தவஞானி முத்கலரின் குடிலுக்கு வந்தார் துர்வாசர்.முத்கலர் துர்வாசரிடம்,சுவாமி! தாங்கள் உணவருந்தி விட்டுத் தான் செல்ல வேண்டும், என்று வேண்டிக் கொண்டார். துர்வாசரோ,எனக்கு உணவிட உம்மால்முடியுமா?, என்று ஏளனம் செய்தார். துர்வாசரை வற்புறுத்தி முத்கலர் சம்மதிக்க வைத்தார். நதிக்கரை சென்று அனுஷ்டானம் முடித்து விட்டு வந்த துர்வாசருக்கு உணவு தயாராக இருந்தது. முத்கலரின் மனைவிசுவையாக செய்த உணவு முழுவதையும் சாப்பிட்டார். ஆசி கூட அளிக்காமல் புறப்பட்டார். முத்கலரும், அவர் மனைவியும் வீடு தேடி வந்தவரை உபசரிப்பது கடமை என இதனை எடுத்துக் கொண்டனர். மீண்டும் ஒருநாள் துர்வாசர் வந்தார். முத்கலர் அவரை வரவேற்றார். முதல்முறை போலவே, இப்போதும் சாப்பிட்டு விட்டு, சொல்லாமலே கிளம்பினார். இப்படி தொடர்ந்து ஆறுமுறை நடந்தது.
ஒவ்வொரு முறையும் முத்கலர்அமைதியாகவே நடந்து கொண்டார். ஏழாவது முறை வந்தார் துர்வாசர். இந்தமுறை துர்வாசர் முந்திக் கொண்டு, முத்கலரைப் பேசவே விடவில்லை. முத்கலரே! உம்மைச் சோதிக்க ஆறுமுறை வந்தேன். ஆனால், ஒவ்வொரு முறையும் நானே தோற்றுப்போனேன். உங்களின் சாந்த குணத்தைப் பாராட்டுகிறேன். நீங்கள் சிரமப்பட்டது போதும். தேவலோகம் சென்று மகிழ்ச்சியாக வாழுங்கள்! என அழைத்தார். அப்போது குடில் வாசலில் தேவதூதர் இருவர் பொன்ரதம் ஒன்றில் வந்திறங்கினர். ஆனால், முத்கலர் அதில் ஏறவில்லை. முத்கலர், துர்வாசரே! சொர்க்கத்தில் சுகபோகங்களை அனுபவிக்க முடியுமே தவிர, பிறருக்கு சேவை செய்ய முடியாது. ஆனால், கர்மபூமியான பூலோகத்தில் நம்மால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்து மகிழ்ச்சியாக வாழ முடியும். சேவை செய்யும் இடம் தான் உண்மையான சொர்க்கம்,என்றார். துர்வாசர் மவுனமாகி விட்டார்.