Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஜயத்ரதன்!
 
பக்தி கதைகள்
ஜயத்ரதன்!

அழகான பெண் ஒருத்தி, ஆள் அரவம் இல்லாத காட்டில் தன்னந்தனியாக நின்றுகொண்டிருந்தால் கேட்கவா வேண்டும்? அவனவன் மோதிப் பார்க்கமாட்டானா? அதுவும் செல்வம், ஆள், அம்பு, சேனை, வாகனம், பதவி என எல்லாம் இருப்பவன் கண்ணில் அந்த அழகான பெண் அகப்பட்டு விட்டால், என்னென்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். பாண்டவர்கள் வனவாசம் இருந்த காலம். அவர்கள் அனைவரும் திரௌபதியுடன் காம்யக வனத்தில் இருந்தார்கள். அப்போது அவர்களுடன், மிகச் சிறந்த தவசீலரும் ரிஷியுமான த்ருணபிந்துவும் தௌம்யர் என்ற புரோகிதரும் இருந்தார்கள். ஒரு நாள்... பாண்டவர்கள் ஐவரும் காட்டுக்குள் வேட்டையாடப் போன சமயம், திரௌபதி தான் இருந்த குடிசை வாசலில் நின்றுகொண்டிருந்தாள். அருகிலேயே ஒரு பெரிய பர்ணசாலையில் (இலை தழைகளால் செய்யப்பட்டது) த்ருணபிந்து, தௌம்யர் முதலானோர் இருந்தார்கள். அந்த நேரத்தில், சிந்து தேசத்தின் அரசனான ஜயத்ரதன் என்பவன் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தோடு சால்வ தேசத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். அவனுடைய படைகளும், அவனுக்குப் பக்கவாத்தியம் (ஜால்ரா) வாசிக்கும் மன்னர்களும் ஜயத்ரதனுடன் போனார்கள். ஜயத்ரதனுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்று நினைக்க வேண்டாம். அவன் ஏற்கெனவே திருமணம் ஆனவன்தான். துரியோதனன் முதலான கௌரவர்களின் ஒரே தங்கையான துச்சலை என்பவளின் கணவன்தான் அந்த ஜயத்ரதன். அவன் காம்யக வனத்தின் வழியாகப் போனபோது, திரௌபதியைப் பார்த்துவிட்டான். அவ்வளவுதான் ! ஜயத்ரதனுடைய ரதம் அங்கேயே நின்றுவிட்டது. உடன் வந்தவர்களும் பயணத்தை நிறுத்தினார்கள். ஜயத்ரதன் தன்னுடன் வந்த கோடி காச்யன் எனும் மன்னனை அழைத்து, நீ போய், அவள் யாரென்ற தகவலைத் தெரிந்து வா என்று ஏவினான். கோடி காச்யன் உடனே போய் திரௌபதியிடம் விசாரித்தான். அவளும், ஐயா ! என்னைப் போன்ற பெண்கள், உங்களைப் போன்ற அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசக் கூடாது. இருந்தாலும், இப்போது இங்கே வேறு யாரும் உதவிக்கு இல்லாததால், நானே உங்களுக்குப் பதில் சொல்கிறேன். நான் துருபத மன்னரின் புதல்வி. என் பெயர் க்ருஷ்ணை. திரௌபதி என்றும் சொல்வார்கள். மகா வீரர்களான பஞ்ச பாண்டவர்களின் மனைவி நான். துரியோதனனிடம் வஞ்சக சூதில் அனைத்தையும் இழந்து, இங்கே வன வாசத்துக்காக வந்திருக்கிறோம். பஞ்ச பாண்டவர்கள் வேட்டைக்குப் போயிருக்கிறார்கள் எனச் சொன்னாள்.

கோடி காச்யன் அப்படியே போய், ஜயத்ரதனிடம் இதைச் சொன்னான். ஏற்கெனவே திரௌபதியைப் பார்த்ததில் இருந்து தன் வசம் இழந்திருந்த ஜயத்ரதன், விடு ! நானே போய் அவளிடம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு திரௌபதியிடம் வந்தான். அங்கு போனதும் ஜயத்ரதன், மரியாதையாக ஒரு சில வார்த்தைகள் பேசி நலம் விசாரித்துப் பேச்சைத் தொடங்கினான். திரௌபதியும் ஒரு சில வார்த்தைகளில் பதில் சொல்லி ஜயத்ரதனை உபசரித்து, அவனுக்கு உட்கார ஆசனமும் கொடுத்தாள். அதன்பிறகு, காலை ஆகாரம் தருகிறேன், சாப்பிடுங்கள். சற்று நேரத்தில் தர்மபுத்திரரும் அவர் தம்பிகளும் வேட்டை முடித்து வந்துவிடுவார்கள். அவர்களும் உங்களை உபசரித்து, மேலும் வேண்டிய உணவு வகைகளைக் கொடுப்பார்கள் என்றாள். ஜயத்ரதன் சாப்பிடவா வந்திருக்கிறான்? வந்த நோக்கத்தை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினான். சாப்பாடு என்ன சாப்பாடு ! நீ சொன்னதே, எனக்குச் சாப்பிட்டதைப் போல ஆகிவிட்டது. அத்துடன் இல்லாமல் இன்னும் வேறு எனக்கு உபசாரம் செய்ய விரும்புகிறாய். வா ! என்னுடன் வந்து ரதத்தில் ஏறு ! நாட்டை இழந்து, செல்வத்தை இழந்து, தரித்திரர்களாக இந்தக் காட்டில் சுற்றிக்கொண்டிருக்கும் பாண்டவர்களால் நீ என்ன சுகத்தைக் கண்டாய்? படித்த பெண்கள், செல்வம் இல்லாத கணவனை விலக்கிவிட வேண்டும். செல்வம் உள்ளவனைத் தேடிப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஆகையால், நீ பாண்டவர்களை விட்டு விலகு. என்னைக் கணவனாக ஏற்றுக்கொள். சிந்து தேசத்துக்கும், சௌவீர தேசத்துக்கும் ராணியாக இருக்கலாம் என்றான். திரௌபதி சீறினாள்; சீ, மதி கெட்டவனே ! இப்படிப் பேச உனக்கு வெட்கமாக இல்லையா ? உன் மனைவியான துச்சலை, துரியோதனன் முதலானவர்களுக்கு மட்டும் தங்கையல்ல; பஞ்சபாண்டவர்களுக்கும் அவள் தங்கைதான். அந்த முறைப்படி பார்த்தால், நான் உன் சகோதரி தங்கை. என்னை விரும்பாதே ! பாவம் செய்யாதே ! பஞ்சபாண்டவர்களுக்குத் தெரிந்தால், உன்னை ஒழித்து விடுவார்கள் என எச்சரித்தாள்.

காமத்தால் கருத்தை இழந்தவனுக்குத் தர்மமாவது அதர்மமாவது ! திரௌபதியின் எச்சரிக்கைகள் எதுவுமே பலன் அளிக்கவில்லை. ஜயத்ரதன், திரௌபதியைப் பிடித்து பலவந்தமாகத் தன் ரதத்தில் ஏற்றிவிட்டான். திரௌபதி அலறினாள். அதைக் கேட்ட தௌம்யர் ஓடிவந்து தடுத்தார். முடியுமா? ஜயத்ரதன் திரௌபதியுடன் ரதத்தை ஓட்டிக்கொண்டு போய்விட்டான். அவன் படைகள் பின்தொடர்ந்தன. பீமா ! அர்ஜுனா ! என்று அலறியபடியே தௌம்யரும் பின்தொடர்ந்தார். நடந்தது எதுவுமே தெரியாமல், காட்டில் நான்கு திசைகளிலும் பிரிந்து வேட்டையாடிக் கொண்டிருந்த பஞ்சபாண்டவர்கள் ஒன்று கூடினார்கள். அப்போது தர்மர், இந்தக் காட்டில் மிருகங்களும் பறவைகளும் எழுப்பும் கூச்சல், ஏதோ தீமை வருவதைப் போல அபசகுனங்களாகத் தெரிகின்றன. காம்யக வனம் நமக்கு ஆபத்தை உண்டாக்குவதைப் போலத் தோன்றுகின்றது. இனம்புரியாத பயத்தால் என் உள்ளம் நடுங்குகிறது. ஆகவே, வேட்டையாடியது போதும். உடனே, நாம் இருப்பிடம் திரும்ப வேண்டும் என்றார். அவசர அவசரமாக ஐவரும் திரும்பினார்கள். அவர்களின் பர்ணசாலைகள் அமைந்திருந்த எல்லையில், திரௌபதியின் வேலைக்காரச் சிறுமி தாத்ரேயிகை என்பவள் அழுது கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் பாண்டவர்கள் அவளிடம் ஓடினார்கள். அவள் சிந்து தேசத்து அரசனான ஜயத்ரதன், தேவியைத் (திரௌபதியை) தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான். இதோ ! இந்த வழியாகத்தான் போயிருக்கிறான். செடிகள் எல்லாம் ஓடிந்து போயிருக்கின்றன, பாருங்கள் ! அவை இன்னும் வாடக்கூட இல்லை. ஆகவே, ஜயத்ரதன் நீண்ட தூரம் போயிருக்க முடியாது. சீக்கிரம் போய் தேவியை மீட்டு வாருங்கள் ! என்று சொல்லிக் கண்ணீர் சிந்தினாள். அவளுக்கு ஆறுதல் சொன்ன பாண்டவர்கள், அவள் காட்டிய வழியிலே வேகமாகப் போனார்கள். சற்று தூரத்திலேயே, ஜயத்ரதன் படைகள் போனதால் காற்றில் பறந்த புழுதியைக் கண்டு, வேகத்தை அதிகப்படுத்தினார்கள். தௌம்யர் அலறிய, பீமா ! அர்ஜுனா ! என்ற அலறல் கேட்டது. பாண்டவர்கள் அவரிடம், இனிமேல் நீங்கள் அவர்களைப் பின்தொடராதீர்கள். இங்கு வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு, ஜயத்ரதனின் படைகளை நோக்கி ஓடினார்கள். சற்று நேரத்திலேயே ஜயத்ரதனின் படைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டன.

அதைப் பார்த்த ஜயத்ரதன் நடுங்கிப் போய், உயிர் தப்பினால் போதும் என்று ரதத்திலிருந்து திரௌபதியைக் கீழே இறக்கிவிட்டு, ரதத்தைக் கிளப்பிக் கொண்டு ஓடிப் போனான். அப்போது பீமன் தர்மரிடம், அண்ணா ! திரௌபதியை அழைத்துக்கொண்டு நீங்கள் திரும்புங்கள் ! அந்தப் பாவி ஜயத்ரதனைக் கொன்றுவிட்டு, நாங்கள் பின்னால் வருகிறோம் என்றான். தர்மரோ அந்த நிலையிலும், பீமா ! ஜயத்ரதன் கெட்டவன்தான். ஆனால், நம் தங்கையின் கணவன் அவன். காந்தாரியின் மருமகன். ஜயத்ரதனைக் கொன்றால், அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள். ஆகையால், அவனைக் கொல்ல வேண்டாம் என்றார். ஆனால். திரௌபதி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக்காம்பான அந்த ஜயத்ரதனை, அவன் எவ்வளவு கெஞ்சினாலும் விடாதீர்கள் ! அவள் பட்ட பாடு அவளுக்குத்தான் தெரியும் ! தர்மர் அமைதியாக திரௌபதியை அழைத்துக்கொண்டு, தௌம்யருடன் அங்கிருந்து திரும்பினார். நகுலனும் சகாதேவனும் பின்தொடர்ந்தார்கள். பீமனும் அர்ஜுனனும் ஜயத்ரதனைத் தேடி ஓடி, அவன் ரதத்தில் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அர்ஜுனன் அம்புகளை ஏவி, குதிரைகளைக் கொன்று ஜயத்ரதனின் ரதத்தைச் செயலிழக்கச் செய்தான். ஜயத்ரதன், ரதத்திலிருந்து குதித்து ஓடினான். அவன் தலையிலிருந்த கிரீடம் கீழே விழுந்தது. உயிர் பயத்தில் ஓடிய ஜயத்ரதன், அங்கங்கே மரங்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி ஒரு புதரில் போய் மறைந்துகொண்டான். ஆனால், ஜயத்ரதனை பீமன் பார்த்துவிட்டான். கோபம் தலைக்கு ஏறியது. ஜயத்ரதனின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி மேலே எறிந்து, பூமியில் போட்டுத் தேய்த்தான். பீமனின் தாக்குதலைத் தாங்காமல், ஜயத்ரதன் கதறி எழுந்திருக்க முயற்சி செய்தான். அவனைத் தலையில் உதைத்து, கால்களால் மறுபடியும் உதைத்து, கைகளால் குத்தினான் பீமன். ஜயத்ரதன் மயங்கி விழுந்தான். அப்போதும் பீமனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அவனை அர்ஜுனன் தடுத்து, இவனைக் கொல்லக் கூடாது என்று தர்மர் சொன்னாரல்லவா? என்றான்.

அப்போது ஜயத்ரதனுக்கு மயக்கம் தெளிந்தது. ஆத்திரத்தை அடக்க முடியாத பீமன் ஓர் அர்த்தசந்திர (பிறைநிலவைப் போன்ற) பாணத்தை எடுத்து, ஜயத்ரதனின் தலையில் ஐந்து குடுமிகளை உண்டாக்கினான் (உச்சிக்குடுமி என்கிறோமே, அதைப் போல ஐந்து). அத்துடன், அறிவு கெட்டவனே ! இனிமேல் யார் கேட்டாலும், நான் பாண்டவர்களின் அடிமை என்று நீ சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லச் சம்மதித்தால், உன்னை உயிரோடு விடுவேன். இல்லாவிட்டால், இப்போதே கொன்றுவிடுவேன் என்றான் பீமன். ஜயத்ரதன் மறுப்பானா என்ன? ஒப்புக்கொண்டான். அதன்பிறகு ஜயத்ரதனைக் கயிற்றால் நன்றாகக் கட்டி, தர்மர்முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்கள். தர்மர் ஜயத்ரதனை மன்னித்து அறிவுரை சொல்லி அனுப்பினார். பாண்டவர்களைப் பொறுத்தவரை, ஜயத்ரதன் ஒரு சிறு துரும்புதான். ஆனால் அந்தத் துரும்பு, பாண்டவர்களின் கண்ணையே குத்தப்போகிறது என்பதை, தர்மர் உட்பட யாருமே அறியவில்லை. கடன், நெருப்பு, பகை முதலானவற்றை மீதம் வைக்கக் கூடாது. முழுவதுமாக முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை முடித்துவிடும் என்பதை பாண்டவர்கள் அறியவில்லை போலும். அதனால்தான், பெரும் பாதகம் விளையப்போவதை அறியாமல் பகைவனான ஜயத்ரதனை உயிருடன் விட்டுவிட்டார்கள். பாண்டவர்களால் விடுவிக்கப்பட்ட ஜயத்ரதன், தன் அரண்மனைக்குப் போகவில்லை. மாறாக, கங்கைக்கரைக்குப் போய்விட்டான். அங்கே சிவபெருமானை நோக்கிக் கடுமையாகத் தவம் செய்தான். ஜயத்ரதனின் தவம், அவன் முன்னால் சிவபெருமானை நிறுத்தியது. ஆம் ! சிவபெருமான் நேரில் தோன்றினார். ஜயத்ரதன் செய்த பூஜையை ஏற்றுக்கொண்டார். வரம் தருவதாகவும் சொன்னார். ஜயத்ரதன், பாண்டவர்கள் ஐவரையும் நான் வெல்ல வேண்டும் என வரம் கேட்டான். சிவபெருமான் அதை மறுத்தார். ஜயத்ரதா ! சக்திவாய்ந்த பாசுபதாஸ்திரத்தை ஏற்கெனவே அர்ஜுனன் என்னிடமிருந்து பெற்றுவிட்டான். தெய்வ அஸ்திரங்களும் ஏராளமாக அவனிடம் உள்ளன. மேலும், கண்ணனையே துணையாகக் கொண்ட அர்ஜுனனை, தேவர்களாலும் வெல்ல முடியாது எனும்போது, நீ எம்மாத்திரம்? ஆகையால், அர்ஜுனனைத் தவிர மற்ற நால்வரையும் அவர்கள் படைகளையும், ஒரே ஒரு நாள் மட்டும் நீ தடுப்பாய், வெல்வாய் என்று சொல்லி மறைந்தார். ஜயத்ரதன், தன் அரண்மனைக்குத் திரும்பினான். ஜயத்ரதன் பெற்ற வரம் வேலை செய்தது. அதனால், பாண்டவர்கள் கதறினார்கள். எப்படி? பாண்டவர்களால் அவமானப்படுத்தப்பட்ட ஜயத்ரதன், அடிபட்ட பாம்பைப் போல நெஞ்சில் சீற்றத்துடன் பாண்டவர்களைப் பழி தீர்க்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்தான். அதற்கான வாய்ப்பு, அவனுக்கு பாரத யுத்தத்தின்போது கிடைத்தது. அதுவே, அவன் வாழ்நாளை முடிக்கும் வாய்ப்பாகவும் அமைந்தது.

பீஷ்மருக்குப் பிறகு துரோணர், கௌரவப் படைகளுக்குத் தலைமை தாங்கியிருந்தார். கௌரவர்களால் பாண்டவர்களின் தாக்குதலைத் தாங்க முடியவில்லை. காய்ந்துபோன வைக்கோல் கட்டுகளின் மேல் தீப்பந்தங்களை வீசி எரிப்பதைப் போல, அர்ஜுனன் தன் அம்புகளை வீசி கௌரவ சேனையை எரித்துக் கொண்டிருந்தான். தீப்பற்றி எரியும்போது காற்று வீசி அதற்கு உதவுவதைப் போல, அர்ஜுனனின் பிள்ளையான அபிமன்யு துரியோதனனின் படைகளுக்குப் பேரழிவை உண்டாக்கிக் கொண்டிருந்தான். உடனடியாகப் பாண்டவர்களைப் பிரித்து, அவர்களை பலவீனப்படுத்தியாக வேண்டிய சூழ்நிலையில் கௌரவர்கள் இருந்தார்கள். அர்ஜுனனைப் பிரித்தால் போதும். மீதி உள்ள நான்கு பேரையும் நான் வென்று விடுவேன் என்று சொல்லி, சிவன் தந்த வரத்தையும் நினைவூட்டி கௌரவர்களுக்குத் தைரியம் ஊட்டினான் ஜயத்ரதன். துரியோதனன், அர்ஜுனனைப் பிரிக்க நானாயிற்று என்று சொல்லி, சம் சப்தகர்களை ஏவினான். போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்வது அல்லது அவர்களால் கொல்லப்படுவது என்ற சபதத்துடன் போரில் ஈடுபடுபவர்களையே சம் சப்தகர்கள் என்பார்கள். அவர்கள், அர்ஜுனனைப் போருக்கு அழைத்தார்கள். அர்ஜுனன், அவர்களுடன் போரிடப் போய்விட்டான். அர்ஜுனனைத் தவிர மற்றவர்கள், துரோணர் தலைமையிலான கௌரவர் படையை எதிர்கொள்ளவேண்டிய நிலை ! கடும்போர் மூண்டது. துரோணர் வகுத்திருந்த படை அமைப்பை, யாராலும் உடைத்து உள்ளே போக முடியாத நிலை. இந்நிலை சற்று நீடித்தால், பாண்டவர் படைக்குப் பேரழிவு ஏற்படும். என்ன செய்வது? பாண்டவர் படை கலங்கியது. அப்போது அபிமன்யு, நான் இந்தத் துரோணரின் படை அமைப்பை உடைத்து உள்ளே நுழைந்து விடுவேன். ஆனால், அதிலிருந்து வெளியே வரும் வழி எனக்குத் தெரியாது என்றான். பீமன் உட்பட அனைவரும் தைரியம் சொன்னார்கள். நீ அந்தப் படையை உடைத்து உள்ளே நுழைந்து, கௌரவர் சேனைக்கு அழிவை உண்டாக்குவோம். வெளியே வருவதில் பிரச்னையே இல்லை என்றார்கள். இள ரத்தம் அல்லவா? அபிமன்யு துரோணரின் படை அமைப்பை உடைத்து உள்ளே நுழைந்துவிட்டான். தர்மர், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் படைகளுடன் அபிமன்யுவைப் பின்தொடர்ந்து, உள்ளே நுழைய முயன்றார்கள்.

அந்த நேரத்தில், ஜயத்ரதன் குறுக்கிட்டு, பீமன் முதலான அனைவரையும் படைகளோடு தடுத்தான். ஜயத்ரதன் ஏற்கெனவே தான் சிவபெருமானிடம் இருந்து பெற்ற வரத்தை, அப்போது உபயோகப்படுத்திக் கொண்டான். பாண்டவர் படை ஜயத்ரதனால் தடுக்கப்பட்டு, அபிமன்யு பகைவர்களின் நடுவில் அகப்பட்டு, வஞ்சனையாகக் கொல்லப்பட்டான். தர்மர் முதலான அனைவரும் நடுங்கினார்கள். சம் சப்தகர்களை வென்று திரும்பிய அர்ஜுனன், அபிமன்யுவின் முடிவைக் கேட்டுத் துடித்தான். அபிமன்யுவின் முடிவுக்குக் காரணமான ஜயத்ரதன் தலையை, நாளை மாலை சூரியன் மறைவதற்குள் கொய்வேன். இல்லையென்றால், நெருப்பில் விழுந்து நான் இறப்பேன். இது சத்தியம் என்று சபதம் செய்தான். தகவல் அறிந்ததும் துரியோதனன், தன் தங்கை கணவனான ஜயத்ரதனை மிகுந்த பாதுகாப்புடன் வைத்தான். போர் தொடங்கியது. அர்ஜுனனை எந்த விதத்திலும் முன்னேறவிடாதபடி கௌரவர் படை கடுமையாகப் போரிட்டது. நேரமும் போய்க்கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பொழுது சாய்ந்துவிடும். அதுவரை ஜயத்ரதனைக் காப்பாற்றிவிட்டால் போதும். அர்ஜுனன் தீயில் விழுந்து விடுவான் என்று நினைத்த கௌரவர் படை, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. சூரியன் இருளத் தொடங்கினான். (மூல நூலான வியாஸ பாரதத்தில் இல்லாத, ஆனால் மக்கள் மத்தியில் பரவியிருக்கக்கூடிய ஒரு தகவல் இங்கே இடம் பெறுகிறது) அர்ஜுனனோ, என் சபதம் தவறிப் போய்விட்டது. ஆகவே, நான் இறப்பதுதான் முறை என்று தீயை மூட்டச் சொல்லி, அதில் இறங்கத் தயாராகி விட்டான். அப்போது கண்ணன், அர்ஜுனா ! வீரனான நீ, வில்லில் பாசுபதாஸ்திரத்தைத் தொடுத்து, அதைச் செலுத்தும் நிலையிலேயே அக்னியை வலம் வா ! என்றார். அதன்படியே அர்ஜுனனும் அக்னியை வலம் வந்துகொண்டிருந்தான். அவன் முடிவைப் பார்ப்பதற்காக ஜயத்ரதன் ஆசையுடன் வெளிப்பட்டுத் தலையை நீட்டினான்; அவன் தலையை அர்ஜுனன் வாங்கிவிட்டான். ஆனால் வியாஸ பாரதத்தில், இந்தத் தீயை மூட்டச் சொல்லி அர்ஜுனன் அதில் குதிக்கப்போன தகவல் எல்லாம் கிடையாது. அதில் வேறு விதமாக தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.

போர்க்களத்தில் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் எமலோகம் அனுப்பிவிட்டு, வேகவேகமாக அர்ஜுனன், ஜயத்ரதனை நெருங்கி எதிர்த்தான். ஜயத்ரதனும் சும்மா இருக்கவில்லை. கண்ணன் மீது மூன்று அம்புகள், அர்ஜுனன் மீது ஆறு அம்புகள் என அம்புகளை ஏவி அவர்களை அடித்தான். அர்ஜுனன், ஜயத்ரதனின் தேரோட்டியைக் கொன்று அவன் கொடியையும் அறுத்துக் கீழே தள்ளினான். ஜயத்ரதனைச் சுற்றி கௌரவ வீரர்கள் மேலும் பாதுகாப்பாக சூழ்ந்துகொண்டார்கள். அப்போது கண்ணன், அர்ஜுனா, நான் ஒன்று சொல்கிறேன் கேள் ! நான் ஒருவழி செய்து சூரியனை மறைக்கிறேன். உடனே ஜயத்ரதன் சூரியன் மறைந்துவிட்டதாக நினைப்பான். தான் உயிர் பிழைப்பதாலும், உன் சபதம் நிறைவேறாமல் போவதாலும் அவனுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அந்த சந்தோஷத்தில் அவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தவறுவான். அப்போது நீ அவனை அடி என்றார். அவ்வாறு கூறி முடித்ததும் சூரியனை மறைக்கும் முகமாக, கண்ணன் அங்கே சக்ராயுதத்தை ஏவி சூரியனை மறைத்து வெளிச்சத்தைக் கவர்ந்தார். பாண்டவர் சேனை துயரத்தில் ஆழ்ந்தது. கௌரவர் சேனையோ அர்ஜுனன் முடிவை எண்ணி, சூரியன் மறைவை ஆர்வத்துடன் பார்த்தது. ஜயத்ரதனும், தலையைத் தூக்கி கழுத்தை நீட்டிப் பார்த்தான். அப்போது கண்ணன், அர்ஜுனா ! அதோ பார், ஜயத்ரதன் ! ஓர் அம்பினால் அவன் தலையை எடு ! என்றார். அடுத்த விநாடியில் அர்ஜுனன் ஓர் அம்பை ஏவி, ஜயத்ரதனின் தலையைக் கவர்ந்தான். அப்போது கண்ணன், அர்ஜுனா ! அந்தத் தலையைக் கீழே விழாதபடி செய் ! ச்யமந்த பஞ்சகம் என்னுமிடத்தில், இந்த ஜயத்ரதனின் தந்தையான விருத்த க்ஷத்ரன் ஜபம் செய்துகொண்டிருக்கிறான். ஜயத்ரதன் தலையை, அந்த விருத்த க்ஷத்ரன் மடியில் தள்ளு என்றார்.

அதைக் கேட்ட அர்ஜுனன், என்னவோ பந்தைத் தட்டுவதைப் போல அம்புகளாலேயே ஜயத்ரதனின் தலையைத் தள்ளிக்கொண்டுபோய், விருத்த க்ஷத்ரன் மடியில் போட்டான். ஜபம் முடிந்து எழுந்த விருத்த க்ஷத்ரன் மடியிலிருந்து ஜயத்ரதன் தலை கீழே விழுந்தது. விருத்த க்ஷத்ரன் தலை வெடித்து இறந்து போனான். கண்ணன் காரணம் சொன்னான்; இந்த ஜயத்ரதன் பிறந்தபோது, பூமியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒருவன் இந்த ஜயத்ரதனின் தலையை அறுப்பான் என்று அசரீரி சொல்லியது. அதைக்கேட்ட ஜயத்ரதனின் தந்தை, நான் மனமடக்கித் தவம் செய்தது உண்மையாக இருந்தால், என் மகன் தலையை எவன் கீழே தள்ளுவானோ அவன் தலை நூறு துண்டுகளாக வெடிக்கட்டும் என்றான். அதன்படி ஜயத்ரதன் தலையை பூமியில் தள்ளியிருந்தால். உன் தலை சிதறிப் போயிருக்கும். அதைத் தடுக்கத்தான், ஜயத்ரதன் தலையை விருத்த க்ஷத்ரன் மடியில் தள்ளு என்றேன். மடியில் விழுந்த மகன் தலையை, விருத்த க்ஷத்ரன் மண்ணில் தள்ளினான். அவன் வாக்குப்படியே தலை வெடித்து மாண்டான். அதேசமயம் கண்ணன், போர்க்களத்தில் இருளைப் போக்கி ஒளியைப் கொணர்ந்தார். சூரியனை மறைத்திருந்த சக்ராயுதத்தைத் திரும்பப் பெற்று, சூரியனை வெளிப்படச் செய்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar