தமிழ்நாட்டில் ஒரு ஆண்டாள். வடநாட்டுக்கு ஒரு மீரா. சிற்சில வகையிலே அவள் ஆண்டாளையும் விஞ்சி விடுகிறாள். பக்திச் சுவை சொட்டும் அவரது பாக்கள் தேனும் நாணும் தீஞ்சுவை கானம்.
சிறுமி மீரா எப்போதும் ஒரு கிருஷ்ணன் பொம்மையை வைத்தே விளையாடுவாள். இரவு தூங்கும்போதும் அதுவே துணை. மன்னன் மகளல்லவா ! அரண்மனையில் அவ்வப்போது பௌராணிகர் வந்து பாகவதக் கதை பிரவசனம் செய்வார். கண்ணபிரானின் பெருமைகளை அவர் சொல்லச் சொல்ல மீராவுக்கு மெய்யுருகும். தான், பொம்மை என நினைத்த அந்தப் பெம்மான் இத்தனை தெய்வ லீலைகள் புரிந்தவனா என்று அதிசயிப்பாள். நினைவிலும் கனவிலும் கண்ணனே வந்தான். அலகிலா விளையாட்டுடைய அன்னவனுக்கே சரண் நான் என்று இடைக்குலம் காத்தவனிடமே அடைக்கலம் தேடியது, அவள் மனம். கண்ணன் என்னும் மன்னன் நினைவிலே படர்ந்து வளர்ந்த அந்தப் பைங்கொடி அரும்பு மலர்ந்து, மணம் வீசலாயிற்று. தந்தை, அவள் சுயம்வரத்திற்கு நாள் குறித்தார். மீராவோ மறுத்தாள். தந்தை குழம்பினார். மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன், தோழி... என்று சேடிப் பெண்களிடம் கிசுகிசுத்தாள்; நாணம் குமிழிட முகம் மறைத்தாள். அருவாய் இருந்து அருள் புரிவான் கண்ணன். மனிதர் போலா வந்துன்னை மணப்பான், அந்த நந்தலாலா? என்று பாங்கியர் பரிகசித்தனர். சேதியை பெரிய ராணியின் காதிலும் கொஞ்சம் ஓதி வைத்தனர். புத்திமதி புகன்றனர் பெற்றோர். மீராவோ, கன்னி மாடத்திலே கண்ணன் வழிபாட்டுக்கு வழி செய்யுங்கள்; கிருஷ்ண பக்தர்கள் எல்லோரும் அங்கே சங்கமிக்க வகை செய்யுங்கள் ! என்றாள். பாசக்காரத் தந்தை மகளின் கனிமொழிக்குக் கட்டுப்பட்டார். அவ்வாறே நடைபெற ஆவண செய்தார். அன்று முதல் கன்னி மாடம் பக்திக் கூடமாயிற்று.
ஆனால் ஊராரின் நாக்கு மீராவின் போக்கைத் தவறாகக் கருதி அவதூறாகப் பேசின. வீண் வதந்திகளால் வெகுண்டான் மன்னன். இத்தனைக்கும் காரணம் என் சொல் பேச்சுக் கேட்காத மகள்தானே ! என்று மனைவியுடன் சண்டையிட்டான். குடும்பச்சூழல் அபாயச் சுழலாக ஆகிவிட்டது. தன் பக்தையைத் தேற்ற அந்தக் கண்ணபிரானே ஒரு முதியவர் தோற்றத்தில் வந்து, உன் கிருஷ்ணபக்தியைப் பாராட்டுகிறேன். கோபியர்கள் குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே கண்ணன் மீது பக்தி செலுத்தவில்லையா? நீயும் மணவாழ்வை ஏற்று, மணாளன் மைந்தர்களுடன் சேர்ந்து பக்தி செலுத்தலாமே ! என்றார், வந்தது கண்ணன். சொன்னது மந்திரம் மறுப்பாளா மீரா? அவள் சம்மதத்தின் பேரில் மேவார் மன்னர் ராணாவுக்கு அவளை மணம் செய்து கொடுத்தனர். ராணாவும் சிறந்த பக்தர். ஜெயதேவரின் கீதகோவிந்தத்துக்கு உரை எழுதியவர். மீராவின் பக்தியுணர்வை மதித்து, அவள் வழிபாட்டுக்கென்றே தனிக்கோயில் அமைத்துக் கொடுத்தார். அங்கே மீரா அனுதினமும் பக்திப்பரவசத்துடன் பலப்பல பாடல்களைப் பாடி பரந்தாமனைத் துதித்தாள். அவள் பாடல்கள், கோயிலுக்கு வந்தோரை எல்லாம் பரவசப்படுத்தியது. செய்தி, சக்ரவர்த்தி அக்பருக்கு ஆஸ்தான பாடகர் தான்சேனும் அதை ஆமோதித்தார். ஒருநாள் இருவரும் மாறுவேடத்தில் மீரா பாடும் கோயிலுக்கு வந்தனர். மீராவின் பக்திப் பாடலில் உள்ளம் உருகிய அக்பர், அவளுக்கு ஒரு முத்து மாலை பரிசளித்துச் சென்றார். ராணா, மீரா எப்போதும் கோயில், குளம், பாட்டு, பஜனை என்றே இருப்பதைக் கண்டு வெறுத்துப் போனார். இனி கோயிலுக்குப் போக வேண்டாம். அரண்மனையிலேயே இரு ! என்று ஆணை பிறப்பித்தார். ஆனால், மீரா அரண்மனை வாசமே எனக்கு வேண்டாம். ஆண்டவன் சன்னதியே எனக்கு நிம்மதி என்று ஆலயத்திலேயே தங்கிவிட்டாள். மன்னனிடம், உங்கள் கோபமும், என் வைராக்கியமும் அவன் திருவுள்ளம். கண்ணன் என் தலைவன்; பக்தி என் தொழில். அரசி பட்டம் அனாவசிய முள்முடி என்று கூறிவிட்டாள்.
அன்று கண்ணன் பிறந்த நாள். கோயிலில் ஒரே கோலாகலம். எங்கும் தீப அலங்காரம். வலது கையிலே தம்பூராவும், இடது கையிலே கரதாளம் என்னும் சிப்ளாவுமாக மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தாள் மீரா. ராணா அங்கே வந்து மீராவின் அருட்கோலம் கண்டு, கண்களில் நீர் தளும்ப நின்றார். மீராவின் கரம் பற்றிய நாள் முதல் இன்றுவரை நடந்த சம்பவங்கள் அலைஅலையாய் அவர் மனதில் எழுந்து அடங்கின. எவ்வளவு நேரம் இப்படிக் கழிந்ததோ, தெரியாது. மீராவின் தேவகானம் ராணாவின் மனதை மெழுகிக் கோலமிட்டுவிட்டது. பாடல் நின்றது. மீரா! அரண்மனைக்குத் திரும்பலாமா? என்ற ராணாவின் குரல் கேட்டு, நிமிர்ந்து நோக்கினாள் மீரா. நீங்கள் இந்த உடலுக்கு நாதன். ஆனால் என் இதய நாதன் கண்ணன் என்றபடியே அவள் மயங்கிச் சாய்ந்தாள். கிரிதாரி! அழைக்கின்றாயா ! இதோ வந்துவிட்டேன் என்று அவள் வாய் முணுமுணுத்தது. அரை மயக்கத்தில் எழுந்தாள். கர்ப்பகிருகத்தினுள் நுழைந்தாள். இறைவன் விக்ரகத்தைத் தழுவிக் கொண்டாள். ஒரு மின்னல் பேரொளி அங்கே எழுந்து மறைந்தது. பலத்த காற்று ! கர்ப்பகிருகக் கதவுகள் தாமாகவே மூடிக்கொண்டன. மீண்டும் திறந்து பார்த்தபோது, அங்கே மீரா இல்லை. நிலைகுலைந்து வீழ்ந்தார், ராணா. கண்ணனோடு கலந்துவிட்ட மீரா இன்றும் அவன் திருவடித் தாமரையில் அமர்ந்து பாடுகிறாள்; பாடிக்கொண்டே இருக்கிறாள்.