நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தாதவன், காலம் முழுவதும் வாழ்க்கையில் கரை சேர மாட்டான். கந்தன் என்ற சீடன் குருவிடம் பயிற்சி எடுத்தான். பயிற்சி முடிந்ததும், அவனுக்கு தீட்சை அளிக்க அவர் விரும்பினார். தயங்கிய சீடன்,சுவாமி! தீட்சை பெற்றவன் இல்லறத்தில் ஈடுபடக்கூடாது. எனக்கோ இளவயது. இல்லறக்கடமையை நிறைவேற்றி விட்டு, வயதான காலத்தில் இதைப் பார்த்துக் கொள்ளலாமே, என சொல்லிவிட்டு ஊருக்கு போய் விட்டான். திருமணம் செய்தான். மகன் பிறந்தான். அவனும் பெரியவனாகி திருமணம் செய்தான். அதன்பிறகு, அப்பாவை கவனிக்க மறுத்துவிட்டான். மனமுடைந்த கந்தன் மறுபடியும் குருவிடம் வந்தான்.
சுவாமி! இல்லறம் இனி வேண்டாம். தீட்சை கொடுங்கள், என்றான். குருநாதர் அவனை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். கடலையே பார்த்துக் கொண்டிருந்தார். சீடன் அவரிடம், எனக்கு தீட்சை தருவதாகச் சொல்லி விட்டு, அலைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே! என்றான் பொறுமையிழந்து! குருநாதர் அவனைப் பார்த்து சிரித்தார். அலைகள் ஓயட்டும். ஓய்ந்த பின் கடலில் குளித்து விட்டு தீட்சை கொடுக்கலாம் என நினைக்கிறேன், என்றார். சீடன் புரிந்து கொண்டு தலை குனிந்தான். நல்லநேரம் தேடி வரும் போது, அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவறவிட்டவனின் கதி இது தான்!