மகனின் நிலை கண்டு வருந்தினார் கூடலூர் வேதநாயகம் பிள்ளை. அவரது மகனுக்கு நீண்டநாட்களாக உடல் நலமில்லை. வைத்தியத்திற்கு நோய் கட்டுப்படவில்லை. அவர் வள்ளலாரின் பக்தர். வள்ளலாருக்கு மருத்துவ ஞானம் உண்டு என்பதும், அவர் அதிசயம் புரிந்தே நோய்களைக் குணமாக்குபவர் என்ற விபரமும் கூடலூராருக்கு தெரியாது. தெரிந்திருந்தால் வடலூருக்கே அவரை அழைத்துக் கொண்டு போயிருக்க மாட்டாரா என்ன! அவர் கவலையில் ஆழ்ந்திருந்த நேரத்தில், வள்ளலாரே அங்கு வந்து விட்டார். ""ஆ...வள்ளலார் என் வீட்டிற்கு வந்திருக்கிறாரா? கூடலூராரால் பேசக்கூட முடியவில்லை. அவரை அன்புடன் வரவேற்றார். ""உன் மகன் எங்கே! என்று கேட்டபடியே, அவன் படுத்திருந்த அறைக்கு வந்தார் வள்ளலார்.
அவனது நிலையைச் சொல்லி கதறி அழுதார் வேதநாயகம் பிள்ளை. ""கவலைப்படாதே! என்ற வள்ளலார், திருநீறை எடுத்து அவன் உடலில் பூசினார். படுத்த படுக்கையாக கிடந்தவன் எழுந்து அமர்ந்தான். நோய் வந்த தடமே தெரியவில்லை. வேதநாயகம் பிள்ளை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரிடம் விடை பெற்றார் வள்ளலார். மறுநாள், வள்ளலார் தங்கியிருந்த வடலூருக்கு இருவரும் கிளம்பினர். அங்கிருந்தோரிடம் வள்ளலார் தங்கள் இல்லத்துக்கே வந்து, அதிசயம் நிகழ்த்தியதைக் கூறினர். அவர்கள் அதிர்ந்தார்கள். ""என்ன சொல்கிறீர்கள்! நேற்று வள்ளலார் வடலூரில் தான் தங்கியிருந்தார். உங்கள் இல்லத்துக்கு வரவில்லையே! என்றதும், பிள்ளை வள்ளலாரிடம் ஓடினார். ""அது இறையருளால் நிகழ்ந்த விஷயம். அதை மற்றவர்களிடம் சொல்லி பெரிதுபடுத்தாதே என்று தன்னடக்கத்துடன் சொல்லி, அவரை ஆசிர்வதித்தார் வள்ளலார்.