சதத்துவஜர் என்ற அரசரின் மனைவி மதாலஸா. இவள் பக்திப்பூர்வமானவள். மனிதனே தன் செய்கைகளால் தெய்வமாகலாம் என நினைப்பவள். மதாலஸா கணவரிடம், அன்பரே! நம் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை என்னிடமே ஒப்படைக்க வேண்டும். யாரும் அதில் தலையிடக்கூடாது, என்றாள். காரணம் தெரியாத அரசரும் சரியென வாக்கு கொடுத்து விட்டார். அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்ததும் அரசர் விக்ராந்தன்
(ஊர் ஊராக சுற்றுபவன்) என்று பெயரிட்டார். இதைக் கேட்டு அரசி சிரித்தாள். அதற்கான காரணம் அரசருக்குப் புரியவில்லை. ஆனால், கேட்கும் தைரியம் இல்லை. அந்தக் குழந்தையை அரசி நிராஞ்ஜன் என்று அழைத்தாள். இதற்கு பற்றில்லாதவன் என்று பொருள். பாலூட்டும் பருவத்திலேயே வாழ்க்கை என்றால் இன்னதென்று, குழந்தைக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.
இந்த வாழ்வு பொய்யானது. பிரம்மம் (தெய்வம்) ஒன்றே மெய்யானது, என்று சொல்லிக் கொண்டே பால் கொடுப்பாள். குழந்தை பெரியவனான பின் தவமிருக்க போய்விட்டான். இதையடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளும் இதே போல் தவமிருக்க சென்று விட்டனர். அரசருக்கு கவலை வந்து விட்டது. ராணி இப்படியே செய்தால், தனக்குப் பிறகு நாடாள யார் இருக்கிறார்கள்? இந்த தேசம் பாதுகாப்பற்று, வாரிசற்று போய் விடுமோ என அஞ்சினார். இதையடுத்து ஒரு குழந்தை பிறந்தது. இம்முறை ராஜா பெயர் வைக்க வந்த போது, ராணி அவரைத் தடுத்தாள். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வைக்கும் பெயர் சரியாக அமையவில்லை. நான் இவனுக்கு அலர்க்கன் என்று பெயர் சூட்டுகிறேன், என்றாள். ராஜா அதிர்ந்து விட்டார். ஏனெனில், அந்தப்பெயருக்கு பைத்தியக்கார நாய்என்று அர்த்தம். இவளுக்கு தான் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று எண்ணிய அவர். ராணியிடம், நீ இப்படி செய்யலாமா? என்றார். நீங்கள் முதல் குழந்தைக்கு விக்ராந்தன் என்றும், அடுத்தவனுக்கு சுபாகு( வலிமை மிக்க தோள்களை உடையவன்) என்றும், மூன்றாமவனுக்கு சத்துருமர்த்தனன் (எதிரிகளை துவம்சம் செய்பவன்) என்றும் பெயர் வைத்தீர்கள். அந்தப் பெயருக்கேற்றாற் போல் அவர்களும் நடக்கவில்லை. அப்படியிருக்க, இவனுக்கு பைத்தியம் என்று பெயர் வைத்ததால், அவன் பைத்தியமாகி விடுவானா என்ன! தீ என்றால் நாக்கு சுட்டு விடாது.
இந்தப் பெயரே இருக்கட்டும், என அடித்துச் சொல்லி விட்டாள். ஒன்றும் புரியாத ராஜா, இவனையாவது அரசாள தயார்படுத்து. இவனையும் விட்டால் நாடாள யார் உள்ளனர்? என்றார். அதை ராணி ஏற்றுக் கொண்டாள். மகனுக்கும் அரசாளும் வித்தையைக் கற்றுக் கொடுத்தாள். அவன் பொறுப்பேற்றதும், ராஜாவும், ராணியும் காட்டுக்கு புறப்பட்டனர். மகனுக்கு ஒரு பதக்கத்தை அணிவித்த ராணிமகனே! உனக்கு கஷ்டம் வந்தால் மட்டும் இந்த பதக்கத்திற்குள் இருக்கும் ஓலையை படித்துப் பார், என்றாள். பலகாலம் கழிந்ததும், அவனுக்கு வாழ்வில் ஏதோ வெறுப்பு தட்ட, ஓலையை எடுத்துப் படித்தான். நீ பற்றற்றவனாக இரு, அப்போது ஆத்மஞானம் அடைவாய், என்றிருந்தது. அதிலுள்ள உண்மையை அலர்க்கன் புரிந்து கொண்டான். அவனும் தவமிருக்ககாட்டுக்குப் போய்விட்டான். குழந்தைகள் அதிக ஆசையின்றி, ஒழுக்கமாக வளர இந்தக் கதையை மார்க்கேண்டய புராணத்தில் சொல்லிஉள்ளனர்.