துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாக எண்ணினான் ராமன். காட்டுக்குப் போ என்று தந்தையின் உத்தரவை கைகேயி வாயிலாகக் கேட்டதும் சிறிதும் மனம் கலங்காமல் அங்ஙனமே ஆகுக என்றான் என்பது வால்மீகியின் வாக்கு. கம்பரோ, கைகேயியின் சொற்கேட்டு ராமன் மகிழ்ந்தான் என்கிறார். ஆனால், ராமன் காட்டுக்குப் போன துயரத்தை பரதன் தான் அனுபவித்தான். செய்தி கேட்டதும், அங்குசத்தாலும் தோமரத்தாலும் புண்பட்ட யானை எனத் தரையில் வீழ்ந்தான் என்கிறார் வால்மீகி. காட்டுக்குச் சென்ற ராமனைக் காணும் வரையில் பரதன் பட்ட துயரத்தை வால்மீகியும் கம்பரும் பலவிதமாக வர்ணித்திருக்கிறார்கள். அயோத்தியா காண்டத்தில் முனிவரெல்லோரும் ஒன்று கூடி ராமனுக்கு முடி சூட்டி, நான் காண தேவர்கள் அருள வேண்டும் என்று பிரதிக்ஞை செய்திருந்தான் பரதன். முடிசூடும் தறுவாயில் என் நெடுநாள் கனவு பலித்தது என்று ஆனந்தக் களிப்புற்றான்.
பக்தி நூல்களில் பக்தர்களுடைய தன்மை பற்றிப் பலவாறு விவரித்திருக்கிறார்கள். வைணவ நூல்களில், வைகுண்டத்தில் நித்திய சூரிகளாக இருப்பவர்கள் கடவுளுக்கு நிகரான தோற்றத்தையும் பெற்று ஆனந்திப்பார்கள் என்று உரைக்கப்பட்டுள்ளது. இதையே பக்தர்கள் வேண்டுவர். ஆனால் பரதனோ இவ்விதமான ஆனந்தத்தைக் கோரவில்லை. தனக்கு முன் பிறந்தோன் என்றும், தந்தை என்றும், சுற்றம் என்றும், தெய்வம் என்றும் ராமனைக் கருதி, அவன் படும் துயரமெல்லாம் தான் பட வேண்டும் என்று, வருத்தத்தைத் தேடி அழைத்துக் கொண்டான். ராமன் காட்டுக்குப் போன செய்தியைக் கேட்டதும், அடியேனும் புல் மீதோ தரை மீதோ படுத்துறங்குவேன். காய்கனியே உட்கொள்வேன். மரவுரி உடுப்பேன். சடைமுடி தரிப்பேன் என்று சபதம் செய்து, ராமன் திரும்பவும் அயோத்தியை அடையும் வரை தானும் நகரத்திற்குச் செல்லாமல் நந்தி கிராமத்திலேயே தங்கி வந்தான். ராமனுடன் கூடவே இல்லாவிடினும் அவன் பாதுகையைத் தலை மேல் வைத்து, பதினான்கு வருடங்கள் அதற்கு ஆராதனம் செய்து ராமனோடு ஒன்றியிருந்த அனுபவத்தைப் பெற்றான்.
பக்தி என்பது அன்பே உருவானது. அன்பே சிவம் என்பார் திருமூலர். பக்தி செலுத்துவதற்கு அபார ஞானம், அசாத்திய சாமர்த்தியம் தேவையில்லை. மனதால், வாயால், செயலால் பக்தி செலுத்தலாம். ராமனிடத்தில் பரதனுக்கு இருந்த அன்புக்கு எல்லையே இல்லை. கரை காணாக் காதலான் என்று குகனுக்குச் சொன்ன வாக்கு பரதனுக்கும் பொருந்தும். ராமபிரானுக்கும் பரதனிடத்தில் அளவிலா அன்பு. தன்னையும் பரதனையும் ஒன்றாகவே கருதினான் என்று கம்பர், ஆழிசூழ் உலகத்தை பரதனே ஆள, தாழிரும் சடைகள் தாங்கி, காட்டில் முனிவரோடு ஏழிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து திரும்பி வா என்று கைகேயி ராமனிடம் சொன்னபோது, ராமன் அவளுக்குக் கூறிய பதில்:
என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேன் பெற்றதன்றோ பக்தருள் சிறந்து பரந்தாமனின் அருளைப் பெற்றவன் பரதனே !