குசேலர் வறுமையின் பள்ளத்தில் கிடந்த போதும், சர்வசதாகாலமும் கண்ணபிரானையே நினைத்து, துதித்துக்கொண்டிருந்தார். தம் மனைவியின் வேண்டுகோளின்படியே, கண்ணனைக் காணச் சென்றார். அவர் வாழும் அவந்திக்கும் துவாரகைக்கும் நெடுந்தூரம்; குடையும், காலணியும் அவருக்கேது? கடும் வெயில்; சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். குசேலர் அந்த வெயிலைக் கண்டும் தளராது. உடல் வியர்வையில் நனைய நடந்துகொண்டிருந்தார். அவர் சென்ற பாதையின் இருபுறமும் அடர்ந்த மரங்கள் உயர்ந்து நின்று நிழல் தந்து கொண்டிருந்தன. அவர் அந்த நிழலில் ஒதுங்கி நடந்தால், வெயிலின் கொடுமை இல்லாது நடக்கலாம், ஆனால் அவர் அப்படி நடக்கவில்லை. அவர் நடுசாலையில் வெயிலிலேயே நடந்தார். கால் சுடுகின்றது. தலை சுடுகின்றது.
இரு கரங்களையும் வரித்துத் தலைக்குமேல் மறைத்துக் கொண்டு, கண்ணா! கண்ணா! தாங்கமுடியாத வெப்பம் காய்கிறதே! நான் என் செய்வேன். இன்னும் காதம் இருக்கின்றதே! என்று கூறிக்கொண்டே நடந்தார். அவர் ஏன் நிழலில் ஒதுங்கி நடக்கவில்லை? காரணம் இதுதான். ஈக்கள், எறும்புகள், புழுக்கள் முதலிய சிற்றுயிர்கள் கொடிய வெயிலைத் தாங்கமாட்டாது-நிழலில் ஒதுங்கியிருக்குமே? நாம் நிழலில் நடந்தால் அச்சிற்றுயிர்கள் தம் காலின்கீழ் சிக்கி இறந்துவிடும் என்று கருதினார். அத்தகைய கருணை காரணமாகவே நிழலில் ஒதுங்காமல், வெயிலில் தாம் நடந்து துன்புற்றார். இத்தகைய கருணை அவர்பால் இருந்ததனால், கண்ணபிரானுடைய கருணை, அவர் பால் சுரந்தது. கருணையை எதிர்பார்க்கும் நாம், மற்றவர்களிடம் அப்படி இருக்கிறோமா என்கிற கேள்வி நமக்குள்ளேயே எழுகிறதல்லவா?