ஒரு சாமியாரிடம் மனநிம்மதிக்கு வழிகேட்டு ஏராளமான மக்கள் ஆலோசனை கேட்டு வந்தனர். அவர்களின் வரிசை மிக நீண்டு இருந்தது. தன்னை தேடி வருபவர்கள் வெயிலிலும், மழையிலும் கஷ்டப்படுகிறார்ளே! இவர்கள் நிற்க வசதியாக கூடாரம் அமைக்கலாமே என்று சாமியார் நினைத்தார். ஆனால், அதற்கான பணவசதி இல்லை. அந்நாட்டு மன்னரிடம், அவர் உதவி கேட்பதற்காக சென்றார். அப்போது மன்னர் கடவுளை வணங்கிக் கொண்டிருந்தார். பூஜையறைக்கு வெளியே காத்திருந்த சாமியாரின் காதில், மன்னரின் பிரார்த்தனை கேட்டது. இறைவா! நீ எனக்கு இன்னும் ராஜ்யங்களைக் கொடு, மேலும் செல்வத்தை வாரி வழங்கு. நவமணிகளும், தங்கமும் மேலும் குவிய வேண்டும், என்று அவர் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.
சாமியார் கிளம்பவும், மன்னர் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. ஐயா! ஏன் கிளம்பி விட்டீர்கள்! என்னைக் காண வந்துவிட்டு, ஏதும் பேசாமல் திரும்பக் காரணம் என்ன? என்றார் மன்னர். மாமன்னரே! நான் என்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்க யாசகம் கேட்டு வந்தேன். நீங்களோ என்னை விட பெரிய பிச்சைக்காரர் போலும்! கடவுளிடம் என்னென்னவோ யாசகம் கேட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்த. ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனிடம் யாசகம் கேட்பது தவறல்லவா! நானும், உங்களைப் போல கடவுளிடமே கேட்டுக் கொள்கிறேன், என சொல்லிவிட்டு நிற்காமல் போய்விட்டார். அதிர்ந்துவிட்டார் மன்னர். இந்த போக்கிரி உலகத்தில் மனிதர்களை நம்ப முடியவில்லை. கடவுளை நம்பி இறங்கினால் எதிலும் வெற்றி பெறலாம். இதுவே, இந்த தமிழ் த்தாண்டின் சிந்தனையாக அமையட்டும்.