிதானே! என விளக்கம் அளித்தார். புலவரின் அறிவுத் திறத்தைக் கண்ட மன்னன் மகிழ்ந்தார். அவருக்குப் பொன்னும் பொருளும், பட்டாடைகளும் பரிசளித்தார். சம்பந்த சரணாலயரும் அங்கு அருளுரை நிகழ்த்தி விடைபெற்றார். சம்பந்த சரணாலயரின் மதிநுட்பத்தை எண்ணி தருமபுரம்
ஆதீனமும் மகிழ்ந்தார். நிறத்தைக் காரணமாக வைத்து யாரையும் அவமானப்படுத்தக் கூடாது...புரிகிறதா!