வட இந்தியாவிலுள்ள நாடுகளில் ஒன்றான ஹேஹயம் என்ற நாட்டை ஆண்ட ஹைஹயர்கள் தங்கள் நாட்டைத் தனித் தனிப் பகுதியாகப் பகிர்ந்து கொண்டு ஒற்றுமையுடன் அரசு புரிந்தனர். அவர்களுள் ஒருவரது புதல்வன் ஒரு நாள் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். காட்டில் ஓர் அடர்ந்த புதரிடையே ஒரு முனிவர் தம் உடலை மான் தோலால் மூடித் தவம் செய்து கொண்டிருந்தார். வேட்டைக்கு வந்த அரசகுமாரன் அவரை மான் என்று எண்ணி அம்பால் அடித்தான். அவர் உடனே இறந்துவிட்டார். அரசகுமாரன் இறந்திருப்பதைக் கண்டு பதறினான். ஊர் திரும்பிப் பெரியவர்களிடம் நடந்ததைக் கூறினான். ஹேஹய மன்னர்கள் முனிவர் கொல்லப்பட்டதை நேரில் சென்று பார்த்தனர். வருந்தி அவர் யார் என்றறிய அங்குமிங்கும் தேடினர். அண்மையில் ஓர் ஆசிரமம் காணப்பட்டது. அது காஸ்யப முனிவரின் புதல்வரான அரிஷ்ட நேமியின் ஆசிரமம். அவரைக் கண்டு வணங்கினர்.
முனிவர் அரசர்களை உபசரிக்க முற்பட்டபோது, முனிவரே, நாங்கள் பெரிய குற்றத்திற்கு இலக்காகிவிட்டோம். ஓர் அந்தணர் எங்களால் கொல்லப்பட்டுவிட்டார். நாங்கள் தங்கள் உபசாரத்திற்குக் தகுதியற்றவர்கள் என்று அரசர்கள் கூறினர். உடனே சென்று அந்தச் சவத்தை இங்கு கொண்டு வாருங்கள். நான் என் தவத்தால் அதை உயிர்ப்பிக்கிறேன் என்றார் அரிஷ்டநேரி அவர்களிடம் . ஹைஹயர்கள் அந்தச் சவத்தைக் கொண்டு வரச் சென்றபோது அது அங்கு காணப்படவில்லை. நாய் நரிகள் இழுத்துப் போயிருக்குமோ என்று தேடியதில் அத்தகைய அடையாளம் ஏதும் இல்லை. கொன்ற பாவத்தோடு முனிவரிடம் அபசாரப்பட வேண்டிய பயமும் சேர்ந்துவிட்டதே என்று கவலையுடன் முனிவர் முன் தலைகுனிந்து நின்றனர்.
இவர்தானா உங்களால் கொல்லப்பட்ட அந்தணன்? நன்றாகப் பாருங்கள் என்று கூறி அரிஷ்டநேமி ஒரு பிராமண குமாரனைக் காட்டினார். அனைவரும் ஆச்சரியம் காட்டினர். தாங்கள் கண்ட சவத்தில் இருந்த அடையாளங்கள் எல்லாம் இந்தக் குமாரனின் உடலில் காணப்பட்டன. அவர்களால் தங்கள் கண்களை நம்ப முடியவில்லை. இவன் என் மகன், நன்கு தவமியற்றிப் பெருமை எய்தியவன். அரசர்களே, நான் சபித்துவிடுவேன் என அஞ்ச வேண்டாம். தெரியாமல் நடந்துவிட்டது. உங்கள் இரக்கமும் உண்மையும் முயற்சியும் உங்களைக் காப்பாற்றிவிட்டன என்றார் முனிவர். முனிவரின் தவப்பெருமையையும் மன்னிக்கும் மாண்பையும் கண்டு வியந்த மன்னர்கள். முனிசிரேஷ்டரே! இந்த முனிகுமாரன் இறந்ததை நாங்களே கண்டோம். இப்போது உயிருடன் உள்ளான். மரண பயமின்றி நீங்கள் எல்லோரும் இருப்பதன் ரகசியம் என்ன? என்று வேண்டினர்.
முனிவர் கூறினார். அரசர்களே! உண்மை ஒன்றையே பேசுவோம், பொய் பேச வேண்டிய விருப்பம் எங்களுக்கு இல்லை. எங்கள் கடமையைச் செய்கிறோம். ஆகவே எமன் பற்றிய அச்சம் எங்களுக்கில்லை. நன்மை தரும் நற்செய்தியையே எல்லோர்க்கும் கூறுகிறோம். தீமை பயக்கும் தீய செயலைச் செய்வதே இல்லை. ஆதலின் எமனைப் பற்றிய அச்சம் எங்களுக்கில்லை. உணவும் நீரும் அளித்து விருந்தினரை உபசரிக்கிறோம். வேலையாட்களுக்கு வயிறார உணவு தருகிறோம். மிகுந்ததை நாங்கள் உண்கிறோம். ஆகவே எமபயம் எமக்கில்லை. பொறுமை, புலனடக்கம், புண்ணியத் துறையாடல், தானம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். நல்வினை பயக்கும் நல்ல இடங்களில் உறைகிறோம். ஆதலால் மரண பயம் எங்களுக்கு இல்லை.