பணம்... பணம்... பணம்... இதைத்தவிர இந்த உலகத்தின் வாயில் வேறுவார்த்தைகளே வரவில்லை. மனிதனின் இலக்கு எது என்றால் பணம். சரி.. இந்தாண்டு பங்களா, அடுத்தாண்டு ஐந்தாறு கார்கள், அதற்கு அடுத்த ஆண்டு நினைத்ததையெல்லாம் அனுபவித்தாயிற்று! சரி... இதற்கு அடுத்த இலக்கு என்ன! தேடியதை என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசி நேரத்தில் பில்கேட்ஸ் மாதிரி ஞானோதயம் வந்து, பணத்தால் எந்த பலனையும் நான் அனுபவிக்கவில்லை, என்று வேதாந்த ஸ்டேட்மெண்ட் கொடுத்து விட்டு, இலக்கு தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க வேண்டியது தான். ஒரு ஊரில் ஒரு கஞ்சன். அரை வயிறு கஞ்சி தான் குடிப்பான். சம்பாதித்ததைக் கொண்டு ஒரு தங்க பிஸ்கட் வாங்கினான். வீட்டில் வைத்தால், திருட்டு போய் விடுமென வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்தான். அதன் பின்னும் நிம்மதியில்லை.
குழியைத் தினமும் தோண்டிப் பார்த்து தங்கக்கட்டி இருக்கிறது என்று உறுதி செய்த பின் தான் நிம்மதியடைவான். இவன் அடிக்கடி குழிதோண்டுவதை பக்கத்து வீட்டுக்காரன் கவனித்துக் கொண்டே இருந்தான். கஞ்சன் வெளியே சென்ற நேரம் பார்த்து, அவன் குழியைத் தோண்டி தங்க கட்டியுடன் ஊரை விட்டே ஓடிவிட்டான். தங்கம் காணாமல் போனதை அறிந்த அவன், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பினான். அப்போது ஒருபெரியவர் வந்து நடந்ததை விசாரித்தார். அடேய்! முட்டாளே! ஒரு செங்கல்லை எடு. அந்தக் குழியில் போட்டு மூடு. தினமும் அதைத் தோண்டிப்பார். பிறகு மூடு, என்று சிரித்தபடியே சொல்லி விட்டு போய் விட்டார். ஆம்... அவர் சொன்னது சரிதானே! ஒன்று, தங்கத்தை விற்று அவன் சாப்பிட்டிருக்க வேண்டும், அல்லது நாலு பேருக்கு கொடுத்து புண்ணியத்தை சம்பாதித்திருக்க வேண்டும். இப்போ... யாரோ ஒருத்தன் கைக்கு அவன் உழைப்பெல்லாம் போய்விட்டதே! பணம் வாழ்க்கைக்கு தேவை தான். ஆனால், சம்பாத்தியத்திற்கு ஒரு எல்லை வைத்துக் கொள்ளுங்கள். நிம்மதியாக இருங்கள்.