ஒருமுறை பணத்திற்கும், அறிவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பணம் சொன்னது, நான் இல்லாவிட்டால், இந்த உலகில் என்ன நடக்கும்? பொருள் வாங்க முடியுமா! சாப்பிட முடியுமா! நகைகளை வாங்கி பூட்ட முடியுமா! பெண்ணுக்கு திருமணம் நடக்குமா! குழந்தைகள் படிக்கத்தான் முடியுமா! என்று.அறிவு அதை மறுத்தது.அடேய் மூடப்பணமே! நீ மட்டும் இருந்து என்னடா புண்ணியம். பத்தாயிரம் ரூபாயை ஒருவனுக்கு கொடுக்க வேண்டுமானால், அதைச் சரியாக எண்ணிக் கொடுக்க அறிவல்லவா வேண்டும்! அறிவில்லாமல் செய்யப்படும் எந்தச் செயலும் தோல்வியைத் தானே தழுவும்! ஆண்டவனை வணங்கும் ஆன்மிகவாதி கூட கடவுளே! எனக்கு மெய்யறிவைக் கொடு என்று என்னை உயர்த்திச் சொல்கிறான்.
இனியும் உளறாதே! நீ மட்டும் இருந்து பயனேதும் இல்லை. நான் இருந்தால் தான் சிறப்பு என்றது!வாக்குவாதம் வலுத்ததால் அவை ஒரு துறவியிடம் சென்று, தங்களில் யார் உயர்ந்தவர் என்று கேட்டன.அவர் அழகாகச் சொன்னார்.இருவருமே உயர்ந்தவர்கள் தான். உங்களை நல்ல குறிக்கோளுக்காக பயன்படுத்தும் போது நீங்கள் இருவருமே உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறீர்கள். பணத்தை வீண் செலவுக்கும், அறிவை தவறான வழியிலும் பயன்படுத்தும் போது சமூக விரோதிகளாக மாறுகிறீர்கள். அதனால், இருவரும் சமமே, என தீர்ப்பளித்தார்.அறிவும், பணமும் கைகோர்த்து புறப்பட்டன.