பாரதப் போர் முடிந்தது. வெற்றிபெற்ற பாண்டவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். தங்களின் ஆற்றலை அனைத்து நாடுகளிலும் பரவச் செய்ய எண்ணி, அசுவமேத யாகம் தொடங்கினர். யாக சாலையிலிருந்து குதிரை புறப்பட்டது. அதற்குப் பாதுகாப்பாக பாண்டவப் படைவீரர்கள் சென்றனர். அந்தக் குதிரையின் நெற்றியில் கட்டப்பட்டிருந்த தங்கப் பட்டயத்தில் அது தருமனின் அசுவமேத யாகக் குதிரை அந்தக் குதிரையை எந்த நாட்டு மன்னராவது பிடித்துக் கட்டினால், பாண்டவர்களுடன் போரிட வேண்டியிருக்கும் அப்படிப் போரிட்டு இழப்பு ஏற்படாதிருக்க வேண்டுமானால் பாண்டவர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.
பாண்டவர்கள் பெரும் வீரர்கள். மேலும் அவர்களது உறவு நட்பு நாடுகளின் மன்னர்களும் தங்களின் படைகளுடன் பாண்டவர்களுக்குத் துணையாக நின்று போரிட்டனர். அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாத நிலை ஏற்படும் போதுதான் அர்ச்சுனன் களத்தில் புகுவான். ஆற்றல்மிக்க அரச்சுனனை எதிர்க்கும் மன்னர் வீழ்வார். இப்படியே அசுவமேத குதிரை ஒவ்வொரு நாடாகக் கடந்து சென்றுகொண்டிருந்தது. ஓரிடத்தில் மெழுமையான பயிர்கள் நிறைந்த நிலத்தில் புகுந்து குதிரை அழித்தபோது, அங்கிருந்த காவலர்கள் அந்தக் குதிரையைப் பிடித்துக் கட்டினர். அவ்வளவுதான்! போர் தொடங்கியது. அந்நாட்டு மன்னன் பப்ருவாகன். அர்ச்சுனனுக்கும் சித்ராங்கதைக்கும் பிறந்தவன். எதிர்ப்பது தந்தையெனினும் போர் செய்வதே க்ஷத்திரிய தர்மம் என்று துணிந்துசென்றான். அவனை எதிர்த்துப் போரிட்ட பெரும்வீரர்கள் திணறினர். பாண்டவப் படை சிதறிப் பின்வாங்கியது. அரச்சுனன், ஆவேசமாகப் போர்க்களம் சென்றான்.
பப்ருவாகனைப் பார்த்த அர்ச்சுனன் சிறுவனே! இதோ ஒரே அம்பில் உன்னை வீழ்த்துகிறேன் என்று சொல்லி, காண்டீபத்தை வளைத்து, சக்தி வாய்ந்த அம்புகளை எய்தான். அவை அனைத்துமே பப்ருவாகனின் அம்புகளால் வீழ்த்தப்பட்டன. ஆச்சரியமான அதி உக்கிரமான போர்! ஒரு கட்டத்தில், பப்ருவாகன் எய்த சக்தி வாய்ந்த அம்பு ஒன்று அர்ச்சுனனை நோக்கி சீறிப் பாய்ந்தது! அதை வீழ்த்திட அர்ச்சுனனால் முடியவில்லை. அர்ச்சுனன், உயிரற்று வீழ்ந்தான். அனைவரும் அதிர்ந்தார்கள். பாண்டவர்களும் ஆபத்தில் உதவும் கண்ணன் ஓடி வந்தான். இறந்துகிடந்த அர்ச்சுனனை உயிர்ப்பித்தான். பீஷ்ம பிதாமகரை தவறான முறையில் வீழ்த்தியதால் உண்டான பாவம் நீங்கவே, அர்ச்சுனன் தன் மகன் பப்ருவாகன் கையாலே மரணிக்க நேர்ந்தது. தவிர, தன் மகனை அர்ஜூனன் கொன்றானே என்று நினைத்த பீஷ்மரின் அன்னையான கங்காதேவியின் வருத் தமும் நீங்கியது. இனி அர்ஜூனனுக்கு ஒன்றுமில்லை. என்றான் கண்ணன்.