ஒரு ராஜா கொடுங்கோலாட்சி செய்தான். கண்டபடி வரிவிதித்து கசக்கிப் பிழிந்தான். விரும்பிய பெண்களை அந்தப்புரத்தில் அடைத்து வைத்தான். இவன் செத்து தொலைய மாட்டானா என்று மக்கள் இறைவனிடம் பிரார்த்திக்க ஆரம்பித்து விட்டனர். ஒருநாள், ஒரு மகான் அவ்வூருக்கு வந்தார். அவரிடம் மக்கள் தங்கள் கஷ்டத்தைச் சொன்னார்கள். மகான் அவர்களிடம்,நான் மன்னனை நேரில் சந்தித்து அவனுக்கு அறிவுரை சொல்கிறேன், நல்லதே நடக்கும், மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள், என்று சொல்லி தேற்றினார்.
அரசவைக்கு சென்ற அவரை மன்னன் எழுந்து நின்று கூட வரவேற்கவில்லை. என்ன சாமியாரே! காடு, கரை என எங்காவது சுற்றினால் என்ன! அரண்மனைக்கு வந்து யாகம் நடத்துகிறேன்...அது...இது என சன்மானம் வாங்க வந்திருக்கிறீரா? என எகத்தாளமாகக் கேட்டான். மகானுக்கு கோபம் வந்துவிட்டது. அட மூடனே! உன் கொடிய ஆட்சியில் மக்கள் படும் பாட்டை எடுத்துரைக்க வந்தால், எடுத்தெறிந்தா பேசுகிறாய்? இன்னும் ஓராண்டில் உனக்கு சாவு நிச்சயம், என்று சாபம் கொடுத்து விட்டு வெளியேறி விட்டார். மக்களுக்கு இந்த செய்தி எட்டியது. மகானின் சாபம் பலித்தே தீரும் என அவர்கள் மகிழ்ந்தனர். துறவிகளின் சாபம் பலிக்குமென்பதால், மன்னனையும் பயம் தொற்றியது. அன்று முதல், தன்னை நாடி வந்தோருக்கெல்லாம் வாரிக் கொடுத்தான்.
மக்களின் வரிச்சுமை பெருமளவு குறைக்கப்பட்டது. பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மக்கள் அவனை வாழ்த்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த வாழ்த்து அவனுக்கு அரணாக இருந்தது. ஓராண்டும் கழிந்து விட்டது. மகானின் சாபம் பலிக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் அங்கு வந்தார். சுவாமி! உங்களிடம் தவறாக நடந்ததற்காக மன்னியுங்கள். உங்கள் சாபம் பலிக்காமல் போனது எப்படி? என்றான் மன்னன். யார் சொன்னது, சாபம் பலிக்கவில்லையென! கெட்டவனான ராஜா இறந்து விட்டான். இப்போது நற்குணமுடைய ராஜாவல்லவா ஆட்சி செய்கிறான்! என்றார். மன்னனும் மக்களும் மகிழ்ந்தனர்.