ஒரு ஊரில் படகோட்டி ஒருவன் இருந்தான். ஊரின் நடுவே இருந்த ஆற்றைக் கடக்க மக்களுக்கு உதவுவது அவன் வேலை. அதற்காக சிறிதளவு பணம் பெற்றுக்கொள்வான். ஊரில் இருந்த முரட்டு இளைஞன் ஒருவனுக்கு படகோட்டி காசு வாங்குவது கண்ணை உறுத்தியது. படகு செலுத்துவது சுலபமான வேலை. தண்ணீரில் படகு தானாகவே மிதக்கப் போகிறது. ஏற்கெனவே நண்பர்களோடு படகில் போன அனுபவம்வேறு இருக்கிறது. என்ன இப்போது நிறையபேர் வருவார்கள். துடுப்பை, இப்படியும் அப்படியும் கொஞ்சம் வேகமாக அசைத்தால் போதும், அழகாகச் செலுத்திவிடலாம் என்று நினைத்தான். மறுநாளே ஒரு படகை வாங்கினான்.
முதன் முறையாக அவன் படகை ஓட்டப் போகிறான் என்பதால் என்ன ஆகுமோ என நினைத்து பலரும் அவனது படகில் ஏறவே தயங்கினர். பலரையும் மிரட்டி படகில் ஏற்றிக்கொண்டான் அவன். படகு புறப்பட்டது. பாதி தூரம் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஏரியின் நடுப்பகுதிக்கு வந்தபோது, காற்று சட்டென்று திசை மாறி வீசியது. அவ்வளவுதான், படகை ஓட்டிய முரடன் நிலை குலைந்து போனான். திணறினான். திகைத்தான். துடுப்பை வேகவேகமாக அசைத்தான். ஊஹூம். படகு நகர்வதற்கு பதிலாக ஒரே இடத்தில் சுற்றியது சுழன்றது. அமர்ந்திருந்தவர்களோடு படகினை ஓட்டிய முரடனும் நடுங்கினான். கொஞ்சநேரத்தில் அந்த வழியாக பழைய படகோட்டியின் படகு வந்தது. முரடனின் படகின் நிலையைப் பார்த்த அவன் உடனடியாக தன் படகை அதனருகே கொண்டுபோனான். சட்டென்று அந்தப் படகிற்குத் தாவி ஒரு சில விநாடிகளில் அதனை சரியான திசையில் திருப்பினான். அதோடு அந்தப் படகில் வேண்டாத சுமையாக ஏற்றப் பட்டிருந்த பொருட்களையும் எடுத்து தூர வீசினான். படகு தப்பியது. படகில் இருந்தவர்களும் பிழைத்தனர்.
அதன்பின் இரு படகுகளையும் தன் திறமையால் கரைசேர்த்தான் பழைய படகோட்டி. இருவரிடமுமே படகுகள் இருந்தன. இரு படகிலுமே துடுப்புகளும் உண்டு. ஆனால் ஒரு படகு மட்டும் தள்ளாடியது. படகை ஓட்டிய முரடனுக்கு அனுபவம் இல்லாதது மட்டுமல்ல வேண்டாத சுமைகள் ஏற்றப்பட்டிருந்ததும்தான் இதற்கு காரணம். எல்லோரிடமுமே தன்னம்பிக்கை என்கிற படகும், துடுப்பு ஆகிய முயற்சிகளும் இருக்கின்றன. ஆனால் அவை மட்டுமே படகைக் கரை சேர்க்க கண்டிப்பாகப் போதாது. படகில் தேவையற்ற சுமை இருக்கக் கூடாது என்பதும் முக்கியம். வெற்றிக்கரையினை எட்டத் துடிக்கும் உங்கள் மனதும் இப்படித்தான் எதிர்மறைச் சுமை ஏற்றப்படாததாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். வாழ்வில் தன்னம்பிக்கையுடன் எந்தக் காரியத்தையும் சுலபமாக முடித்து விடுவீர்கள்.