சிலருக்கு வறுமை, சிலருக்கு ஊனம், இன்னும் எத்தனையோ குறைகள்... இவை அவரவர் விதிப்படி விளைபவை. இவர்கள் ஏற்கனவே, தங்கள் குறைபாட்டுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் அந்த குறைபாடுகளைக் குத்திக்காட்டுவது என்பது பெரும் விபரீதத்திற்கு வழிவகுத்து விடும்.பாஞ்சால தேச மன்னன் துருபதனின் மகள் திரவுபதி, விதிவசத்தால், பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியாக வேண்டியதாயிற்று. பாண்டவர்களின் தந்தை பாண்டு இறந்ததும், பெரியப்பா திருதராஷ்டிரன் தம்பி பிள்ளைகளுக்குரிய ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்தார். அவர் பார்வையற்றவர். ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்ட பாண்டவர்கள், கண்ணனின் ஆசியுடனும், இந்திரனின் ஆலோசனையுடனும், தேவலோக சிற்பி விஸ்வகர்மா மூலம் அரண்மனை அமைத்தனர். அந்தக்கட்டடம் பொன்னாலும் மணியாலும் இழைக்கப்பட்டது. தரையா அல்லது தண்ணீரா என்று தெரியாத அளவுக்கு பளிங்குத்தரை இருந்தது.
அந்த அரண்மனை அமைந்த இடத்திற்கு இந்திரபிரஸ்தம் என்று பெயரிட்டார் தர்மர். அரண்மனை கிரகப்பிரவேசத்திற்கு, தம்பிமார்களான கவுரவர்களையும் அழைத்திருந்தார் தர்மர். அவர்களில் மூத்தவனான துரியோதனன், பளிங்குத்தரையில் கால் வைக்க முயன்ற போது, அதன் பளபளப்பு தண்ணீர் போல் தெரிந்ததால், தண்ணீர் தான் கிடக்கிறதோ என்று தன் ஆடையை உயர்த்தி நடந்தான். கால் வைத்த பின் தான் அதுதரை என்று தெரிந்தது.அதைப் பார்த்த திரவுபதி சிரித்து விட்டாள். ஏதோ மைத்துனர் என்ற உரிமையில், விளையாட்டாகக் கருத்து சொல்லியிருந்தால் கூட, மைத்துனி கேலி செய்கிறாள் என்று துரியோதனின் மனம் சங்கடப்பட்டிருக்காது. ஆனால் அவள், உன் தந்தை தான் குருடு என நினைத்திருந்தேன். நீயும் அப்படித்தானோ! என மனம் புண்படும்படியாக பேசிவிட்டாள். இதன் மூலம் மைத்துனனை மட்டுமல்ல, பெரிய மாமனாரின் ஊனத்தையும் குறைத்துப் பேசி விட்டாள்.பொம்பளை சிரித்தால் போச்சு என்பது பழமொழி.
துரியோதனன் இதை மனதில் வைத்துக் கொண்டான். அவனும் இந்திரபிரஸ்தத்துக்கு இணையான அரண்மனை கட்டினான். அப்பகுதி அஸ்தினாபுரம் எனப்பட்டது. கிரகப்பிரவேசத்திற்கு பாண்டவர்களை அழைத்தான். கவுரவர்களின் தாய்மாமன் சகுனி, பொழுது போக்காக சொக்கட்டான் ஆடுவோமே என்று பாண்டவர்களை அழைத்தான். அவனது வலையில் தர்மர் விழுந்தார். நாடு, நகரம் மட்டுமல்ல, திரவுபதியையும் இழந்தார். எல்லாரும் கவுரவர்களுக்கு அடிமையாயினர்.துர்க்குணம் வாய்ந்த துரியோதனன், அடிமைப்பெண்ணான உனக்கு ஆடை எதற்கடி? என்று கேட்டு திரவுபதியின் துயிலுரிய ஆணையிட்டான். அவன் அவ்வாறு செய்ததும் தவறே. கோபத்தில் கவுரவர்களின் நாட்டையும், திரவுபதியையும் பறித்த அவன், சகோதரர்களின் மனைவி என்றும் பாராமல் இவ்வாறான தீய செயல் செய்தது பாண்டவர்கள் மனதில் கோபக்கனலை எழுப்பியது. ஆக, இரு தரப்பு கோபமும் குரு÷க்ஷத்திரத்தில் யுத்தமாய் வெடித்தது. கவுரவர்கள் அழிந்தனர். தேவையற்ற சண்டைக்கு காரணமாய் இருந்தது என்ன! பிறரது குறையைப் பெரிதுபடுத்தி மனம் புண்படும்படி பேசியது தான்! இனியும், பிறர் குறையைக் குத்திக் காட்ட வேண்டாமே!