தென்ன புதுக்குழப்பம்! விஸ்வாமித்திரர் ராமனுக்கு பெண் பார்த்து வந்தார். சீதாராமர் கல்யாணத்தை வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முன்னிலையில் தசரதரும். ஜனகரும் அல்லவா நடத்தி வைத்தார்கள்! இப்படித்தானே, ராமாயணத்தின் பாலகாண்டத்திலே வருகிறது என்பீர்கள். ஆனால், அனுமன் அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தார் என்ற கதை தெரியுமா? ஆன்மிகத்தில் ஜீவாத்மா, பரமாத்மா தத்துவம் பற்றி சொல்வார்கள். முதலில் நடந்தது மனிதர்களுக்கிடையே நடக்கும் சாதாரண திருமணம். ஆனால், அனுமன் நடத்தி வைத்தது ஆத்ம விவாகம். சீதையிடம் ராமனின் கணையாழியைக் கொண்டு சேர்த்தார். அதாவது ஜீவனாகிய சீதையிடம், மோதிரத்தைக் கொடுத்தவுடனேயே, அவளைப் பரமாத்மாவிடம் சேர்த்து வைக்கும் பொறுப்பு அவருக்கு வந்துவிட்டது.
பகவானையும், பக்தனையும் இணைத்து வைக்க ஒரு குரு வேண்டும். அந்த குரு ஸ்தானத்தில் அனுமன் இருந்தார். எளிமையாகச் சொன்னால், இதைப் படிக்கும் வாசகர் ஜீவாத்மா. அவருக்கு பரமாத்மாவாகிய கடவுளின் அருள்கிடைக்கச் செய்யும் குருவாக இருப்பது ஆன்மிகக்கதிர். இப்போது புரிகிறதல்லவா! சீதை கொடுத்த சிரோபூஷணம் என்கிற நெற்றிச்சுட்டியை ராமனிடம் கொண்டு சேர்த்தார். இது பரமாத்மாவை அடைய ஜீவாத்மா தயாராக இருக்கிறது என்கிற நிலையைக் குறிக்கும். ஆக, ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டு ஆத்மாக்களுக்கும் விவாகம் செய்து மீண்டும் சேர்த்து வைத்தவர் அனுமன். அதனால் தான் ஸ்ரீராம ஜெயம் என்று சொல்லி, அனுமனை வணங்குவோர் ராமபிரானின் திருப்பாதம் அடைந்து பிறவாவரம் பெறுவர் என்கிறார்கள்.