தருமபுரம் ஆதீனத்தில் கட்டளைத் தம்பிரானாக இருந்தவர் சம்பந்த சரணாலயர். மைசூரு மன்னர் இவரின் பெருமையைக் கேள்விப்பட்டு அரசவைக்கு அழைப்பு விடுத்தார். சரணலாயர் நல்ல கருப்பு. அவரைக் கண்ட மன்னர், அமைச்சரின் காதில், இந்த சாமியார், அண்டங்காக்கை போல கருப்பாக இருக்கிறாரே! என்று பரிகாசம் செய்தார். மன்னரின் வாய் அசைவைக் கொண்டே, அவர் தன்னைக் கேலி செய்வதைப் புரிந்து கொண்டார் சரணாலயர். சபையில் அனைவரும் கேட்கும்விதத்தில் கம்பீர தொனியில், மன்னர் பெருமானே! அண்டங்காக்கைக்குப் பிறந்தவரே! நீர் வாழ்வாங்கு வாழ்க! உமது பெருமை ஓங்குக!, என்றார்.
அவரது பேச்சைக் கேட்டு கோபமடைந்தார் மன்னர். மன்னா! உண்மையைத் தானே சொன்னேன். அண்டம் என்றால் உலகம். நீர் இந்த உலகத்தைக் காக்க தானே பிறந்திருக்கிறீர்! என்ன...நான் சொல்வது சரிதானே! என விளக்கம் அளித்தார். புலவரின் அறிவுத்திறத்தைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். அவருக்குப் பொன்னும் பொருளும், பட்டாடைகளும் பரிசளித்தார். சரணாலயரும் அங்கு அருளுரை நிகழ்த்தினார். சரணாலயரின் மதிநுட்பத்தை எண்ணி தருமபுரம் ஆதீனம் மகிழ்ந்தார். காக்கா கலரில் இருக்கியே என்று நிறத்தைக் காரணமாக வைத்து யாரையும் அவமானப்படுத்தக் கூடாது...புரிகிறதா!