கோயிலுக்குப் போனால், அங்கே என்னென்ன நடைமுறைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். புத்தகங்களைப் படித்தோ, பெரியவர்களைப் பார்த்து பழகியோ வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், இதோ! இவனுக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும். கோயிலுக்கே போகாத ஒருவன், அன்று ஏதோ கஷ்டம் வந்ததால் சாமியிடம் போய் சொல்வோமே என கோயிலுக்குப் போனான். அர்ச்சகர், பூஜை காட்டி கற்பூர தட்டை எல்லார் முன்னாலும் நீட்டினார். எல்லாரும், அதை தொட்டு வணங்குவதைப் பார்த்து இவனும் கண்ணில் ஒற்றிக்கொண்டான். அடுத்து தீர்த்தம் வழங்கப்பட்டது. இவன் முந்தி வந்து நின்றான். தீர்த்தம் அவன் கையில் தரப்பட்டதும், அதை கை கழுவ தந்திருப்பார்களோ என நினைத்து, கழுவ முற்பட்ட வேளையில், எல்லாரும் அதைக் குடிப்பதை பார்த்து இவனும் உறிஞ்சிக்கொண்டான்.
அப்போது வாயில் ஏதோ தட்டுப்பட்டது. அது துளசி இலை. அது எப்படியோ வாய்க்குள் போய்விட்டதாக நினைத்து துப்பினான். அர்ச்சகருக்கு கோபம். அடேய்! நீ துப்புவதற்கா கோயில், என கடிந்து கொண்டார். தீர்த்தத்தில் மிதந்த துளசியை சாப்பிடலாம் என்ற அறிவு கூட அவனிடம் இல்லை. அர்ச்சகர் திட்டியதால், கீழே கிடந்த துளசியை எடுத்து, பக்கத்தில் இருந்த சுவாமி சிலையின் தலையில் வைத்தான். அர்ச்சகர் அவனை அடிக்காத குறையாக, அடேய்! நீ துப்பியதை சுவாமி தலையிலா வைக்கிறாய்! என்று கடுமையாக கடிந்து கொண்டார். அவன் அவசரமாக அதை எடுத்துக் கொண்டு வெளியேறினான். மற்ற பக்தர்கள் அவனைப் பார்த்து சிரித்தனர். அவனுக்கு அவமானமாகப் போய்விட்டது. கோயில் குறித்த சம்பிரதாயங்கள் தெரியாதவர்கள், இனியாவது தெரிந்து கொள்ள வேண்டும்.