சீதையைக் கடத்தியது யார் என்றால் ராவணன் என குழந்தை கூட பதில் அளிக்கும். ஆனால், அவளை முதலில் கடத்தியவன் விராதகன் என்ற அசுரன் தான். இவன் ஒரு கந்தர்வன். (தேவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களே கந்தர்வர்கள்). குபேரனின் வேலைக்காரன். பணிநேரத்தில் மது மயக்கத்தில் கிடந்ததால், அரக்கனாக மாற சபிக்கப் பட்டான். விஷ்ணு, ராமவதாரம் எடுக்கும் போது, அவரது திருவடி பட்டு மீண்டும் கந்தர்வனாவாய், என்று குபேரன் சாப விமோசனமும் அளித்தார். அவன், கிளிஞ்சகன் என்ற அசுரனுக்கு மகனாகப் பிறந்து, உயிர்களைக் கொன்று தின்னும் அசுரனானான்.
ராமலட்சுமணர் சீதையோடு காட்டுக்கு வந்தபோது, சீதையை அவன் தன் விமானத்தில் கடத்தி விட்டான். அவனை எதிர்த்து ராமலட்சுமணர் போரிட்டனர். விமானத்தில் இருந்து கீழே சோர்ந்து விழுந்த விராதகனை குழி தோண்டி புதைக்க ராமலட்சுமணர் ஏற்பாடு செய்தனர். தன் காலால் அவனைப் புதை குழியில் தள்ள. அந்த திருவடி ஸ்பரிசத்தால் அவன் அழகிய கந்தர்வனாக மாறினான். நடந்ததை சொல்லி மன்னிப்பு கோரினான். ராமபிரான் அவனை ஆசிர்வதித்து அனுப்பினார்.