சீதையை திருமணம் செய்யும் முன், ராமன் வில்லொடித்த சத்தம், மிதிலை நகரெங்கும் கேட்டது. அப்போது சீதையின் மனம் துடித்தது. ஒடித்தவனும், தான் கண்ட ராமனும் வேறு வேறானவர்களாக இருந்துவிட்டால் என்று எண்ணியதும் ஒரு கணம் மூச்சற்றுப் போனாள். பதட்டம் தொற்றிக் கொண்டது. நீலமாலை என்னும் சேடிப்பெண் சீதையிடம் ஓடி வந்தாள். மகிழ்ச்சியில் ஆடிப்பாடினாள். வில்லொடித்த தசரதன் மைந்தனைப் புகழ்ந்தாள். அவர் பெயர் ராமன் என்று அவள் சொன்னதும் தான், சீதைக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.
அவள் சொன்னாலும், தானே நேரில் ராமனைக் கண்டால் தான் சந்தேகம் தீரும் என்ற எண்ணம் அவளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால், அதற்கான சந்தர்ப்பம் மணமேடையில் தான் வாய்த்தது. மணமகளாக வந்த சீதை, மணமகனின் அருகில் அமர்ந்தாள். வளையலைச்சரி செய்வதுபோல, ஓரக்கண்ணால்பார்த்தாள். வெட்கம் தொற்றிக் கொண்டது. ராமனும் தன் அன்பை வெளிப்படுத்தினார். அப்போதுசீதை அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.