உங்கள் கடைசி வாழ்நாள் வரை, தினமும் உங்கள் பாங்க் கணக்கில் 86400 டிபாசிட் செய்யப்படுகிறது. ஆனால், அதை அன்றே செலவழித்து விட வேண்டும் என்பது தான் நிபந்தனை. தயாரா? என்று கேட்டால், என்ன சொல்வீர்கள்? போடுங்க புண்ணியவானே போடுங்க! நீங்க நல்லாயிருக்கணும், தினமும் பைவ் ஸ்டார் ஓட்டலுக்குப் போவேனே! என்பீர்கள். ஆனால், நீங்க ஆசைப்படுற மாதிரி இது கிடையாது. ஒருநாளைக்கு எத்தனை விநாடி.... 86400 விநாடி. இதை தினமும் கடவுள் நம் கணக்கில் டெபாசிட் செய்து விடுகிறார். இதில் ஒரு விநாடியைக் கூட வீணடிக்காமல் நல்ல முறையில் செலவழிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.
காலை 6 மணிக்குள் எழுந்திருத்தல், கடவுளை வணங்கி விட்டு அன்றாடப்பணிகளை மளமளவெனக் கவனித்தல், செய்யும் தொழிலை சிரத்தையாக செய்தல், மாலையில் கோயிலுக்கு செல்லுதல், பிள்ளைகளுக்கு நல்ல கதைகளைச் சொல்லுதல், அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்தல், முன்பின் தெரியாதவர்கள் என்றால் கூட அவர்கள் படும் கஷ்டத்திற்கு தீர்வு செய்தல்... இன்னும் எத்தனை எத்தனையோ நற்செயல்களைச் செய்ய வேண்டும். இந்த செயல்களுக்கு ஏற்ப, நம் கணக்கில் புண்ணியம் என்னும் வட்டி ஏறும். எவ்வளவு புண்ணியம் பெறுகிறோமோ, அதற்கேற்ப இறைவனுடைய வீட்டில் நமக்கு இடம் ஒதுக்கப்படும். ஏன்... நல்லதைச் செய்பவர்கள் அங்கேயுள்ள மாளிகையில் கூட வசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். 86400 ஐ இனியேனும், பயனுள்ள வகையில் செலவழிக்க தயாராகுங்கள். ஏனெனில், இந்தக்காலம் இறைவனால் மிச்சம் வைக்கப்படுவதில்லை. அன்றைய தினம் அன்றே கழிந்து போகும். இதை குறைக்கவும் முடியாது, கூட்டவும் முடியாது. காலம் நம் தோழன். அந்த தோழனுடன் கைகோர்க்க தயாராகுங்கள்.