அம்மா! தீபாவளி நெருங்குது! இப்போதே பலகாரம் செய்ய ஆரம்பிச்சுடு! என்றான் மகன் கண்ணன். கண்ணா! கண்ணா! என அவனை வாய்நிறைய கூப்பிடுவாள் அம்மா. கண்ணன் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம்.. ஒரே பிள்ளை...கேட்கவா வேண்டும் செல்லத்துக்கு! அதேநேரம், அம்மா தனக்கு கொடுக்கும் செல்லத்தை கண்ணன் ஒருநாள் கூட தவறாகப் பயன்படுத்தியதே இல்லை. சமர்த்துப்பிள்ளை... பள்ளியில் அவன் தான் பர்ஸ்ட்! அவன் வீடு இருந்த தெருவிலேயே கிருஷ்ணன் கோயில் ஒன்றும் இருந்தது. கண்ணனும், அம்மாவும் வசதிப்படும் நாட்களில் எல்லாம் அங்கு செல்வார்கள். அம்மா நெய்யிலேயே பலகாரம் செய்தாள். முறுக்கு, அதிரசம், லட்டு...இத்யாதிகளெல்லாம் தயாராயின. தீபாவளியன்று காலையில், பலகாரங்களை நைவேத்யம் செய்து, காக்கைச் சிறகினிலே நந்தலாலா, என்ற பாடலை இனிய குரலில் பாடினாள். அன்று விளையாட்டு விழாவிற்குஊர் மக்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அம்மா! பூஜை ஆரம்பிக்கறச்சே என்னைக் கூப்பிடு, இங்கே விளயாட்டு விழாவை வேடிக்கை பார்த்துண்டிருப்பேன், என சொல்லிவிட்டு, கண்ணன் வெளியே ஓடிவிட்டான்.
பூஜைக்கான எல்லா பணிகளையும் அம்மா முடித்து விட்டு, கண்ணா! கண்ணா! என அழைத்தாள். விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தவர்கள் போட்ட கூச்சலில், கண்ணனின் காதில் அம்மாவின் சப்தம் விழவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால், எங்கே நிற்கிறான் என்றும் தெரியவில்லை. ஆனால், கண்ணா...கண்ணா! என்று அவள் சப்தமாக அழைத்தது, கோயிலுக்குள் இருக்கிற கிருஷ்ணரின் காதில் விழுந்துவிட்டது. ஐயோ! எனக்கு துவாபரயுகத்தில் தேவகி, யசோதை என்று இரண்டு தாய்கள் இருந்தனர். இந்த யுகத்தில் யாருமில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். இதோ! ஒருதாய் என் பெயர் சொல்லி அழைக்கிறாள். இதோ வந்துவிட்டேன் அம்மா! அவளது மகன் கண்ணனின் வடிவிலேயே உள்ளே வந்து விட்டான் கண்ணன். அம்மா அவனை அப்படியே அணைத்துக் கொண்டாள். எங்கே பூஜை நேரத்தில் வராமல் போய்விடுவாயோ என பயந்தேன். வா வணங்கலாம்! என்றாள். நிஜக்கண்ணன் அவள் அருகே நிற்க, சிலைக் கண்ணனுக்கு பூஜை நடந்தது. நைவேத்யம் முடித்து, கண்ணனுக்கு தட்டு நிறைய பலகாரம் அள்ளி வைத்து, ஊட்டினாள் அந்தத்தாய். குழந்தை அதை மென்று சாப்பிட்டான். இன்னும் வேண்டுமென்றான்! அவள் மேலும் ஊட்டினாள்.
கொஞ்சம் மட்டுமே மிச்சம்! அத்தனையையும் சாப்பிட்டு விட்டு, அம்மாவுக்கு முத்தமும் கொடுத்து,அம்மா! ரொம்ப ருசி! பாவம் உனக்குத்தான் கொஞ்சமா இருக்கு! என்று பரிதாபப் பட்டுவிட்டு அவன் வெளியேறவும், அவளது மகன் கண்ணன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அம்மா! பூஜை முடித்து விட்டாயா! விளையாட்டைப் பார்த்தவர்கள் போட்ட கூச்சலில் நீ கூப்பிட்டது கேட்கவில்லை போலும்! சரி சரி... பலகாரங்களைக் கொடு, என்றான். ஏனடா! அவ்வளவையும் நீ தானே சாப்பிட்டாய், என்றாள் தாய் ஆச்சரியத்துடன்! நானா! நான் இப்போது தானே வீட்டுக்குள்ளேயே வருகிறேன், என்றான் மகன். அப்படியானால் வந்தது....அந்த நிமிடம் அவள் கண்முன் நிஜக்கண்ணன் தோன்றினான். என் தெய்வமே! உன் உலகளந்த திருவடி என் இல்லத்தில் பட்டதா! நரகாசுரனைக் கொன்று, உலகையே ரட்சித்த உன் கைகளா, என் வீட்டு பலகாரத்தை அள்ளி சாப்பிட்டன! அவள் புளகாங்கிதமடைந்து போனாள். பாத்திரத்தில் இருக்கும் மிச்ச பலகாரங்களை எடுத்து மகனுக்கு கொடுக்க உள்ளே போனாள். ஆச்சரியம்! பாத்திரங்கள் நிறைந் திருந்தது. அவள் வீட்டுக் கண்ணனும் ஆசை தீர சாப்பிட்டு விட்டு, பட்டாசு வெடிக்க கிளம்பினான்.