ஒருவர் பணியில் இருந்தார். 30 ஆயிரம் சம்பளம் வாங்கினார். திடீரென வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள். 20 ஆண்டு காலம் ஒரே இடத்தில் பணிபுரிந்தும் சந்தர்ப்ப சூழலால் வேலையை விட்டு நிறுத்திவிட்டார்களே என கவலைப்பட்டார். ஏறத்தாழ சைக்கோ நிலைக்குப் போய் விட்டார். ஒரு மகன் உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு லட்சக்கணக்கில் கட்ட வேண்டிய பீஸ் பயமுறுத்தியது. இன்னொரு பையனுக்கு பள்ளிக்கூடத்தில் அதை விட அதிகமான பீஸ் வசூலித்தார்கள். அது மட்டுமா! வீட்டில் சாப்பாடு...மற்ற காரியங்களுக்கெல்லாம் என்ன செய்வது? குழம்பிப் போயிருந்தது குடும்பம். எதற்கெடுத்தாலும், மனைவி, பிள்ளைகளிடம் எரிந்து விழுந்தார். பணம் வந்த காலத்தில் பிள்ளைகளுக்கு பைக், அளவுக்கதிகமான விலையில் துணிமணிகள், ஷு என எடுத்து விட்டு, இப்போது எதைக்கேட்டாலும் இல்லை என சொல்லும் போது, பிள்ளைகளின் முகம் சுருங்கியது. கோபத்தில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளலாமா என்று கூட தோன்றியது.
வாழ்க்கையில் பலரும் இப்படித்தான் தவிக்கிறார்கள். திட்டமிடல் என்பது இல்லவே இல்லை. பிள்ளைகளுக்கு தகுதிக்குட்பட்ட நிறுவனங்களில் கல்வி, எளிய உடை அணிய கற்றுக் கொடுத்தல், ஆடம்பரமின்றி வாழ்தல் ஆகியவை கற்றுத் தரப்படவில்லை. தங்களை விட கீழாக வாழ்பவர்களைக் காட்டி, அவர்கள் படும் வேதனைகளை பிள்ளைகள் அறியச் செய்யவில்லை. அதிலும் சிலர்...என் தந்தை எனக்கு கொடுத்த கஷ்டத்தை, நான் என் பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்பவில்லை, என வியாக்கியானம் செய்து கொண்டு அநாவசியமாக செலவழிக்கிறார்கள். மற்றவர்கள் செய்கிறார்களே என்பதற்காக தனக்குத்தானே சூடுபோட்டுக் கொள்பவர்களே இன்று உலகில் அதிகம். நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் சேமிப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில், ஏதேனும் கஷ்டம் வந்தால், அடுத்த ஏற்பாட்டைச் செய்யும் வரைக்கான பணத்தை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். சோதனைகள் வருவது இயல்பு மட்டுமல்ல நிச்சயமும் கூட. அவற்றையெல்லாம் கடப்பதற்கு தகுந்த பாலங்களை இப்போதே கட்டி வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கைப் பயணம் சுமூகமாக இருக்கும்.