Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பித்தனாக வந்தார்... அருள் புரிந்தார்!
 
பக்தி கதைகள்
பித்தனாக வந்தார்... அருள் புரிந்தார்!

வடதேசத்தில் பதரி என்ற அழகிய பட்டணத்தை பிரம்மணி என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆட்சிபுரிந்து வந்தான். காலப்போக்கில் அவன் மனம் மாறி அரசையோ குடிமக்களையோ கவனிக்காமல், அந்தப்புரத்தில் சிற்றின்பக் களியாட்டங்களிலேயே கிடந்து உழன்றான். ஒரு நாள் அரண்மனை மேல்மாடத்திலிருந்து அரசனும் அரசியும் பழங்களைத் தின்று தோல்களை கீழே வீதியில் வீசிக்கொண்டிருந்தனர். அப்போது பித்தனைப் போல் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்த பனகர் என்ற சாது அந்தப் பழத்தோல்களைப் பொறுக்கித் தின்றார். இதைக் கண்ட அரசி பதற்றத்துடன், நம் அரண்மனைக்குள் யாரோ ஒரு பைத்தியக்காரன் புகுந்து, நாம் எறிந்த பழத்தோலை எடுத்துத் தின்கிறான். காவலைக் கடந்து எப்படி இவன் உள்ளே வந்தான்? என்று கத்தினாள். உடன் அரசன் ஆட்களை அழைத்தான். காவலர்கள் ஓடிவந்து பித்தனான பனகரை அடித்து உதைத்து அரசர்முன் கொண்டுபோய் நிறுத்தினர். அடி உதை வாங்கிய பனகர் கலகல வென்று வாய்விட்டுச் சிரித்தார். இதைக் கண்ட அரசன், அடிபட்டவன் அழுவதற்குப் பதிலாகச் சிரிக்கிறானே ! என்னவாயிற்று இவனுக்கு? என்று எண்ணியபடியே அவனைத் தன்னருகே அழைத்தார். பித்தனான பனகர் அரசன் அருகே வந்து நின்றார். நீ சிரித்ததற்கான காரணம் என்ன? என்று அரசன் கேட்க, அதற்கு பனகர், தோலைத் தின்ற எனக்கே இத்தனை அடிகள் கிடைக்குமானால், பழத்தையே தின்னும் உனக்கு எத்தகைய தண்டனை கிடைக்குமோ என்று எண்ணிப் பார்த்தேன். அதனால் சிரிப்பு வந்தது என்று கூறி, மீண்டும் சிரித்தார். இதைக் கேட்ட அரசன் பிரம்மணி திடுக்கிட்டான். ஒருகணம் சிந்தித்தான். நாட்டையாளும் அரசன் மகாவிஷ்ணுவின் அம்சம் என்பார்கள். துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்யவேண்டியது அரசனின் கடமை. அப்படியிருக்க, காரண காரியங்களை ஆராயாமல் கோபம் கொண்டது மிகவும் பிழையானது. குடிமக்களிடம் அன்போடும் சாந்தமாயும் பழக வேண்டியது அரசனின் கடமைகளுள் ஒன்று. அரச நீதியை மறந்ததால், தெய்வ பக்தியும் இல்லாமல் போயிற்று என்றெண்ணிய அரசனுக்கு ஞானோதயம் உண்டாயிற்று.

உடன் அந்தப்புரத்தை மறந்தான். அரண்மனையைத் துறந்தான். இறைவனது திருப்பணிக்கே தம்மை முழுவதுமாக அர்ப்பணம் செய்துகொண்டான். துறவிக்கோலம் பூண்டான். பண்டரிபுரம் செல்லும் பக்தர்கள் திருக்கூட்டம் ஒன்று அவ்வூரின் வழியே சென்றது. அரசன் பிரம்மணியும் அவர்களுடன் புறப்பட்டான். பக்தர்களோடு பக்தனாக ஆனான்; ஆடினான்; பாடினான். பண்டரிநாதனின் பெருமை உணர்ந்து பக்தி வெள்ளத்தில் மூழ்கினான். பண்டரிபுரம் அடைந்த பிரம்மணி, சந்திரபாகா நதியில் நீராடி, இறைவனது திவ்ய மங்கள விக்கிரகத்தை மார்புறத் தழுவி அகமகிழ்ந்து கண்ணீர் பெருகக் கதறினான். ஹே பாண்டுரங்கா, பண்டரிநாதா, கோவிந்தா, கோபாலா, துவாரகையில் உறைபவரே, சத்சித் ஆனந்தரூபமாய் அன்பே உருவானவரே ! கோபியர்களுக்குப் பிரியமான சியாமள வண்ணா ! பித்தனாக வந்து எனக்கு உபதேசம் செய்தாய் ! என் கண்களைத் திறந்தாய் ஜனார்த்தனா ! இப்போது நீயே தஞ்சம் என்று வந்துவிட்டேன். என்னைத் தடுத்தாட்கொள்வது உன் கடமையல்லவா ! கண்ணா, உன்னையே சரணமடைகிறேன். நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று பலவாறாகத் துதித்து, அங்கேயே தியானத்தில் ஆழ்ந்துவிட்டான். நாட்கள் பல கடந்தன. பிரம்மணி ஒரே நிலையில் தியான சமாதியில் ஆழ்ந்திருந்தார். அவரின் தவத்தைக் கண்டு ஊரே வியந்து நின்றது. ஒரு நாள் நடுநிசியில் தம்மை யாரோ மலர் கொண்டு தொடுவதுபோல உணர்ந்து பிரம்மணி கண் விழித்தார், திகைத்தார். அங்கே அவரெதிரில் கோடிசூரியப் பிரகாசத்துடன் நீலமேக சியாமளனாய், பொன்முடியும் காதிலே குண்டங்களும் ஒளிவீச, புன்னகையுடன் பகவான் காட்சியளித்தார். அவரின் கைகளில் ஓலைச்சுவடி ஒன்று இருந்தது.

ஹே கிருஷ்ணா ! தேவகியின் மைந்தரே, வாசுதேவரே, சரணங்களில் அடைக்கலம் புகுந்தோரின் துக்கத்தைப் போக்கும் ஜகதீசா! நான் உங்களைச் சரணடைகின்றேன். எங்கும் நிறைந்த பரம்பொருளே ! என்னைக் காத்தருளுங்கள் என்று புலம்பிக் கண்ணீர் விட்டார் பிரம்மணி. பகவான் தம் கையிலிருந்த ஓலைச்சுவடியை பிரம்மணியிடம் அளித்து, பக்தா, வருந்தாதே ! இச்சுவடி விவேக சிந்து எனப்படும் பாராயண நூல். இதனைப் பாராயணம் செய்து மகிழ்வாயாக ! அருகிலுள்ள கல்யாணபுரமென்னும் ஊரிலே சகஜானந்த ஸ்வாமி என்ற பெயருள்ள ஒரு பெரிய மகான் இருக்கிறார். அவரிடம் சென்று அவரையே குருவாக ஏற்று, உபதேசம் பெறுவாயாக ! என்று திருவாய் மலர்ந்தருளினார். பிரம்மணியின் உள்ளம் ஆனந்தத்தால் பூரித்தது. பல பாக்களால் இறைவனைத் துதிக்கலானார். அன்றுமுதல் நாள்தோறும் விவேக சிந்து வைப் பாராயணம் செய்துவரலானார். எதிர்பாராதவிதமாக ஒரு நாள் கல்யாணபுரம் சகஜானந்த ஸ்வாமியே பண்டரிநாதனது தரிசனத்துக்காகப் பண்டரிபுரத்தை வந்தடைந்தார். அவரிடம் பகவானின் கட்டளையைத் தெரிவித்து, விவேக சிந்து ஓலைச்சுவடியையும் காண்பித்து மிகவும் பணிவுடன் வணங்கி நின்றார் பிரம்மணி. மிகவும் மகிழ்ச்சியடைந்த சகஜானந்த ஸ்வாமி, பிரம்மணியைச் சீடராக ஏற்று தாரக மந்திரத்தை உபதேசித்து, மிருத்யுஞ்சயர் என்ற தீக்ஷõ நாமத்தையும் சூட்டி ஆசிர்வாதம் செய்துவிட்டுச் சென்றார். அன்றுமுதல் பிரம்மணி அரசர் மிருத்யுஞ்சயர் என்றே அழைக்கப்பட்டார். பண்டரிபுரத்தில் ஜங்கமர்கள் எனப்படும் வீர சைவர்கள் அதிகம் வசித்துவந்தனர். அவர்களுள் ஒருவனான பவராயன் என்பவன், மிருத்யுஞ்சரது அருமை பெருமைகளைக் கண்டுணர்ந்து அவரது சீடனானான். இதையறிந்த அவர்களின் குருவான சமுச்சி என்பவர் பவராயனை ஜாதிப்பிரதிஷ்டம் செய்துவிட்டார். பவராயன், இதுபற்றி தன் குருவான மிருத்யுஞ்சரிடமும் சகஜானந்த ஸ்வாமியிடமும் முறையிட்டான். சகஜானந்த ஸ்வாமி அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று சொல்லி, அவனுக்கு ஞானோபதேசம் செய்துவைத்தார். அவர் வாக்கினைப் பின்பற்றிய பவராயனுக்கும் நன்மையே நடந்தது.

அந்த நாட்டை அப்போது ஆண்டுவந்த மிகச் சிறந்த சிவ பக்தனான காசிபதி நாள்தோறும் ஆயிரக்கணக்கான சிவனடியார்களுக்கு அன்னமளித்து வந்தான். இவ்விதம் பரிமாறி வந்த நாளில் ஒரு நாள் சிவனடியார்களான லிங்கதாரிகள் எல்லோரும் அந்த அன்னத்தை நிவேதனம் செய்யும்பொருட்டு தங்கள் கழுத்திலே அணிந்திருந்த லிங்கப்பெட்டிகளைத் திறந்தார்கள். பெட்டி லிங்கம் இல்லாமல் வெறுமையாகக் காட்சியளிக்கவே, அனைவரும் திகைத்தார்கள். இதுவரை நடந்தறியாத இச்செயல் எப்படி நடந்திருக்கும் என்று விளங்காமல் தவித்தார்கள். இதுகண்ட அரசன், நீங்கள் யாராவது பெரியோருக்கு அபசாரம் ஏதேனும் செய்திருக்க வேண்டும். அதன் விளைவுதான் இது ! எனக் கூறி, வீர சைவர்களின் தலைவரான சமுச்சியை அழைத்து விசாரித்து உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொண்டான். அடடா, எத்தகைய பெருந்தவறு செய்துவிட்டீர்கள் ! பவராயனின் குருவின் தீக்ஷõ நாமம் மிருத்யுஞ்சயர். இந்தப் பெயர் யாருடையது தெரியுமா? காலனை வென்ற காலஸம்ஹார மூர்த்தியான சிவபெருமானைத்தான் மிருத்யுஞ் சயன் என்று அழைக்கிறோம். ஸ்ரீமந் நாராயணனின் அடியார் சிவபெருமானது அற்புதமான திருநாமத்தை தீக்ஷõ ரூபமாகப் பெற்றிருப்பதிலிருந்தே அவரது சமரச பாவம் விளங்கவில்லையா? அவரைச் சென்று வணங்கி மன்னிப்பு கோருங்கள் என்றான். சிவனடியார்கள் அனைவரும் மிருத்யுஞ்சரின் இல்லத்தை நாடிச் சென்று அவரை வணங்கி வழிபட்டார்கள். மிருத்யுஞ்சரும் மனம் மகிழ்ந்து, லிங்கங்கள் தாமே வந்து சேரும். கவலைப்பட வேண்டாம் என்று கூறி ஆசிர்வதித்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar