அரண்மனையில் திருடிய நகைகளுடன் தப்பி ஓடிய திருடர்களைக் காவலர்கள் விரட்டினர். காட்டுக்குள் நுழைந்த அவர்கள், மகரிஷி ஒருவர் கண்மூடி தியானத்தில் இருப்பதைக் கண்டனர். அவரது பெயர் மாண்டவ்யர். அவரருகே நகையைப் போட்டு விட்டு ஓரிடத்தில் மறைந்து கொண்டனர். இருப்பினும், காவலர்கள் அவர்களைப் பிடித்து விட்டனர். மகரிஷி அருகே நகைகள் கிடந்ததால், அவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அனைவரையும் கழுமரத்தில் ஏற்றிக் கொல்ல உத்தரவிட்டான் அந்நாட்டு மன்னன். ஊசியான மரத்தில் ஒவ்வொருவரையும் நுழைத்துக் கொல்லும் கொடிய தண்டனையே கழுமரம் ஏறுதல் என்பது. மகரிஷியையும் அவ்வாறே செய்த போது, அவரது உயிர் மட்டும் போகவில்லை. தவறு செய்துவிட்டோம் என உணர்ந்த மன்னன், அவரை விடுவித்து சிகிச்சை அளித்தான்.
செய்யாத தவறுக்கு ஏன் தண்டனை கிடைத்தது என்பது பற்றி அறிய நீதிதேவனாகிய எமதர்மராஜாவைச் சந்தித்தார் மகரிஷி. ரிஷியே! முற்பிறவியில் நீர் தும்பி ஒன்றின் வாலில் நூலைக்கட்டி, ஊசியால் குத்தி துன்புறுத்தினீர். அதன் பலனை இப்போது அனுபவித்தீர், என்றான் எமதர்மன். அடே எமதர்மா! அது அறியாத வயதில் செய்த தவறு. குழந்தைகள் தவறு செய்தால் தண்டனை ஏது! நீ நியாய சாஸ்திரத்தைத் தெளிவாகக் கற்கவில்லை. எனவே பூலோகத்தில் மனிதனாகப் பிற. அங்கு போய் நியாய தர்மங்களை தெரிந்து கொண்டு வா! என்று சாபமிட்டார். எமதர்மனும் பூலோகத்தில் பிறந்தான். அவரே விதுரர். வியாசருக்கும், வேலைக்காரியான மதுரிக்கும் பிறந்தவர். இவரது சகோதரர்களே பாண்டு, திருதராஷ்டிரன் ஆகியோர். மகாபாரதத்தில், துரியோதனின் அட்டூழியங்களைக் கண்டித்து நியாயத்தின் சின்னமாக விளங்கியவர். கிருஷ்ண பக்தராகவும் விளங்கினார்.