ஞாயிறன்று காலை டிவியில் கிரிக்கெட் பார்க்கத்தொடங்கினான் ராமு. மதியம் மூன்றாகி விட்டது. ஆனாலும் அவன் இடத்தை விட்டு அசையவில்லை. ராமு! மதியம் சாப்பிடாமல் கூட, என்ன டிவிவேண்டிக் கிடக்கு? என்றாள் அம்மா வேகமாக. அப்பாவும் சேர்ந்து கொண்டார். ராமு! கொஞ்சநேரம் படிக்கக் கூடாதா?, என்று மென்மையாகக் கேட்டார். படிச்சா என்னப்பா கிடைக்கும்?, என்றான் கிண்டலாக.
படிச்சா தானே நல்ல வேலை கிடைக்கும். வேலைக்குப் போனா தான் நிறைய சம் பாதிக்கலாம், என்றார். சம்பாதித்தா என்னாகும்? என்று எதிர்க்கேள்வி கேட்டான். சம்பாதித்தா தான் நாலு பேர் மெச்சும்படியா குடும்பம் நடத்தலாம். உன் பிள்ளைகளை கான்வென்டில படிக்க வைக்கலாம். பெரிய பங்களா கட்டி குடியேறலாம். அறிவுக்கு வேலை கொடு ராமு! பொழுது போக்குக்காக விளையாடலாம். ஆனால், வாழ்க்கையோடு விளையாடாதே! என்று எச்சரித்தார் தந்தை. ராமு சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.