அன்று வெள்ளிக் கிழமை. சாலம்மாள் கை கால் முகங்களை அலம்பி வெண்ணீறும், குங்குமமும் தரித்துக் கொண்டாள். சிறு பிரம்புக்கூடையில் பழம், தேங்காய், வெற்றிலைப்பாக்கு, சூடம், ஊதுவத்தி, நெய் இவற்றை எடுத்துக் கொண்டாள். தன் மகள் மணிமொழியை அழைத்துக் கொண்டு முருகன்கோயிலுக்குப் புறப்பட்டாள். அவ்வாறு செல்லும் போது கந்தரநுபூதி என்ற மந்திரநூலைப் பாராயணம் செய்து கொண்டே இடப்புறம் ஓரமாக நடந்தாள். மணிமொழி வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தாள். சாலம்மா கோயிலில் விளக்கில் நெய்விட்டு ஆலயத்தை வலம் வந்தாள். முருகனின் கருணையை எண்ணி உள்ளம் உருகினாள். பிரகாரத்தில் உள்ள ஏழைகளுக்குச் சில்லறைக் காசுகளை கொடுத்தாள். தெய்வமே! இவர்களின் துயரம் போக அருள்செய், என்று வேண்டிக் கொண்டாள்.
சந்நிதியில் முருகனுக்கு அபிஷேகமாகி அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். சாலம்மா மகளுடன் அமர்ந்து முருகனின் சடாக்ஷர மந்திரத்தை ஓதினாள். மணிமொழி,அம்மா! நேரமாகிறது. சுவாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்குப் போகலாம். வா, என்றாள். சாலம்மா, மகளே! ஒரு பெரிய மனிதரையே காலமல்லாத காலத்தில் பார்ப்பது நல்லதல்ல; உரிய காலத்தில்தான் பார்க்க வேண்டும். வீட்டில் தான் இருபத்து நான்கு மணிநேரமும் அடைபட்டுக் கிடக்கிறோம். கோயிலில் சிறிது நேரம் இருந்தால் நல்லது தானே! சமயம் பார்த்துத் தான் கடவுளை வணங்க வேண்டும். இப்போது சுவாமிக்கு அலங்கார சமயம். இது தரிசனத்திற்கு ஏற்ற நேரம் அன்று; அலங்காரம் முடிந்தவுடன் ஆராதனை நிகழும், என்றாள். தொடர்ந்து அவளிடம், ஒவ்வொரு ஆராதனைக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு.
இறைவன் அகரம் முதலாக க்ஷகரம் முடிவாக 51 அட்சரங்களின் வடிவமாக விளங்குகிறான். அதனால் அடுக்காலத்தி என்ற அக்ஷர தீபத்தைக் காட்டுகிறார்கள். 27 நட்சத்திர வடிவமாக இறைவன் விளங்குகிறான் என்பதை உணர்த்தும் பொருட்டு நட்சத்திர தீபம்காட்டுவர். ஐந்து மந்திர வடிவமாக விளங்குகிறான் என்பதை அறிவிக்க ஐந்து தட்டு தீபத்தைக் காட்டுவர். கட்டை துணி இவற்றைக் கொளுத்தினால் முடிவில் கரி சாம்பல் நிற்கும். கற்பூரத்தைக் கொளுத்தினால் சாம்பல் நிற்பதில்லை. சூடம் தீயில் கரைந்து மறைந்து விடுகிறது. ஜீவன் சிவத்தில் ஒன்றுபட வேண்டும் என்ற உண்மையை நாம் உணரும் பொருட்டுக் கற்பூர தீபம் காட்டுவார்கள். கோயிலில் தரிசனம் செய்பவர்கள் இந்த உண்மைகளை அறிந்து வழிபாடு செய்தல் வேண்டும், என்று மணிமொழிக்கு எடுத்துச் சொன்னாள். அதற்குள் கோயில் கண்டாமணி முழங்கியது. சாலம்மாளும், மணிமொழியும் முருகனைத் தரிசித்து மகிழ்ந்தனர். மணிமொழி தாயார் கூறிய அறிவுரைகளை கேட்டு அகம் மகிழ்ந்தாள். குழந்தைகளை அடிக்கடி கோயிலுக்கு அழைத்துச் செல்லவேண்டும். விதிமுறைப்படி, இறைவனை வணங்குவது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.