நான் என்ன தவறு செய்தேன் என்று இவ்வளவு கடுமையாகப் பேசுகிறீர்கள்? பிரச்னை தான் என்ன? என்று பிசிராந்தையாரிடம் கேட்டான் பாண்டிய மன்னன். ஆம்...பாண்டியநாட்டிலுள்ள சிறிய கிராமம் பிசிர். இவ்வூரில் ஆந்தையார் என்னும் பெயர் கொண்ட புலவர் வசித்தார். ஊரின் பெயரை அவரது பெயரில் இணைத்து பிசிராந்தையார் என மக்கள் அழைத்தனர். யாரையும், எதையும் தன் எழுத்தாலும் பேச்சாலும் தட்டிக்கேட்கும் குணமுயைடவர் அவர். அவரது விமர்சனங்கள் நியாயமாக இருக்கும் என்பதால் அரசர்களும், அறிஞர்களும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அப்போது, பாண்டிய மன்னன் மக்கள் மீது பல வரிகளை விதித்தான். அந்த கடும் வரியைக் கட்ட முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்பட்டனர். எல்லாரும் பிசிராந்தையாரிடம் சென்றனர். அய்யனே! தாங்கள் மன்னரிடம் சென்று, இந்த பிரச்னை பற்றி பேசக்கூடாதா! எங்கள் வருமானமெல்லாம் வரியாய் போனால், நாங்கள் குழந்தை குட்டிகளுடன் எப்படி பிழைப்போம்? தயவுசெய்து மன்னரிடம் இதுபற்றி பேசுங்கள்.
எங்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்துங்கள், என்றனர் கண்ணீருடன். பிசிராந்தையார் ஆவேசமாகக் கிளம்பி விட்டார். கையில் ஓலைச்சுவடி. அதில் மன்னனுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை பாடலாக எழுதி யிருந்தார். புலவரைக் கண்ட மன்னன் வியப்படைந்தான். முன்னறிவிப்பின்றி திடீரென வருகை தந்துள்ளீர்களே! முதலில் அமருங்கள். தாகசாந்திக்கு என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று உபசரித்த மன்னன், அழகிய சிம்மாசனம் ஒன்றில் அமர வைத்தான். மன்னா! நான் தாகசாந்தி செய்துகொள்வது இருக்கட்டும். பாண்டியநாட்டு மக்கள் மிகுந்த தாகத்துடன் இருக்கிறார்களே! அதுபற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? என்று கேட்டார். புலவரே! தாங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை. வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத்தானே செய்கிறது... அவன் புரியாமல் பேசினான். மன்னா! வைகை பொய்க்கவில்லை. அது பெருகியோடுவதால் தானேகழனிகள் செழித்துக் கிடக்கின்றன. ஆனால், குடிமக்களின் வீடுகளில் தான் உணவு இல்லை. அத்தனையும் உன் கஜானாவை நிரப்பிவிட்டது,. சற்று விளக்கமாக சொல்லுங்கள்... பிசிராந்தையாரே! பிசிராந்தையார் மீண்டும் புதிர் போட்டார்.
மன்னா! யானையைப் பார்த்திருக்கிறாயா? பாண்டியன் கலகலவென சிரித்தான். என்ன புலவரே கேள்வி இது! நம் அரண்மனையில் நூற்றுக்கணக்கான யானைகள் உள்ளனவே! போர்க்காலத்தில், அவை எதிரிகளின் தலைகளை பந்தாடுவதை பலமுறை பார்த்திருக்கிறேனே! இதற்கு பதிலளித்த பிசிராந்தையார்அதெல்லாம் சரி! வயலில் விளைந்திருக்கும் நெல்லை சோறாக்கி, யானைக்கு கவளம் கவளமாகக் கொடுத்தால், அது பலநாளுக்கு போதுமானதாக இருக்கும். மொத்த யானைகளையும் வயலுக்குள் இறக்கி விட்டால், யானையின் வயிற்றுக்குப் போவது குறைவாகவும், காலில் சிக்கி வீணாவது அதிகமாகவும் இருக்கும். ஒரேநாளில் வயலில் உள்ள நெல் காலியாகி விடும். அதுபோல் தான் மக்கள் நிலையும்! நியாயமான வரி போட்டால், உன் கஜானாவும் நிரம்பும், மக்களும் செழிப்படைவார்கள். அதிகவரி விதித்தால், மக்கள் வாழ்வு சின்னாபின்னமாகி விடும். உனக்கு அதிகாரம் இருக்கிறதே என்பதற்காக, மக்களுக்கு தாறுமாறாக வரி விதித்தால், யானையின் காலில் சிக்கிய வயல் போல, நாடும் பாழாகி விடும், என்றார். மன்னன் மனம் மாறினான். ஆட்சியாளர்களும் ஏழைகள் மீது கருணை வைத்து நியாயமான வரி வசூலிக்கலாமே!