முன்னொரு காலத்தில் மகான் ஒருவர் பூணூல் திரிப்பதையே தன் தொழிலாகக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரிந்த ஒரே தொழிலும் அதுதான். அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. மகான் பூணூல் திரிப்பதற்குரிய மந்திரத்தை சொல்லித் திரித்துத் தினமும் அதை பகவான் திருவடியில் வைத்து வணங்கி பரம பவித்ரமாக அதை ஓலைப் பெட்டியில் எடுத்து வைப்பார். யாராவது வந்து கேட்டால் அவர்களுக்குக் கொடுப்பார். இப்படியே வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் மகானின் மனைவி அவரிடம், நீங்கள் எப்பொழுதும் பூணூலைத் திரித்துக் கொண்டிருக்கிறீர்களே! நம் பெண்ணிற்கு வயதாகிவிட்டது. கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும். அதற்குப் பணம் வேண்டுமே, பக்கத்து தேசத்து ராஜா மிகவும் உபகாரியாம். அவரைப் போய் யார் உதவி கேட்டாலும் வாரி, வாரி கொடுப்பாராம். நீங்கள் ஒரு தடவை போய் பார்த்து வாருங்களேன் என்றாள். மனைவி சொல்லை மறுக்க முடியாமல், ராஜாவைப் பார்க்கப் போனார். மகானின் முக தேஜஸ் ராஜாவையும் ஆசனத்திலிருந்து எழவைத்தது. பிறகு மகானிடம், தாங்கள் வந்த விஷயம் என்ன என்று வினவ, என்ன கேட்பது என்று புரியாமல் மகான் தடுமாற, மகானே, நீங்கள் எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றார் ராஜா.
இதுவரை யாரிடமும் எதுவும் கேட்டுப் பழக்கமில்லாத மகான், நான் ஓர் யக்ஞோபவீதம் (பூணூல்) கொண்டு வந்திருக்கிறேன். அதன் எடைக்கு நிகராகத் தங்கம் கொடுத்தால் போதும்.. அதைக் கொண்டு என் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணிவிடுவேன் என்றார். தராசைக் கொண்டு வரச் சொல்கிறார் ராஜா. ஓலைப் பெட்டியிருந்து பூணூலை (ஒன்றே ஒன்று) எடுத்து மந்திரத்தைச் சொல்லி தராசுத் தட்டில் வைத்தார் ஏழை பிராமணர். இந்தப் பூணூல் அப்படி என்ன எடை இருக்கப் போகிறது? பாவம் இது கூட தெரியாமல் கேட்கிறாரே என்று ராஜா பரிதாபப்பட்டான். ஒரு தங்கக் காசைப் போட்டான். தட்டு தாழவில்லை. இரண்டு, மூன்று என்று எவ்வளவு தங்கக் காசுகள் போட்டாலும் தராசு அசையாமல் நின்றது. தன்னுடைய ஆபரணங்கள் ஒவ்வொன்றாக வைத்தும் பூணூலுக்கு இணை இல்லை. தன்னுடைய ரத்தின கிரீடத்தை எடுத்து வைத்தான். உடனே பக்கத்தில் இருந்த நாட்டின் மந்திரி ராஜாவின் காதில் அவசரப்படவேண்டாம்! இந்த நூல் நம் இராஜ்ஜியத்தையே சூறையாடிவிடும். இந்த பிராமணரை நாளை வரச் சொல்லுங்கள். அப்பொழுது எடைக்கு எடை தரலாம் என்றார்.
அரசனும் பிராமணரிடம், நாளை வாருங்கள். நீங்கள் கேட்டபடி எடைக்கு எடை தருகிறேன் என்றான். பிராம்மணருக்கு ஒரே பயம். நாம் கேட்டது தவறோ, இப்படி பூணூல் எடைக்கு மேல் வேண்டாம் எனக்கூறி விபரீதத்தில் மாட்டிக் கொண்டோமே. மறுநாள் வரச் சொல்லி சிரச்சேதம் செய்து விடுவாரோ என்றெல்லாம் யோசித்தபடி வீடு திரும்பினார். இரவு முழுவதும் தூங்கவில்லை. பயத்துடனேயே எழுந்து ராஜாவைப் பார்க்க மறுநாள் கிளம்பினார். மறுநாள் அரண்மனையில் ராஜா முன்னிலையில் தராசு கொண்டுவரப்பட்டது. பூணூலை வைத்தார் அந்தணர். ராஜாவும் ஒரு காசை எடுத்துப் போட்டார். என்ன ஆச்சர்யம். உடனேயே பூணூல் தட்டு மேலே போய்விட்டது! அதே பூணூல் அதே தராசுதான். பிறகெப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது? நேற்று வேறு மாதிரி அல்லவா நடந்தது? ராஜா மந்திரியை அழைத்துத் தன் சந்தேகத்தைக் கேட்டார். மந்திரி அதற்கு விளக்கம் சொன்னார்:
நேற்று அந்த முதியவர் கொண்டு வந்த பூணூல் மிகவும் பவித்ரமானது. மிகவும் புனிதமானது. அதற்கு நிறை காண யாராலும் முடியாது. எடை போடுவதே தப்பு. நாமெல்லாம் ஆத்மாக்கள். பகவான் மட்டுமே பரமாத்மா - பரம என்றால் உத்தமமான என்று பொருள். அதே அடைமொழி பூணூலுக்கும் உண்டு. அது இருந்ததினால் நேற்று அந்தப் பூணூல் இந்த ராஜ்யத்தையே எடை கொண்டது. ஆனால் இன்றைக்கு அதனுடைய பவித்ரம் போய் விட்டது. ஏனெனில், பூணூலைத் திரிப்பவர்கள் தங்களுடைய நியமங்களில் இருந்து தவறவே கூடாது. ஆனால் பாவம் இந்தப் பெரியவர். பயம் காரணமாக தன்னுடைய தினமும் செய்யும் நியமங்களைச் செய்யத் தவறி விட்டார். ஆதலால் இன்றைய பூணூல் பவித்ரம் போய்விட்டது. நம்மால் சுலபமாக எடை போட முடிந்தது என்று கூறினார். பிறகு அரசர் கருணையோடு ஏழை பிராமணருக்கு அவர் பெண்ணின் திருமணத்திற்குத் தேவையான தங்கத்தை அளித்து அனுப்பினார்.