குழந்தைகளைப் பார்த்து கண்ணு! இந்த மாமா மூஞ்சியைப் பாரு! குரங்கு மாதிரி இருக்குது! அவனை எட்டி உதை! என்று சில பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். பிள்ளையும் அந்த மாமாவை எட்டி உதைக்க, மாமாவும், பெற்றோரும் அகமகிழ்ந்து போகிறார்கள். ஆனால், இது நல்ல வழக்கமில்லையே! ஒரு கதையைக் கேளுங்க!ஒரு சாமியார் இரண்டு கிளிகளை வளர்த்தார். வெளியூர் செல்ல வேண்டி வந்ததால், ஒன்றை ஒரு விவசாயி வீட்டிலும், இன்னொன்றை கசாப்புக் கடைக்காரர் வீட்டிலும் ஒப்படைத்தார். விவசாயி, அந்தக் கிளிக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்தார். அது வீட்டிற்கு வருவோரை, "வருக வருக! அமர்க! சாப்பிடுக! பாலாவது குடியுங்களேன்! என்றெல்லாம் உபசரித்தது.
கசாப்புக் கடைக்காரர் அதற்கு ஒன்றுமே சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால், கடையில் ஆட்டை வெட்டு, பன்றியை வெட்டு, விலாவிலே ஓங்கி குத்து, கொத்துக்கறி பண்ணு! என்ற வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அதையே கற்றுக் கொண்டது. சாமியார் திரும்பி வந்த போது, அவை தாங்கள் கற்றவற்றை அவரிடம் கூறின. அதன்பின் கசாப்புக்கடையில் வளர்ந்த கிளிக்கு நல்லதைப் போதித்து, அதைத் திருத்துவதற்குள் சாமியாருக்கு போதும் போதுமென்றாகி விட்டது. நாம் என்ன சொல்கிறோமோ, என்ன செய்கிறோமோ, அதையே குழந்தைகளும் பின்பற்றுகிறார்கள். குழந்தைகளுக்கு இறைவனைக் குறித்த ஸ்லோகங்கள், நல்ல பாட்டு, மகான்களைக் குறித்த கதைகளைக் கற்றுக்கொடுத்தால் அவர்களும் நல்லவர்களாக வளர்வார்கள். மொத்தத்தில், பரியவர்கள் திருந்தினால், சிறியவர்கள் தானாக திருந்தி விடுவார்கள்.