ஒரு சமயம் துறவி ஒருவர் தவம் செய்து வந்தார். அன்று அவர் தியானத்திற்கு அமரும் இடத்திலிருந்து சற்று தூரத்தில், புல்தரையில் ஒரு வைர மோதிரம் இருந்ததைப் பார்த்தார். வைரமோதிரம் மீது அவருக்கு அறவே பற்றில்லை. அவர் கண்மூடி தியானம் செய்ய ஆரம்பித்தார். அப்போது, அவர் அருகில் புல்தரைப் பக்கம் ஏதோ சப்தம் கேட்டது. துறவி, ஒருவர் வருகிறார். அவர் அந்த வைர மோதிரத்தை எடுத்துக்கொள்ளட்டும்! என்று நினைத்தார். காலடியோசை சற்று தூரத்தில் கேட்டபோது, சென்றுவிட்டார்! என்று நினைத்து, கண் திறந்து பார்த்தால் சென்றவர் மனிதர் இல்லை - அது ஒரு மாடு! இவ்விதம் காலடியோசை கேட்டபோதெல்லாம் துறவி, வைர மோதிரத்தை எடுத்துக் கொள்ளட்டும்! என்று எண்ணினார்.
வந்தவர் சென்றுவிட்டதை ஊகித்து, மோதிரத்தை எடுத்துக் கொண்டாரா? என்று பார்த்தார். இந்த அனுபவம் துறவிக்கு முதல் நாளும் இரண்டாம் நாளும் நான்கைந்து முறை ஏற்பட்டது. யாரும் வைரமோதிரத்தை எடுக்காமல் சென்றனர். மூன்றாம் நாள் துறவி, ஒரு வண்ணானின் காலடிச் சப்தம் கேட்டு கண்திறந்து பார்த்தார். முதுகில் துணி மூட்டையுடன் வந்து கொண்டிருந்த வண்ணானிடம் துறவி, அந்த வைரமோதிரத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்! என்றார். அதற்கு வண்ணான் கம்பீரமாக, நான் வரும் வழியில், கடந்த மூன்று நாட்களாக அந்த வைரமோதிரத்தைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். உழைக்காமல் கிடைக்கிற இந்த வைரமோதிரம் எனக்கு எதற்கு? நான் உழைத்துப் பெறாதது எதுவும் எனக்குத் தேவையில்லை என்று சொன்னார். உழைப்பின் அருமையே அருமை!