ஒருவர் மட்டுமே நடந்து செல்லக்கூடிய ஒற்றையடிப் பாதை அளவேயான மிகக் குறுகலான பாலம் அது. சக்தி முனிவர் என்ற மகா பண்டிதர், அதன் மீது நடந்து வந்துகொண்டிருந்தார். பாதி வழி வந்தபோதுதான் தனக்கு நேர் எதிரே மிகவும் அதிகாரம் படைத்த மன்னன் ஒருவன் வந்துகொண்டிருப்பதைக் கண்டார் முனிவர். உடனே, பின்னால் திரும்பிப் போ! அப்போதுதான் என்னால் இந்தப் பாலத்தைத் தாண்டிப் போக முடியும்! என்றார். நீங்கள் பின்னால் போங்கள்! என்று, பதிலுக்கு உறுமினான் மன்னன். நான்தான் பாலத்தின் மீது முதன்முதலாக அடி எடுத்து வைத்தேன்! என்றார் முனிவர். ஆனால், என்னால் உங்களை தள்ளிவிட்டுப் போக முடியும்! என்றான் மன்னன். அது நியாயம் அல்ல. நான் ஓர் ஆசான். சீடர்கள் மிகுந்த ஒரு குரு. இந்த தேசம் மிகவும் மதிக்கும் ஒரு தத்துவ ஞானி. அதனால் முதலில் செல்லும் உரிமை எனக்கே தரப்பட வேண்டும் என்று வாதாடினார் முனிவர். ஆனால், மன்னனின் பேச்சிலோ கேலி அதிகமாக இருந்தது. நீர் பயிற்றுவிக்கும் கல்விக்கூடம் நான் கட்டித் தந்தது. நீங்கள் செய்யும் சடங்குகளுக்கு எல்லாம் நான்தான் நிதி அளிக்கிறேன். என்னைப் போன்ற மன்னனின் ஆதரவு இல்லாமல் நீங்கள் தத்துவஞானியாக இருக்க முடியாது. எனவே, எனக்குத்தான் முதல் உரிமை இருக்க வேண்டும் என்றான் மன்னன். ஒருவர் மறுக்க, இன்னொருவர் நியாயப்படுத்த, இருவருக்கும் இடையே வாதம் தொடர்ந்தது. ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் போனபோது, கோபம் கொண்ட மன்னன் முனிவரைத் தாக்கினான். வெகுண்டு போன முனிவர், நீ ஓர் அரக்கன் போல நடந்துகொண்டிருக்கிறாய். அதனால், அரக்கனாகவே நீ மாறக்கடவது! என்று சாபமிட்டார். உடனே மன்னன் அரக்கனாக, அதுவும் நரமாமிசம் தின்னும் அரக்கனாக மாறி, முனிவர் மீதே பாய்ந்தான். தன் வாயை அகலத் திறந்து முனிவரை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டான். நடந்த சம்பவத்தில்... எது முக்கியம்? பாலத்தைக் கடப்பதா? அல்லது, பாலத்தை முதலில் கடப்பதா?
முனிவரைப் பொறுத்தமட்டில் மன்னனுக்குப் பாலத்தை கடந்து செல்ல இடம் தராமல், முதலில் தானே கடந்து செல்லப் பிடிவாதம் பிடித்தார். இதனால் பாலத்தைக் கடக்கமுடியாமல், அவருடைய சினத்தால் எழுந்த சாபம் காரணமாக அரக்கனாக மாறிய மன்னன், அவரையே விழுங்கிவிட்டான். சிலவேளைகளில், நம்முடைய உரிமையைக் காக்கும் ஆவேசத்தில் நம் குறிக்கோளைக்கூட மறந்து செயல்பட்டு, தோற்றுப் போய்விடுகிறோம். இதற்கு மாறாக அந்த முனிவர் மன்னருக்கு இடம் தந்து, அவரை முதலில் போகச் சொல்லியிருந்தால், என்ன ஆகியிருக்கும்? மன்னரும் பாலத்தைக் கடந்திருப்பார்; சற்றுத் தாமதமானாலும், முனிவரும் பாலத்தைக் கடந்து அடுத்த முனையில் உயிரோடாவது இருந்திருப்பார். முனிவருடைய தலைக்கனத்தால் தனது உயிரையே இழந்து விட்டார். இந்தச் சம்பவத்தில், பாலத்தில் எதிரே குறுக்கிட்டவர் மன்னர். மன்னர் என்பதாலேயே அவர் முதல் உரிமை கோரினார். தான் மன்னன் என்ற அதிகாரத்தையும், தன்னால் தான் எல்லாம் நிகழும் என்ற அகங்காரத்தையும் கொண்டிருந்ததால் மன்னனாலும் பாலத்தை கடக்கமுடியவில்லை. இறுதியில் முனிவரின் சாபத்திற்கு ஆளாகி அரக்கனாக மாறிவிட்டான். இருவருமே கொஞ்சம் விட்டுக் கொடுத்து போயிருந்தால் தங்கள் இலக்கை அடைந்திருப்பார்கள். இப்படி வீணாகிப் போயிருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் வெற்றியை எதிர்நோக்கி செல்லும்போது பலவிதமான தடைக்கற்கள் வரும். அதை பொறுமையுடன் தாண்டுபவனே வெற்றியை அடைய முடியும்.