இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவர்கள் நாட்டில் மிகக்குறைவு. ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படை எடுத்துச் சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்தது. அங்கே ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் தனது வெற்றிக்காக ஆசி பெறச்சென்றான். காட்டில் கடும் குளிர் அடித்தது. முனிவரோ, இடையில் மட்டுமே ஆடை உடுத்தியிருந்தார். தியானத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு, தனது மேலாடையை எடுத்துப் போர்த்தினான் அரசன். கண்விழித்த முனிவர் அரசனைப் பார்த்தார். யாரப்பா நீ! எதற்காக இங்கே நிற்கிறாய்! முனிவரே! நான் பண்ணைபுரத்தின் அரசன். பக்கத்து நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறேன்.
நான் வெற்றி பெற. தங்களிடம் ஆசி பெறவே காத்திருக்கிறேன்,. சரி...எனக்கு அணிவித்த இந்த மேலாடையை எடுத்துச் செல்,. உங்களுக்கு குளிரும் என்று தானே அணிவித்தேன்!. தேவையில்லை! நான் ஏற்கனவே பணக்காரன். இந்தச் சொத்தையும் சேர்த்து சுமக்க தயாராக இல்லை. என்னிடம் இதுபோல் பல சால்வைகள் உள்ளன. அதில் ஒன்றைத் தான் கொடுத்தேன். இதை ஏற்பதில் என்ன தயக்கம்! மகனே! உன்னிடம் ஏற்கனவே ஒரு நாடு இருக்கிறது. அது போதாதென்று இன்னொரு நாட்டையும் பிடிக்கச் செல்கிறாய். அப்படியானால், உனக்கு தேவை இருக்கிறது. தேவை உடையவனே ஏழை. அவனுக்கே பொருட்கள் தேவை,. அரசனுக்கு துறவியின் வார்த்தைகள் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. போர் எண்ணத்தைக் கைவிட்டு, நாடு திரும்பினான்.