Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » த்ருஷ்டத்யும்னன்
 
பக்தி கதைகள்
த்ருஷ்டத்யும்னன்

மகாபாரதம் என்றால் நாம் அனைவருக்கும் சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் பஞ்ச பாண்டவர்கள். பஞ்சபாண்டவர்களைப் பற்றியும், அவர்களது குணாதிசயங்களும் ஓரளவு நமக்குத் தெரிந்திருக்கும். இந்த மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களில் த்ருஷ்டத்யும்னனும் ஒருவன்.

இந்த த்ருஷ்டத்யும்னனைப் பற்றி அறிய வேண்டுமென்றால், துரோணரிடம் இருந்து தொடங்க வேண்டும். அப்போதுதான் த்ருஷ்டத்யும்னன் பிறந்ததற்கான காரணம் புரியும். துரோணர் தன் சீடர்களிடம், மாணவ மணிகளே ! நீங்கள் அனைவரும் வில் வித்தை முதலான போர்க்கலைகளில் நன்றாகத் தேர்ச்சி பெற்று விட்டீர்கள். குருநாதரான நான் இப்போது உங்களிடம் குருதட்சணை கேட்கப்போகிறேன். நான் கேட்கப்போவது பொன்னோ பொருளோ அல்ல. விசித்திரமான குருதட்சணை. ஆம் ! விசித்திரம்தான். சீடர்களான நீங்கள் போய் பாஞ்சால மன்னனான துருபதனைக் கட்டிவந்து, உங்கள் குருவான என் முன்னால் நிறுத்துங்கள். நான் கேட்கும் குருதட்சணை இதுதான் என்றார். அதை நிறைவேற்றுவதற்காக, முதலில் கௌரவர்கள் போய் துருபதனுடன் போரிட்டுத் தோற்றுப்போய்த் திரும்பினார்கள். அதன்பின், அர்ஜுனனும் பீமனும் துருபதனுடன் போரிடப் போனார்கள். துருபதனை வென்று, பிடித்துக் கட்டித் துரோணரின் முன்னால் நிறுத்தினார்கள். அப்போது, துருபதன் அவமானத்தால் தலைகுனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அரசரான துருபதனுக்கு ஏன் இந்த நிலை? துரோணர் ஏன் இவ்வாறு செய்யவேண்டும்? இளம் வயதில், துரோணரும் இளவரசரான துருபதனும் ஒரே குருகுலத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள். இணைபிரியாத நட்பு. அப்போதெல்லாம் துருபதன், துரோணா ! எதிர்காலத்தில் நான் அரசனாக ஆவேன். அப்போது, என் நண்பனான உனக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியைத் தருவேன். இது சத்தியம் என்று சொல்லுவார்.

அதன்படியே எதிர்காலத்தில் துருபதனும் அரசராக ஆனார். அப்போது துரோதணரின் நிலையோ, வறுமையின் பிடியில் சிக்கி வாடிப்போய் இருந்தது. கல்யாணமாகி குடும்பக்கணக்கில் ஒரு குழந்தை கூடிப்போயிருந்தது. அந்தக் குழந்தைக்குப் பாலுக்கு வழி இல்லை. மனம் வெதும்பிய துரோணர், சரி ! நம் நண்பன் துருபதன்தான் இப்போது அரசனாகி இருக்கிறானே ! அவனிடம் போய் ஒரு பசுமாடு கேட்கலாம். அவன் கொடுப்பான். அதை வைத்து நம் பிள்ளையின் பசியைத் தீர்க்கலாம் என்று எண்ணி துருபதனிடம் போனார். நடந்ததையெல்லாம் சொல்லி உதவி கேட்டார். ஆனால், துருபதன் துரோணரை அவமானப்படுத்தி விரட்டிவிட்டார். அன்று துருபதன் போட்ட அவமான விதைகள் துரோணர் உள்ளத்தில் முளைத்து வளர்ந்து, இதோ... இப்போது அர்ஜுனன் மூலம் துருபதனை அவமானப்படுத்திவிட்டன. அதனால்தான் துரோணர் முன்னால் தலைகுனிந்து நிற்கும்படியான நிலை துருபதனுக்கு ஏற்பட்டது. துரோணரின் தலையையே வாங்கும்படியான நிகழ்ச்சிக்கும் இது அஸ்திவாரம் போட்டது. ஆம் ! துருபதன் ஒரு தீர்மானத்துக்கு வந்தார். என்னைக் கட்டிப் பிடித்து இழுத்து வரச்சொல்லி அவமானப்படுத்திய துரோணரைக் கொல்ல ஒரு பிள்ளை வேண்டும். துரோணன் பேச்சைக் கேட்டு, என்னைப் போர்க்களத்தில் வென்ற அர்ஜுனனை மணம் செய்துகொள்ள ஒரு மகள் வேண்டும் என்று தீர்மானித்த துருபதன் ஒரு யாகம் செய்தார். யாகத்தின் முடிவில், மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறத்தில், அஞ்ச வைக்கும் உருவத்துடன் கிரீடம், கவசம், கத்தி, வில், அம்பு ஆகியவற்றைக் தரித்தபடி வீரன் ஒருவன் கர்ஜனை செய்தபடி யாக அக்னியிலிருந்து எழுந்தான். அப்போது ஆகாயத்திலிருந்து, இவன் துரோணருக்குச் சீடனாகவும் யமனாகவும் பிறந்திருக்கிறான். இந்த ராஜபுத்ரன், பாஞ்சாலர்களின் பயத்தைப் போக்கிப் புகழை உண்டாக்குவான். இவன் துரோணரை வதம் செய்து, துருபத மன்னனின் துயரத்தை ஒழிப்பதற்காகப் பிறந்தவன் என ஓர் அசரீரி சொல்லியது.

யாக அக்னியிலிருந்து பிறந்த குமாரன்தான் த்ருஷ்டத்யுனன். த்ருஷ்டம் என்றால், வெல்ல முடியாதவன் என்பது பொருள். த்யும்னன் என்னும் தங்கமயமான கவச குண்டலங்களோடு பிறந்ததால், அக்குமாரனுக்கு த்ருஷ்டத்யும்னன் எனப் பெயரிட்டார்கள். இவன் தோன்றிய யாக அக்னியிலிருந்து, இவனுக்குப் பிறகு தோன்றியவளே பாஞ்சாலி. ஆகவே, த்ருஷ்டத்யும்னன் தோன்றியது. துரோணரை வதம் செய்வதற்காகவே! வீரனான த்ருஷ்டத்யும்னன், வேதத்திலும் வல்லவனாக ஆனான். இவ்வளவு தகவல்களும் துரோணருக்குத் தெரியும். இருந்தும் அவர் த்ருஷ்டத்யும்னனைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்து, அவனுக்கு முறைப்படி வில் வித்தையைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். துரோணர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும். என்னைக் கொல்வதற்காகவே த்ருஷ்டத்யும்னன் பிறந்திருக்கிறான் என்று விதி இருக்கும்போது, அதை என்னால் விலக்க முடியாது. அதற்காக, எனக்குத் தெரிந்திருக்கும் வித்தையை நான் அவனுக்குச் சொல்லிக் கொடுக்காமல் இருப்பது தர்மமாகாது என்று நினைத்தே துரோணர் த்ருஷ்டத்யும்னனுக்கு வில் வித்தையைச் சொல்லிக் கொடுத்தார். அவர் தனக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் சொல்லிக் கொடுத்தார். த்ருஷ்டத்யும்னனும் தன் கூர்த்த மதியால் அதிவிரைவிலேயே அனைத்தையும் கற்றுக்கொண்டான். அதன் பலனாக, புகழ்பெற்ற பாரத யுத்தத்தில் பாண்டவர்களின் படைகளுக்குத் தலைவனாக ஆனான் த்ருஷ்டத்யும்னன். கண்ணனும் தர்மரும் த்ருஷ்டத்யும்னனைத்தான் போரின்போது சேனாதிபதி ஆக்கினார்கள். போர்க்களத்தில் துரோணரால், பாண்டவ சேனைக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது. அப்போது பாண்டவர்களைப் காப்பதற்காகக் கண்ணன், இந்தத் துரோணர் வில்லுடன் இருக்கும் வரையில், இவரை யாராலும் வெல்ல முடியாது. இவரும் வில்லைக் கீழே வைக்க மாட்டார். இந்த யுத்த களத்தில் பாண்டவர் பக்கம் இருக்கும் வீரர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால், இந்தத் துரோணர் யுத்தம் செய்யக் கூடாது. இவருடைய பிள்ளையான அச்வத்தாமா, யுத்தத்தில் கொல்லப்பட்டான் என்று யாராவது இவரிடம் சொன்னால், இவர் யுத்தம் செய்யமாட்டார். உங்களில் யாராவது ஒருவர் துரோணரிடம் சென்று, அச்வத்தாமா போர்க்களத்தில் கொல்லப்பட்டான் என்று சொல்ல வேண்டும் என வற்புறுத்தினார்.

வேறு வழியற்ற நிலையில் தர்மரும் அவ்வாறே செய்ய ஒப்புக்கொண்டார். உடனே பீமன் சென்று (யுத்த களத்தில் இருந்த) மாளவ தேச மன்னன் இந்திர வர்மாவின் யானையான அச்வத்தாமா என்ற பெயர் கொண்ட யானையைக் கொன்றான். பிறகு பீமன் துரோணரை நெருங்கி, அச்வத்தாமா கொல்லப்பட்டான் எனக் கூறினான் (அச்வத்தாமா என்ற யானை கொல்லப்பட்டதை நினைத்தே பீமன் அவ்வாறு சொன்னான்). பீமன் வார்த்தைகளை துரோணர் நம்பவில்லை. அதனால் தர்மரிடம் அவர், அச்வத்தாமா, கொல்லப்பட்டானா இல்லையா? எனக் கேட்டார். அப்போது கண்ணன் சொற்படி தர்மர் நிலைமையைப் புரிந்துகொண்டார். உடனே அவர் துரோணரின் காதுகளில் விழும்படியாக, அச்வத்தாமா ஹத: குஞ்சர: என்ற வாக்கியத்தில், அச்வத்தாமா ஹத: (அச்வத்தாமா கொல்லப்பட்டான்) என்பதை உரத்த குரலில் சொன்னார். அதன்பின் உள்ள குஞ்சர: (யானை) என்ற வார்த்தையை மெல்லச் சொன்னார். அதாவது, துரோணரின் காதுகளில் அந்த வார்த்தை விழாதவாறு சொன்னார். அவ்வளவுதான் ! விளைந்தது விபரீதம். தர்மர் அவ்வாறு பொய் சொன்னதும், அதுவரையில் தரையிலிருந்து நான்கு அங்குல உயரத்தில் தரையைத் தீண்டாமலேயே இருந்த தர்மருடைய ரதம் தரையைத் தொட்டுவிட்டது. ரதத்தில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளின் கால்கள் பூமியைத் தொட்டன. (இந்த இடத்தில் மக்கள் மத்தியில் பரவியிருக்கும் ஒரு பொய்யான தகவல்: தர்மர், அச்வத்தாமா ஹத: குஞ்சர: என்று சொன்னார். அப்போது குஞ்சர: என்னும் வார்த்தை துரோணரின் காதுகளில் விழாதபடி, கண்ணன் தன் பாஞ்சஜன்யம் என்னும் சங்கை எடுத்து பம்பம் என்று முழக்கிவிட்டார். இது நல்லாப்பிள்ளை பாரதம் சொல்லும் தகவல்.

பீமன் மாளவ மன்னனின் யானையைக் கொன்றதோ, பீமன், அச்வத்தாமா இறந்து விட்டான் என்று சொன்னதோ, தர்மர் பொய் சொன்னதும் அவர் தேர் தரையைத் தொட்டதோ - இங்கே நல்லாப்பிள்ளை பாரதத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் என்ன செய்வது? பாமரர்கள் நடுவில் நல்லாப்பிள்ளை பாரதமும், படித்தவர்கள் மத்தியில் வில்லி பாரதமும்தான் பரவியிருக்கின்றன. வியாஸர், பாரதத்தில் சொன்ன அற்புதமான, உண்மையான தகவல்கள் தெரியாமலே போய்விட்டன.) தர்மர் மூலமாக அச்வத்தாமாவின் முடிவைப் பற்றிக் கேள்விப்பட்ட துரோணர், புத்திர சோகத்தால் உள்ளம் உடைந்தார்; அறிவு நிலைகுலைந்தது; தன் கைகளில் இருந்த வில்லைக் கீழே எறிந்தார். தன் மகனான அச்வத்தாமாவை நினைத்துக் கதறினார். ரதத்தின் நடுவில் உட்கார்ந்தபடி, உயிரை விடுவதற்காக யோக நிஷ்டையை அடைந்தார். இதுதான் நேரம் என்று, துரோணரைக் கொல்வதற்காகவே பிறந்திருந்த த்ருஷ்டத்யும்னன், கையில் இருந்த வில்லைக் கீழே வைத்துவிட்டு, ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு வேகவேகமாகத் துரோணரை நோக்கி ஓடினான். பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், ஆ ! ஆ ! கெட்டான் த்ருஷ்டத்யும்னன் என்று கத்தினார்கள். த்ருஷ்டத்யும்னன் அப்போது எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அவன் வெகுவேகமாக ஓடிப்போய் துரோணரை நெருங்கினான்; துரோணரின் தலைமுடியைப் பிடித்து, அவர் தலையைத் துண்டித்தான்; துண்டிக்கப்பட்ட துரோணரின் தலையை கௌரவர்களின் முன்னால் போட்டான். அனைவரும் த்ருஷ்டத்யும்னனின் செயலைக் கண்டு சிதறி ஓடினார்கள். த்ருஷ்டத்யும்னன் எதற்காகப் பிறந்தானோ, அந்தச் செயலை முடித்து விட்டான். த்ருஷ்டத்யும்னன் பிறந்ததற்கான காரணமும் காரியமும் முடிந்துவிட்டன. ஆனால், அவன் முடிய வேண்டுமல்லவா? அதற்காக அங்கே போர்க்களத்தில் ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. என் தந்தையைக் கொன்ற த்ருஷ்டத்யும்னனைக் கொல்வேன் என்று சபதம் செய்தது. ஆம் ! அச்வத்தாமாதான் அது. அச்வத்தாமா சபதம் செய்துவிட்டானே தவிர, அந்தச் சபதம் பாரத யுத்தம் முடிந்த பிறகு, அதுவும் துரியோதனன் கீழே விழுந்த பிறகுதான் நிறைவேறியது. பாரத யுத்தத்தின் முடிவில் துரியோதனன் பீமனால் அடிக்கப்பட்டுத் தொடை முறிந்து, ரத்தம் வழியக் கீழே கிடந்தான். அப்போது அவனைப் பார்த்து அச்வத்தாமா, கிருபாசார்யார், கிருதவர்மா ஆகிய மூவரும் கலங்கிப் பலவாறாகப் புலம்பினார்கள்.

அப்போது துரியோதனன், அச்வத்தாமாவை சேனாதிபதி ஆக்கினான். உடனே அச்வத்தாமா, ஆயுதங்களை எல்லாம் கீழே வைத்துவிட்டு, யோக நிலையில் இருந்த என் தந்தையைக் கொன்ற பாவியான த்ருஷ்டத்யும்னனைக் கொல்லப்போகிறேன் என்று சொல்லி, பாண்டவர் பாசறையை நோக்கிப் போனான். அவன் சொற்படி கிருபாசார்யாரும், கிருதவர்மாவும்கூடப் போனார்கள். அவர்கள் போன நேரம்... கண்ணனும் பாண்டவர்களும் அங்கு இல்லை. தன்னைத் தாக்காதபடி சிவபெருமானை வேண்டி, அவர் அருளைப் பெற்று பாசறைக்குள் நுழைந்தான். கிருபாசார்யாரும் கிருதவர்மாவும் பாசறையின் வாயிலில் நின்றார்கள். பாசறைக்குள் நுழைந்த அச்வத்தாமா, அங்கு தூங்கிக் கொண்டிருந்த அனைவரையும் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். அவன் பார்வையில் த்ருஷ்டத்யும்னன் தூங்குவது தெரிந்தது. உடனே, அச்வத்தாமா த்ருஷ்டத்யும்னனை நெருங்கி உற்றுப் பார்த்தான். வெண்பட்டாலான பெரிய விரிப்பினால் மூடப்பட்டு, வாசனை மிகுந்த பூமாலைகளோடு கூடிய படுக்கையில் த்ருஷ்டத்யும்னன் தூங்கிக்கொண்டிருந்தான். வாசனை மிகுந்த புகை, மெல்லியதாகப் படுக்கையைச் சுற்றி வீசிக்கொண்டிருந்தது. தன் பலத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட த்ருஷ்டத்யும்னன், எந்தவிதமான பயமும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தான். அந்த நிலையில் த்ருஷ்டத்யும்னனைப் பார்த்த அச்வத்தாமா, அவனைத் தன் காலால் உதைத்தான். த்ருஷ்டத்யும்னன் திடுக்கிட்டு விழித்து, எதிரில் இருந்த அச்வத்தாமாவைப் பார்த்து எழுந்திருக்க முயற்சி செய்தான். அச்வத்தாமா விடவில்லை. இரண்டு கைகளாலும் த்ருஷ்டத்யும்னனின் தலைமயிரைப் பிடித்து, அவனை அப்படியே தரையில் தேய்த்தான். த்ருஷ்டத்யும்னனால் அப்போது ஏதும் செய்ய முடியவில்லை. அச்வத்தாமா, அடங்காத கோபத்தோடும் குரூரமான சிந்தையோடும் வில்லிலிருந்த நாண் கயிற்றை அவிழ்த்து, த்ருஷ்டத்யுனனின் கழுத்தில் கட்டி இறுக்கினான். த்ருஷ்டத்யும்னன் அலறினான். அவன் கழுத்திலும் மார்பிலும் கால்களிலும் ஏறி மிதித்தான் அச்வத்தாமா.

த்ருஷ்டத்யும்னன் கை நகங்களால் அச்வத்தாமாவைக் கீறியபடியே, குரு புத்ரா! என்னைக் கொன்றுவிடு ! தாமதம் செய்யாதே ! உன்னால் கொல்லப்பட்டு, நான் புண்ணிய உலகங்களை அடைவேன் என்று நா குழறியபடியே வேண்டினான். அச்வத்தாமா கொதித்தான். குலத்தைக் கெடுத்த பாவி ! குருநாதர்களைக் கொல்லுகிறவர்களுக்குப் புண்ணிய உலகங்கள் கிடையாது. என் தந்தையைக் கொன்ற உன்னை இப்போதே கொல்வேன் என்று சொல்லி, த்ருஷ்டத்யும்னனை, மர்ம ஸ்தானங்களில் மதயானை உதைப்பதைப் போல் உதைத்துக் கொன்றான். த்ருஷ்டத்யும்னன் வாழ்நாள் முடிந்தது. யாக அக்னியிலிருந்து பிறந்தவன், பாஞ்சாலியின் சகோதரன், வீரன், வேதங்களில் வல்லவன், துரோணரைக் கொல்வதற்காகவே பிறந்தவன். துரோணரிடமே வில், வித்தை கற்றவன். பதினெட்டு நாட்கள் நடந்த பாரத யுத்தத்தில், பாண்டவர்களின் படைக்குச் சேனாதிபதியாக இருந்தவன். வீர புருஷரான துரோணரைக் கொன்றவன். சிரஞ்சீவியான அச்வத்தாமாவின் கரங்களால் முடிவைத் தழுவியவன் என்று பல பெருமைகளைக் கொண்டவன் த்ருஷ்டத்யும்னன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar