Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சகஸ்ரநாமத்தில் விஸ்வத்தை ஏன் முதலில் வைத்தார்கள்?
 
பக்தி கதைகள்
சகஸ்ரநாமத்தில் விஸ்வத்தை ஏன் முதலில் வைத்தார்கள்?

நர்மதை நதிக்கரையோரம் அமைந்த கிராமத்தில் சிறந்த பண்டிதராக விளங்கிய பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் இதரா என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஐத்ரேயா என்ற பிள்ளை பிறந்தது. அவனுக்கு ஐந்து வயது ஆனவுடன் அவனுடைய தந்தை உபநயனம் செய்து வைத்தார். பிராமணர் தன் பையனுக்கு வேதங்கள் கற்றுத் தருவதற்கு முன் விஷ்ணு சஹஸ்ர நாமத்தைக் கற்றுத் தர விரும்பினார். தன் பிள்ளைக்கு முதல் ஸ்லோகமான விஸ்வம் என்பதில் ஆரம்பித்தார். பிறகு விஷ்ணு என்று கூற பிள்ளையோ விஸ்வத்தைத் திரும்பக் கூறினான். அது முடிந்ததும் இப்போது விஷ்ணு என்று மெல்லச் சொல்கையில் பிள்ளையோ விஸ்வம் என்ற வார்த்தையையே மீண்டும் கூறினான். சரி அவனுக்கு அசதியாக இருக்கும். மறுநாள் பார்க்கலாம் என்று நினைத்தார் பிராமணர். ஆனால் பல நாட்கள் அவர் முயன்றும் விஸ்வம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையும் பிள்ளைக்கு வரவில்லை. பல நாட்கள் ஓடின. பிள்ளையைச் சரி செய்ய முடியாததால் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டார் இந்த பிராமணர். இந்த இரண்டாவது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தன. இருவருமே நல்ல வேத வித்துக்களாக வளர்ந்தனர். இந்தப் பிள்ளைகளுடைய வேதங்களைக் கேட்பதற்காகப் பலரும் திரண்டு வந்தனர். இதனால் பிராமண குடும்பத்திற்குப் பணம், புகழ், மேன்மை எல்லாம் வந்து சேர்ந்தது. முதல் பிள்ளையான ஐத்ரேயனோ யார் அவனிடம் என்ன கேள்வி கேட்டாலும் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையே கூறி வந்தான். அவனுடைய தாயான இதராவிற்கு மனம் மிகவும் வருத்தப்பட்டது.

தன் வயிற்றில் பிறந்த பிள்ளை மன வளர்ச்சி குன்றியவன் போல் இருக்கிறான். ஆனால் இளையவளின் பிள்ளைகளோ நல்ல வேத வித்துக்களாக இருக்கிறார்களே என்று விரக்தியுற்று ஒரு நாள் தன் பிள்ளையிடம் கோபமாக நீ முட்டாள். நீ பிறந்தது எனக்கு வெட்கக்கேடு. முனிவர்கள் வம்சத்தில் பிறந்தும் உனக்கு விஸ்வத்தைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை என்று பேசிவிட்டாள். ஐத்ரேயன் தன் தாயைப் பார்த்து விஸ்வம் என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான். அவன் வீட்டை விட்டே வெளியே சென்று விட்ட நிலையில் ஐத்ரேயனுடைய இரு சகோதரர்களும் வேதத்தைச் சொல்ல முற்படும்போது அவர்களால் வார்த்தைகளை உச்சரிக்க முடியவில்லை. பேசவே முடியாத ஊமைகளாகி விட்டனர். அந்நிலையில் அவர்கள் வீட்டிற்குச் சில திருடர்கள் வந்து பொருட்களைத் திருடிச் சென்றுவிட்டனர். அந்த வீட்டுப் பிராமணருக்கு அதிர்ச்சியாக இருந்தது. திடீரென்று ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எண்ணினார். அந்த பிராமணர் அதிர்ஷ்டவசமாக வசிஷ்ட முனிவரை சந்தித்தார். நடந்ததை எல்லாம் அவரிடம் கூற வசிஷ்டர், உனக்கும் உன் மனைவிக்கும் ஐத்ரேயனுடைய பெருமை தெரியவில்லை. அவன் முன் ஜென்மத்தில் ஒரு முனிவனாக இருந்தவன். அவனுடைய யோகத்தை முடிக்கவே உனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறான். ஐத்ரேயன் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையைக் கூறியதற்குக் காரணம் விஸ்வம் என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தையும் புரிந்தததினால்தான். மனதாலும், உடலாலும், ஆன்மாவாலும் மிகச் சிறந்த ஒன்றே விஸ்வம். வாஸு தேவனை மட்டுமே இது குறிக்கும். விஸ்வத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால் வேறு எதுவும் தேவையில்லை. பகவானே விஸ்வம் என்பதை நன்கு அறிந்து கொண்டால் வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை.

விஸ்வம் என்ற வார்த்தையில் பகவானை முழுமையாகப் புரிந்து கொண்ட உன் பிள்ளை அதையே அடிக்கடி கூறியதன் மூலம் அவனுடைய பக்தியால் உன் குடும்பத்தில் செல்வம், புகழ் எல்லாம் நிறைந்து இருந்தது. அவன் வீட்டை விட்டு வெளியேறிய உடனேயே உங்களுடைய நல்லவைகள் அனைத்தும் விலகி விட்டன. முதலில் அவனை வீட்டிற்கு அழைத்து வர முயற்சியுங்கள் என்றார். பிராமணரும் உடனடியாகத் தன் பிள்ளையைத் தேடிக் கண்டு பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார். ஐத்ரேயன் வீட்டிற்குள் நுழைந்து விஸ்வம் என்று கூறியதும் அவனுடைய இரு சகோதரர்களுக்கும் பேச்சு வந்துவிட்டது. மேலும் திருடு போன பொருட்களைத் திருடர்களே திருப்பிக் கொண்டு வந்து சேர்த்து விட்டனர். விஸ்வம் என்ற வார்த்தையின் மகிமையினால் எல்லாம் நடந்தது. வேத வியாசர் மேற்கூறிய கதையைத் தன் கொள்ளுத்தாத்தாவான வசிஷ்டரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதை மனதில் கொண்டே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஆயிரம் நாமங்களில் விஸ்வத்தை முதலாக வைத்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar