ஒருவன் அவசரமாக நண்பனிடம் வந்தான். டேய்! போனமாசம் நாம் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிய பங்கு, இந்த மாசம் பத்து லட்சமாக உயர்ந்து விட்டது, என்றான். கேட்டவனுக்கு இன்ப அதிர்ச்சி. அவசர அவசரமாய் பேப்பரைப் பார்த்தான். உஹும்...நண்பன் சொன்னது பொய் என்பது தெரிந்தது. இந்த வகை பொய்கள் இனிமையான பொய்கள் வகையில் அடங்கும். ஒரு திருடன் நீதிமன்றக் கூண்டில் நின்றான். நான் திருடவே இல்லை, என சாதித்தான். சத்தியமாகத்தான் சொல்கிறாயா? என்றார் நீதிபதி. உயிருள்ளவரை நான் உண்மையே சொல்வேன், என்றான் திருடன். அவனது உறுதியான நிலைப்பாடு கண்ட நீதிபதி அவனை விடுவித்து விட்டார்.
நண்பன் ஒருவன் அவனிடம், ஏனடா பொய் சத்தியம் செய்தாய்? என்று கேட்டான். நான் உண்மையைத் தானே சொன்னேன். கூண்டில் நின்ற போது, என் கையில் ஒரு பூச்சியை பிடித்து வைத்திருந்தேன். நீதிபதி என்னிடம் கேள்வி கேட்டு முடித்ததும், பூச்சியை அழுத்திக் கொன்று விட்டேன். இப்போது சொல்! நான் சொன்னது நிஜம் தானே! இவனது உயிர் போகும் வரை என்பதை எவ்வளவு சமயோசிதமாக, பூச்சியின் உயிருடன் ஒப்பிட்டு பொய் சொன்னான் பார்த்தீர்களா! இது ஏமாற்றுப் பொய். உள்ளதை உள்ளபடி உரைப்பதே உண்மை. இந்த உண்மையை எல்லாரும் கடைபிடிக்கலாமா!