பரமேஸ்வரி தான் பதியோடு அந்தரங்கமாய் இருக்கும் இடத்துக்கு வேற்று ஆடவர்கள் வரகூடாதென்று எண்ணினாள். அந்த இடத்துக்கு வரும் ஆண்களெல்லாம் பெண்களாகிவிடுவர் என ஆணை பிறப்பித்தாள் அரக்கரச்சு என்ற வானர ராஜன், இது தெரியாமல் அந்தத் தடாகத்தில் நீராடினான். குளித்து எழுந்தவன், தன் வடிவம் மங்கையாக மாறியிருப்பது கண்டு திடுக்கிட்டான். அந்த நிலையில் கிஷ்கிந்தை செல்ல விரும்பாமல், விம்மி விம்மி அழுதான், தன்னை ஆணாக மாற்றும்படி. தெய்வங்களிடம் பிரார்த்தித்தான். அந்த வேண்டுதலைக் கேட்டு இந்திரன் பெய்கைக் கரைக்கு வந்தான். அரக்கரச்சுவின் அழகைக் கண்டு மயங்கினான். உடனே அடையமுடியுமா? பேரழகியை சமாதானம் செய்தான்.
நங்கையே! பெண் பிறப்பை ஏன் இழிவாக எண்ணுகிறாய்? ராஜாதிராஜனாக இருந்தாலும் ஒரு பாவையிடம் தோற்று விடுகின்றனர் என்பதை நீ அறியாயா? தாய்மை என்ற பாக்கியம் பெண்டிருக்கே உண்டு. உன் பெண் பிறப்புக்குப் பெருமை உண்டு. உன் பெண் பிறப்புக்குப் பெருமையளிக்கும்படி எனக்கு ஒரு மைந்தனைப் பெற்றுக்கொடு என்று கெஞ்சினான்.ஒரு குடில் கட்டிக்கொடுத்து உணவும், உடையும் தந்து அவளோடு சில நாள் வாழ்ந்தான். அதன் பயனாக வாலியைப் பெற்றெடுத்தாள் அரக்கரச்சு.
சில தினங்கள் சென்றன. அவள் அழகில் மயங்கி சூரியன் அவளை நெருங்கினான், மகாவிஷ்ணு ராவண வதம் செய்ய, தசரத புத்திராய் அவதரிக்கப் போகிறார். சலந்திராசுரனின் பார்யை பிருந்தையை ஏமாற்ற இரு குரங்குகளைத் தோற்றுவித்தார் திருமால். மோசம் போன பிருந்தை எந்த வானரங்களை வைத்து என் பதி மடிந்துபோனதாக நம்ப வைத்தீர்களோ, அந்த வானரக் கூட்டங்களையே நம்பி, அசுரப்படைகளை வெல்ல அழைத்துச் செல்லப் போகிறீர்கள். என்று சபித்திருக்கிறாள். ஸ்ரீராமபிரானுக்கு உதவ, என் அம்சமே உதவும், அதனால், என் வாரிசாக வாலிக்கு ஒரு தம்பியை அளிப்பாயாக! அதற்குப் பிரதியாக பிரம்மமந்திரத்தை உபதேசிக்கிறேன். குழந்தை பிறந்தபின் நான்முகனைக் குறித்துத் தவம் செய்து, ஆண் உருவத்தை அடையலாம் என்று சொன்னான். அப்படிப் பிறந்தவன் சுக்ரிவன். சுக்ரீவனைப் பெற்றபின், அரக்கரசு தவமியற்றி பிரம்மதரிசனம் பெற்று, ஆண்வடிவை எய்தினான். தனக்கு அந்திம காலம் வந்ததும் வாலிக்கு முடிசூட்டினான் அரக்கரசு. விஷயம் தெரியாமல் எதிலும் பிரவேசிக்கக்கூடாது. அதனால், வீண் சிக்கல்களையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடும் என்று உணர்த்துகிறது இந்தக் கதை.