ஒரு வியாபாரி வியாபாரத்திற்குச் செல்லும் வழியில் ஒரு துறவியைக் கண்டார். அவருடைய மலர்ந்த முகம் அவரைக் கவர்ந்தது. துறவி கண் மூடி அமர்ந்திருந்தார். அவரின் திருவோட்டில் ஒரு நாணயத்தை சப்தமில்லாமல் வைத்து விட்டு புறப்பட்டார். அன்று முழுவதும் எல்லாம் நன்மையாக அமைந்தது. வியாபாரம் மளமளவென நடந்தது. வரவேண்டிய பாக்கி பணம் தானாகவே கிடைத்தது. இதற்கு துறவியின் சக்தி தான் காரணம் என்று எண்ணிக் கொண்டான். மறுநாளும் அதே துறவியை தரிசிக்க சென்றான். சத்தமில்லாமல் காசை திருவோட்டில் இட்டான். வியாபாரம் படுஜோர். இப்படியே பலநாட்கள் தொடர்ந்தது. வருமானம் பெருகியது. பணக்காரராகி விட்டார். பணம் சேர்ந்தாலும், தன் வசதிக்கு காரணமாக கருதிய துறவியை அவர் மறக்கவில்லை. துறவியும், வியாபாரியைக் காணும் நேரமெல்லாம் மெல்லிய புன்னகை செய்வார். வியாபாரியும் வணக்கம் தெரிவித்து விட்டு நாணயத்தை ஓட்டில் இடுவார்.
ஒருமுறை கூட இருவரும் பேசியதில்லை. ஒருநாள் வியாபாரி வரும் போது, துறவியைக் காணவில்லை. அவரது முகம் வாடிப் போனது. அக்கம் பக்கத்தில் அவரைப் பற்றி விசாரித்தார். ஒருவருக்கும் தெரியவில்லை. சோர்வுடன் நடந்தார். வழியில் அவர் கண்ட காட்சி ஆச்சரியத்தைத் தந்தது. துறவி, இன்னொரு வயதான துறவியின் காலில் விழுந்து ஆசி பெறுவதைப் பார்த்தார். வியாபாரிக்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை. துறவி வயதான தன் குருவிடம், குருவே! உங்கள் ஆசியால் எல்லாம் நன்றாக நடக்கிறது, என்று சொல்லி மகிழ்ந்தார். இதைக் கேட்ட வியாபாரி வருந்தினார். இவ்வளவு நாளாக இந்த வயதான குருவைப் பார்க்காமல் காலத்தை வீணாக்கி விட்டோமே! என வருந்தினான். சீடரான இளைய துறவி தன் இருப்பிடம் புறப்பட்டார். வியாபாரியைத் தாண்டி அவர் சென்றார். ஆனால், வியாபாரி அவரை கண்டு கொள்ளவில்லை. இந்த அபூர்வ சக்தி யாரிடமிருந்து இவருக்கு வந்தது என்பது தெரிந்த பிறகு, இவரை ஏன் வணங்க வேண்டும்?என நினைத்தார்.
மேலும், சின்ன துறவிக்கு சில்லரைக்காசைப் போட்டதற்கே வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்தது என்றால், வயதான துறவிக்கு தங்கக்காசைத் திருவோட்டில் இட்டால் கோடீஸ்வரனாகி விடலாமே என்று கணக்கு போட்டார். மறுநாள், தங்கநாணயத்துடன் புறப்பட்டார். திருவோட்டில் தங்கநாணயத்தை போட்டு வணங்கினார். வியாபாரத்தைக் கவனிக்க கடைக்கு புறப்பட்டார். அன்று அரசு அதிகாரிகள் வரிஏய்ப்பு செய்ததாகக் கூறி சோதனைக்கு வந்தனர். அதனால், வியாபாரமே நடக்கவில்லை. மனம் வருந்திய வியாபாரி, தப்புக்கணக்கு போட்டு விட்டேனே! நஷ்டம் வந்து விட்டதே!, என வருந்தினார். வயதான துறவியிடம் சென்று நடந்ததைக் கூறினார். அவரோ, அன்பு கொடுத்தது! ஆசை கெடுத்தது! என்று சொல்லிச் சிரித்தார். மகனே! நீ அந்த துறவிக்கு அன்பினால் காசு கொடுத்தாய். அதுவே, உனக்கு பன்மடங்காக திரும்ப கிடைத்தது. இப்போதோ, பேராசையால் உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டாய். கடவுளும் உன் தகுதிக்கேற்ப நஷ்டத்தை பரிசாக அளித்து விட்டார். அன்பின் உன்னதத்தை இனியாவது உணர்ந்து கொள், என்றார். வியாபாரி இரண்டு துறவி களிடமும் மன்னிப்பு கேட்டார்.